வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:51 (03/11/2018)

பலாப்பழ அல்வா... பூண்டு காராசேவ்... தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள்! #Recipes

`தீபாவளி' என்றாலே புத்தாடைகளும் இனிப்புகளும் இல்லாமல் இருக்காது. சுவையான இனிப்புகளைத் தங்களுடைய கைகளாலேயே செய்து அதை நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டு சொந்தங்களுக்கும் பரிமாறுவதில் இருக்கும் ஆனந்தமே தனி..! அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படி உங்களுடைய குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் ஸ்வீட்ஸ் கொடுத்து அசத்துவதற்காகவே எளிமையான ஸ்வீட் ரெசிப்பிகளை வழங்குகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.

1. ரபடி

தேவையானவை:

காய்ச்சாத பால் - அரை லிட்டர்

சர்க்கரை - 80 கிராம் (அல்லது 5 டேபிள்ஸ்பூன்)

குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்

பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 5 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு கெட்டியானவுடன் பாதாம், பிஸ்தா, முந்திரியைத் தூவி இறக்கி வைக்கவும். ரபடி ரெடி!

குறிப்பு :

ரபடியை ரசமலாய், ஷாகி துக்கடா, பெங்காலி ஸ்வீட்ஸ் செய்யப் பயன்படுத்தலாம்.  ரபடி கெட்டியாக, கண்டன்ஸ்டு மில்க் கால் கப் அளவு சேர்க்கலாம். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் சர்க்கரை அளவைக் குறைக்கவும். குங்குமப்பூ இல்லாவிட்டால், பாதாம் மிக்ஸ் 2 டீஸ்பூன் சேர்க்கலாம்.

தீபாவளி ரெசிப்பி

2. ஷாகி துக்கடா

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 4

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை - கால் கப்

ரபடி – தேவையான அளவு

துருவிய பாதாம், பிஸ்தா - சிறிதளவு

செய்முறை:

சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை முக்கோண வடிவில் வெட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, நெய்விட்டு சூடாக்கி, பிரெட் துண்டுகளைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, பிரெட் துண்டுகளைச் சர்க்கரைப் பாகில் போட்டு முக்கி எடுக்கவும். தட்டில் பிரெட் துண்டுகளை அடுக்கி, அதன் மேல் ரபடியைச் சேர்க்கவும். துருவிய பாதாம், பிஸ்தா தூவிப் பரிமாறவும். இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு:

ரபடி செய்முறை தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி ரெசிப்பி

3. கேரட் கேசரி

தேவையானவை:

ரவை - அரை கப்

கேரட் விழுது - ஒரு கப்

சர்க்கரை - முக்கால் கப்

தண்ணீர் - ஒன்றரை கப்

முந்திரி - 10

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

நெய் - கால் கப்

செய்முறை:

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும். நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, ஸ்டார் வடிவக் குக்கி கட்டரால் வெட்டி எடுக்கவும்.

குறிப்பு:

சர்க்கரையைக் கடைசியில் சேர்க்கவும். முதலில் சேர்த்தால் ரவை வேகாது. கலர் சேர்க்கத் தேவையில்லை. கேரட் கலரே போதுமானது.

தீபாவளி ரெசிப்பி

4. க்ரானோலா பார்

தேவையானவை:

கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், 

தேன் - தலா அரை கப்

வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 

2 டேபிள்ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

தண்ணீர் - ஒரு டேபிள்ஸ்பூன்

பாதாம், வால்நட் - தலா 10 

(பொடியாக நறுக்கவும்)

பேரீச்சம்பழம் - 4 (கொட்டை நீக்கி, 

பொடியாக நறுக்கவும்)

கோல்டன் கிரேப்ஸ், 

கறுப்பு திராட்சை - தலா 20 

(பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

வெறும் வாணலியில் கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பிறகு பாதாம், வால்நட், பேரீச்சம்பழம், கோல்டன் கிரேப்ஸ், கறுப்பு திராட்சை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி தேன், பழுப்பு சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பிறகு, வறுத்த பொருள்களைச் சேர்த்துக் கிளறவும். பிறகு டிரேயில் பட்டர் பேப்பரைப் போட்டு, இந்தக் கலவையைச் சமமாகப் பரப்பி, ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.

குறிப்பு:

கரகரப்பாக வேண்டுமானால், 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்த அவனில் (oven) 5 முதல் 7 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கலாம்.

தீபாவளி ரெசிப்பி

5. சிறுதானிய லட்டு

தேவையானவை:

சிறுதானிய மாவு (சோளம், வரகு, சாமை,

தினையை வறுத்து அரைத்தது) - ஒரு கப்

பொடித்த வெல்லம் (அ) 

கருப்பட்டி - அரை கப்

தண்ணீர் - 4 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

சுக்குத்தூள் - 2 சிட்டிகை

செய்முறை:  

சிறுதானிய மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டுக் கரைத்து வடிகட்டவும். வெல்லக்கரைசல் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறுதானிய மாவு, நெய், சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

வெல்லக்கரைசல் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாவு சேர்க்கவும். சூடாக இருந்தால் மாவு கட்டிகளாகிவிடும்.

தீபாவளி ரெசிப்பி

6. பலாப்பழ அல்வா

தேவையானவை:

பெரிய பலாச்சுளை - 5 

(கொட்டை நீக்கி, சிறிய 

துண்டுகளாக்கவும்)

பொடித்த வெல்லம் - ஒரு கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பலாப்பழத் துண்டுகள் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசல், அரைத்த பலாப்பழ விழுது சேர்த்து சூடாக்கி கிளறவும். நடுநடுவே நெய் ஊற்றிக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:

பலாப்பழத்தை வேகவைத்தும் அரைக்கலாம்.

தீபாவளி ரெசிப்பி

7. கம்பு அவல் மிக்சர்

தேவையானவை:

கம்பு அவல் - ஒரு கப்

பொட்டுக்கடலை - கால் கப்

வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 15

உலர்திராட்சை - 3 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கவும். வலையுள்ள எவர்சில்வர் வடிகட்டியில் பொட்டுக்கடலையை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். இதேபோல முந்திரி, வேர்க்கடலை, உலர்திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும், இறுதியாக கம்பு அவலை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடிய டிஷ்யூ பேப்பரில் போடவும். அகலமான தட்டில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் கம்பு அவல் மிக்சர் ரெடி.

குறிப்பு:

கம்பு அவலை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக மைக்ரோவேவ் அவனிலும் பொரித்து எடுக்கலாம்.

தீபாவளி ரெசிப்பி

8. வரகு கேசரி

தேவையானவை:

வரகு - அரை கப்

சர்க்கரை - முக்கால் கப்

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

முந்திரி, உலர்திராட்சை - தலா 10

தண்ணீர் - 2 கப்

கேசரி கலர் - 2 சிட்டிகை

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் வரகைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறியவுடன் வரகை மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு உடைக்கவும். அரைத்த ரவையுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். தண்ணீர் போதவில்லை என்றால் சிறிதளவு தண்ணீரைச் சுடவைத்து ஊற்றவும். ரவை நன்றாக வெந்தவுடன் கேசரி கலர், சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தீபாவளி ரெசிப்பி

9. மினி பெப்பர் தட்டை

தேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு - கால் கப்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியில் பரப்பவும். அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் ஒரு ஜிப் லாக் கவரை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தால் அழுத்தவும். சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் மினி தட்டைகளாகச் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மினி தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தீபாவளி ரெசிப்பி

10. பூண்டு காராசேவ்

தேவையானவை:

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - ஒரு கப்

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

ஓமம் - ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்)

பூண்டு - 15 பல் (தோலுரித்து, விழுதாக அரைக்கவும்)

எண்ணெய் (மாவு பிசைய)  - 2 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பொடித்த ஓமம், பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி மாவில் ஊற்றவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். முறுக்கு பிழியும் குழலில் காராசேவ் அச்சைப் போட்டு மாவை நிரப்பிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் காராசேவை முறுக்குபோல் பிழிந்துவிடவும். நன்றாக வெந்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்கவும். ஆறியவுடன் உடைத்து வைக்கவும்.

குறிப்பு:

மாவை காராசேவ் தேய்க்கும் கரண்டியில் வைத்து நேரடியாக எண்ணெயில் தேய்த்துவிடலாம். ஊறவைத்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

தீபாவளி ரெசிப்பி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்