வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (04/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (04/11/2018)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பயண பாதுகாப்பு டிப்ஸ்!#TravelTips

பேருந்துப் பயணங்களின்போது, எப்போதும் உங்களை மறந்து தூங்காதீர்கள். பின்னிருக்கையில் இருந்து கைகள் நீளுவதுபோன்ற பாலியல் தொல்லைகள் வரலாம். ரயில் பயணங்களில் சின்னக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறீர்கள் என்றால், அவர்களைத் தனியாக படுக்க வைக்காதீர்கள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாள்களிலும் சரி, விருந்து, விசேஷம் என்று ஊருக்குப் போகும் போதும் சரி, பெண்கள் குழந்தைகளுடன்தான் செல்வார்கள். அப்படிக் குழந்தைகளுடன் பயணம் செல்லும்போது, தங்களுக்கும் குழந்தைகளுக்கும் என்னென்னப் பொருள்களை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்? எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டல்.

குழந்தை - பயணம்

1. பத்து நாளைக்கு முன்னால் மாதவிடாய் முடிந்திருந்தாலும், பாதுகாப்புக்காக 2 நாப்கின்களை எடுத்து ஹேண்ட் பேகில் வையுங்கள். பயணத்தின்போதும், செல்கிற ஊரின் பருவநிலை மாற்றமும் பல பெண்களுக்குச் சட்டென்று மாதவிடாயை வரவழைத்து விடும். 

2. சின்னப் பிள்ளைகளுடன் டிரெயினில் போகிறீர்கள் என்றால், பாத்ரூம் வசதி இருக்கும் என்பதால் பயப்படத் தேவையில்லை. பேருந்தில் போகிறீர்கள் என்றால், பிள்ளைகளின் வயதுக்குத் தகுந்த டயப்பர்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள். இரவில் அதை மாட்டிவிட்டால், குழந்தைகளுக்கும் நிம்மதி, உங்களுக்கும் நிம்மதி.

3. உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் வண்டியில் போகும்போது, வாந்தி வருகிற பிரச்னை இருந்தால், வாந்தி வராமல் தடுக்க எலுமிச்சம் பழங்கள், வந்தால் எடுக்க 4 பிளாஸ்டிக் கவர்களையும் தயாராக வைத்திருங்கள். மருத்துவரின் ஆலோசனைக் கேட்டு, அதற்கு உரிய மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். 

4. பயணங்கள் செல்லும்போது, வீட்டிலேயே சமைத்த இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்துச் செல்வதுதான் வயிற்றுக்கும் ஆரோக்கியமான பயணமாக இருக்கும். பேருந்து நிறுத்துகிற இடங்களிலும், டிரெயினிலும் வாங்கிச் சாப்பிடுகிற உணவுகளால் குழந்தைகளின் வயிறுக் கெட்டுவிட்டால், பயணத்தின் சந்தோஷமும் கெட்டுவிடும்; ஊருக்குப் போய் அங்கும் விருந்து, விசேஷம் என்று கலந்துகொள்ள முடியாமல் போய்விடும். 

5. வீட்டில் சமைக்கவே முடியவில்லை என்றால், ஹோட்டலில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவுகளை மட்டும் வாங்கிச் சாப்பிடலாம். எக்காரணம் கொண்டும் பயணங்களின்போது பிரியாணி, பரோட்டா போன்றவையும் அதிகமான எண்ணெய் சேர்ந்த உணவுகளையும் சாப்பிடாதீர்கள்.

6. பயணங்களின்போது, நீங்களும் நிறைய நகைகளைப் போட்டுக்கொள்ளாதீர்கள். குழந்தைகளுக்கு நகையே போடாதீர்கள். அதைப் பாதுகாப்பதே பயணத்தின் பிரதான வேலையாகி விடும். சகப் பயணியை நம்பலாமா வேண்டாமா என்ற தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கவும் கூடும். 

7. நீண்ட தூரப் பயணங்களின்போது, ரயில் சிநேகிதங்கள் ஏற்படுவது சகஜம்தான். அதற்காக அவர்கள் தருகிற பிஸ்கெட் மாதிரியான உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள்.

டிராவல்

8. பேருந்தில் சென்றாலும், ரயிலில் சென்றாலும் இரவுகளில் குழந்தைகளுக்கு குளிரெடுக்கும். அதனால்,  முழுக்கை வைத்த சர்ட், ஃபுல் பேன்ட் போட்டு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குப் புடவையோ, சுடிதாரோ இரவில் ஆடை கலைந்துவிடுமோ என்ற அச்சம் வராது தடுக்க, போர்த்திக்கொள்ள மெல்லிய பெட்ஷீட்டை எடுத்துச்செல்லுங்கள். 

9. பேருந்துப் பயணங்களின்போது, எப்போதும் உங்களை மறந்து தூங்காதீர்கள். பின்னிருக்கையில் இருந்து கைகள் நீளுவதுபோன்ற பாலியல் தொல்லைகள் வரலாம். ரயில் பயணங்களில் சின்னக் குழந்தைகளை அழைத்துச் செல்கிறீர்கள் என்றால், அவர்களைத் தனியாக படுக்க வைக்காதீர்கள். ஒரே பெர்த்தில் குழந்தைகளின் கால் பக்கம் தலை வைத்துப் படுத்துக்கொள்ளுங்கள். பெரிய குழந்தைகள் என்றால், தனியாகப் படுக்க வையுங்கள். ஆனாலும் அவர்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள். 

10. பயணங்களின் போது, ஊருக்குள்ளே போவதற்கு டவுன் பஸ் உடனே கிடைத்தால் சரி. இல்லையென்றால், பேருந்துக்குக் காத்திருந்து நேரத்தைக் கடத்தாமல் ஆட்டோ பிடித்துப் போய்விடுங்கள். இதிலெல்லாம் கஞ்சம் பிடிக்காதீர்கள்.

உங்கள் பயணங்கள் இனிதாகட்டும்!


டிரெண்டிங் @ விகடன்