பண்டிகை மட்டுமல்ல பயணமும் கொண்டாட்டம்தான்... இப்படியும் கொண்டாடலாம்! | Need to celebrate..? Travel - the best option

வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:23 (03/11/2018)

பண்டிகை மட்டுமல்ல பயணமும் கொண்டாட்டம்தான்... இப்படியும் கொண்டாடலாம்!

பண்டிகை கொண்டாட்டங்களுக்கு எந்தவகையிலும் சொல்லப்போனால் பண்டிகை கொண்டாட்டங்களைவிடப் பெரிய சந்தோசம் பயணங்களில்தான் கிடைக்கும். இந்தப் பெரிய விடுமுறை காலத்துக்குச் சென்று வர சில இடங்கள்.

பண்டிகை மட்டுமல்ல பயணமும் கொண்டாட்டம்தான்... இப்படியும் கொண்டாடலாம்!

மிக நீளமான பண்டிகை விடுமுறை வாரம் இது. எல்லோருக்கும் தீபாவளிக் கொண்டாட்டம் இருக்கிறது என்றாலும்,  சில இடங்களுக்கு ஒரு விசிட் அடிக்கவும் வாய்ப்புள்ளது. விழா கொண்டாட்டங்களைவிட பெரிய சந்தோஷம் பயணங்களில்தான் கிடைக்கும். இந்தப் பெரிய விடுமுறை காலத்தில் சென்று வர சில இடங்கள்...

பழவேற்காடு ஏரி

சென்னையிலிருந்து 50 கி.மீ தூரத்தில் ஆந்திர எல்லையில் இருக்கிறது. இது சரித்திரப் புகழ்பெற்ற டச்சு ஊர். இங்கே இந்தியாவின் முதல் டச்சுக் கோட்டையான கெல்ட்ரியா கோட்டை, டச்சுக் கல்லறைத் தோட்டம் எனப் பார்ப்பதற்கு நிறைய இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி இந்த ஏரி நூற்றுக்கணக்கான பறவைகள், மீன்களின் சரணாலயமாகத் திகழ்கிறது. பறவைகளைப் பார்ப்பதில் (birding) விருப்பமிருந்தால் உங்கள் பைனாக்குலரையும் எடுத்துச் செல்லுங்கள். அக்டோபர் தொடங்கி மார்ச் வரை குளிர்காலத்தில் சென்றால் இளஞ்சிவப்பு நிறத்தில் நடைபயிலும் செங்கால் நாரைகளைக் கண்டுகளிக்கலாம். அதிகாலையில் சென்றால் இறால் பிடிப்பதையும் மீன் மார்க்கெட்டின் வியாபார ஓசைகளையும் கேட்கலாம். மாசு காரணமாக அழிந்துகொண்டிருந்தாலும் இந்த ஏரியின் அழகு கூடிக்கொண்டேதான்போகிறது. 

பழவேற்காடு

தடா அருவி

உப்பலமடகு என்கிற தடா அருவி, சென்னையிலிருந்து 90 கி.மீ தொலைவில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. ட்ரெக்கிங் செல்வதற்கான இடம்தான் என்றாலும் நாகலாபுரம் அளவுக்குக் கடினமாக இருக்காது. ஆனால், அதே அளவுக்கு நல்ல அனுபவத்தைத் தரக்கூடியது. பேஸ்கேம்பிலிருந்து காய்ந்துபோன மலையில் தொடங்கும் பயணம் போகப் போக அடர்த்தியான காட்டுக்குள் நுழைந்து, இறுதியில் ஒரு சூப்பரான அருவியில் முடியும். 4 கி.மீ நடக்கவேண்டியிருக்கும். போகும் வழியெல்லாம் சின்னச் சின்னச் சுனைகளில் ஜாலி குளியல் போட்டுக்கொண்டே போகலாம். போகும் வழியில் சின்னதாக ஒரு சிவன் கோயிலும் உண்டு. இப்போதுதான் மழைபெய்து ஓய்ந்திருக்கிறது என்பதால், அருவியில் நிச்சயம் தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும். மற்ற இடங்களுக்கெல்லாம் சாப்பாட்டுக்காக அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், தடா போகும்போது நிச்சயம் ஏதாவது கையில் எடுத்துப்போக வேண்டும்.

தடா அருவி

புதுச்சேரி

இங்கே செல்லாத சென்னைவாசிகளே இருக்க மாட்டார்கள். அவ்வளவு நெருக்கமான இடம். 160 கி.மீ தொலைவில் கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கிறது இந்த பிரெஞ்சு காலனி.

இங்கே முதல்முறை செல்பவர்கள், பார்க்கவேண்டிய இடங்கள்: ப்ரோமனேட், கவர்னர் மாளிகையின் அருகே இருக்கும் அருங்காட்சியகம், அழகான பிரெஞ்சு மாளிகைகள், அரபிந்தோ ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், புனித லூர்து தேவாலயம், கௌபர்ட் மார்க்கெட், வைட் டவுன், எம்.ஜி ரோடு பக்கம் போனால் அழகான பிரெஞ்சு கடைகளையும் பார்க்கலாம். சாகசப் பிரியர்களுக்கு இங்கே ஸ்கூபா டைவிங்கும் உண்டு. 

பாண்டிச்சேரி

இந்த இடங்களுக்கெல்லாம் சென்னையிலிருந்து பைக்கிலேயே போய் வந்துவிடலாம். பெரிதாகத் திட்டமிடவெல்லாம் தேவையில்லை.

தரங்கம்பாடி

சென்னையிலிருந்து 280 கிலோமீட்டரில் இருக்கிறது இந்த அழகான டேனிஷ் ஊர். நிறைய வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கிய பழைமையின் அழகு நம் கண்முன் நிற்கும். பெருநகரத்தின் நெரிசலிலும் கூச்சலிலும் சலித்திருப்பவர்களுக்கு இது ஓர் அழகான கமர்ஷியல் பிரேக். இவையெல்லாம் போகவேண்டிய அளவுக்குக் கடற்காற்றும் உண்டு. இப்போது ஆரம்பித்திருக்கும் இந்த வடகிழக்குப் பருவமழைதான் இங்கே போவதற்குச் சரியான நேரம். டோன்ஸ்பார்க் கோட்டை, இந்தியாவின் மிகப் பழைமையான ஜியான் சர்ச், தரங்கம்பாடி அருங்காட்சியகம், 300 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட நியூ ஜெருசேலம் தேவாலயம், 700 ஆண்டுகள் பழைமையான மாசிலாமணிநாதர் கோயில் எனச் சுற்றிப்பார்க்க இங்கே பல இடங்கள் உண்டு. சரித்திரத்திலும் கட்டடக் கலையிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டென்றால் இது உங்களுக்கான இடம்தான். அப்படியில்லை என்றாலும் போய் வரலாம். நிச்சயம் இந்த இடம் உங்களை ஆக்கிரமித்துக்கொள்ளும்.  

அலைகள் உரசும் கடலின் கரையில் நீங்கள் தங்கவேண்டுமென்றால், பங்களா ஆன் த பீச் ரிசார்ட்டுக்குப் போகலாம். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு வீடாகும். இங்கிருந்து வெறும் 15 கிலோமீட்டர் போனால் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலை அடையலாம். காலில் மணல் ஒட்ட, கடற்கரையில் நடக்க நினைக்கும் இயற்கை விரும்பிகளுக்குக் காரைக்காலில் ஏகப்பட்ட அழகான கடற்கரைகள் உண்டு.

தரங்கம்பாடி - பண்டிகை சுற்றுப்பயணம்

ஏற்காடு

சேலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் அருகே இருக்கும் அழகான ஊர். ட்ரெக்கிங், இயற்கையை ரசித்தல் என்று இங்கே பொழுதுபோக்க பல வாய்ப்புகள் உண்டு. சென்னையிலிருந்து 360 கி.மீ தொலைவில் இருக்கிறது. காபித் தோட்டங்கள், ஆரஞ்சுமரத் தோப்புகள், அழகழகான மலைகளைப் பார்ப்பதற்கு ஏதுவான இயற்கைப் பாறைகளான லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட் என்று இயற்கைப் பிரியர்களுக்கு ஒரு வரம் இந்த இடம். வரலாற்றில் ஆர்வம் இருந்தால் மலைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் பழம்பெருமைமிக்க ஆலயங்களையும் பார்க்கலாம். இந்தப் பருவமழைக் காலத்தில் போனால் 300 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் கிளியூர் அருவியையும் பார்க்கலாம்.

ஏற்காடு பயணம்

இந்த இடங்களெல்லாம் தவிர இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. நீங்களும் உங்கள் அருகில் இருக்கும் ஊர்களுக்கு ஒரு சின்ன ட்ரிப் குடும்பத்தோடோ நண்பர்களோடோ சந்தோஷமாக அதே நேரத்தில் கவனமாகவும் பாதுகாப்பாகவும் சென்று வரலாம். விடுமுறையைக் கொண்டாடுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்