வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (02/11/2018)

கடைசி தொடர்பு:14:40 (02/11/2018)

`மாணவர்கள் கற்க வேண்டிய 4`சி’-க்கள்!’ - முகேஷ் அம்பானி அட்வைஸ்

இந்தியாவில் நிறைந்திருக்கும் இளைஞர்கள் பட்டாளமே திறமையின் அடையாளம். ஒரு பில்லியன் இளம் மூளைகளை எல்லாம் ஒருங்கிணைத்துவிட்டால் இந்தியாவின் வளர்ச்சி கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்

`மாணவர்கள் கற்க வேண்டிய 4`சி’-க்கள்!’ - முகேஷ் அம்பானி அட்வைஸ்

``மாணவர்களுக்கு முக்கியமாக போதிக்கவேண்டிய 4 `சி’-க்கள் உள்ளன. அவற்றைக் கற்றுக்கொடுத்தால், எதிர்கால உலகம் இந்தியர்களுக்கானது” என்கிறார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. 

முகேஷ் அம்பானி

புதுடெல்லியில் நடந்துவரும் 24-வது மொபைல் கம்யூனிகேஷன் கருத்தரங்கில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில், ``அடுத்த 20 ஆண்டில்,  இந்தியா, பொருளாதாரத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து, உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும்” என்றும் கூறியுள்ளார்.

``மூன்று தொழில் புரட்சிகளின்போது, இந்தியாவின் பங்களிப்பு பெரியதாக இல்லை. ஆனால், நான்காவது தொழிற்புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பு அதிகம். தற்போது, இந்தியாவில் இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்களால்தான் சர்வதேச அளவில் பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் மூன்று டிரில்லியன் டாலர் அளவுக்கு நெருங்கிவருகிறது. 

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி என்பது, ஒப்பிட முடியாத அளவுக்கும், முன்னெப்பதும் இல்லாத அளவுக்கும் இருக்கிறது. மொபைல் தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தியும், குறிப்பாக அதிகளவில் டேட்டாவைப் பயன்படுத்தியும் வருகிறோம். தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள், பல்வேறு ஐடியாக்களைச் செயல்படுத்தி வாழ்க்கையை வளமுள்ளதாக மாற்றுகின்றனர்.  

பிராட்பேண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி க்ளவுட் கம்பியூட்டிங், நெட்வொர்க் டெக்னாலஜீஸ் பிரிவுகளில் பல தொழில்முனைவோர்கள் உருவாகி சர்வதேச அளவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளனர். தொழில்முனைவோர்களுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் மிகுந்த வளத்தையும் வளர்ச்சியையும் வழங்கும் வகையிலும் டிஜிட்டல் டெக்னாலஜி பரந்திருக்கிறது. நேற்றைய இந்தியாவைவிட இன்றைய இந்தியா மாற்றங்களால் நிறைந்திருக்கிறது. நாளைய இந்தியா இன்னும் சிறப்பாகவே இருக்கும். இந்தியாவில் நிறைந்திருக்கும் இளைஞர்கள் பட்டாளமே, வெற்றியின் திறவுகோலாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒரு பில்லியன் இளம் மூளைகளை ஒருங்கிணைத்துவிட்டால், இந்தியாவில் கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும். 

தற்போது, தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக இருக்கிறது. இதுபோன்று, இதற்கு முன்பு இல்லை. தற்போது தொழில்முனைவுக்கு முயல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டிஜிட்டல் டெக்னாலஜியால், எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளவும், புதிய ஐடியாக்களால் உற்பத்தியைக் கூட்டவும், மற்ற நிறுவனங்களுடன் கைகோக்கவும் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து கற்றுக்கொள்ளல் மூலம் அளவுகடந்த வாய்ப்புகளால் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

தற்போது, பள்ளியில் படிக்கும் மாணவர்கள் டிஜிட்டல் பயன்பாட்டிலேயே கல்வியைக் கற்றுக்கொள்ளும் சூழலில் வளர்ந்துவருகிறார்கள். இவர்களுக்கு 4 சி-க்கள் குறித்த திறன்களைக் கற்றுக்கொடுத்தால் போதும். டிஜிட்டல் இந்தியாவில் அபாரமான வளர்ச்சியை எட்டுவார்கள். அந்த 4 `சி'-க்கள்... சிந்தனை செய்யும் திறன் (Critical thinking), தொடர்புத் திறன் (Communication), இணைந்து செயல்படும் திறன் (Collaboration) மற்றும் படைப்பாற்றல் திறன் (Creativity) என 4 திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

தற்போதுள்ள தலைமுறையினர், சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு மேம்பட்ட அளவிலும், அதிக அளவிலான மனிதவள ஆற்றலும் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களின் பணிச்சூழலுக்குத் தகுந்தாற்போலும் திறனை மேம்படுத்தும்வகையிலும் அரசு, தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்துச் செயல்பட வேண்டும். 

முகேஷ் அம்பானி

நிதிச் சேவைகள், வர்த்தகம், உற்பத்தி, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் எனப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்குத் தகுந்தாற்போல் தற்போது புதுப்பித்திருக்கிறோம். இதனால் இந்தியா விரைவில் ஒவ்வொரு பிரிவிலும் உலகத்தை வழிநடத்தும். 

நீர்வளப் பாதுகாப்பு, மண் மேலாண்மை, துல்லியப் பண்ணையம் மற்றும் கழிவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலம் வேளாண் உற்பத்தியை அதிகரித்து டிஜிட்டல் பசுமைப்புரட்சியை உருவாக்கவேண்டும். இரண்டாவதாக, இந்தியாவில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம், உற்பத்தித்திறன் மிகுந்த இளைஞர்களை உருவாக்க முடியும். அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதியையும் ஏற்படுத்தித் தர வேண்டும். 

இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் மொபைல் இணைய சேவை வழங்கினாலும், சர்வதேச அளவில் பிராட்பேண்ட் சேவையில் மிகவும் பின்தங்கிய நிலையில் 134 இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது. இதை மாற்றியமைக்கும் வகையில், ஃபைபர் இணைப்பை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஏற்படுத்தி டிஜிட்டல் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்” என்றார்.

கடந்த 20 வருடத்துக்கு முன்பு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஈடுபட்ட நிறுவனத்தைத் திசைதிருப்பி, தற்போது ஜியோ நிறுவனத்தின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறிவருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் என்ன செய்யப்போகிறது என்பது, இந்தக் கருத்தரங்கில் தெளிவாக்கியுள்ளார் முகேஷ் அம்பானி.