வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (04/11/2018)

கடைசி தொடர்பு:13:05 (04/11/2018)

"இன்ஸ்டாகிராமில் சிறுத்தை வாங்கலாம்... வர்றீங்களா?!’’ வில்லங்க விற்பனை

விலங்குச் சந்தையோ இணையதளமோ, சிறுத்தைப் புலிக் குட்டிகளை விற்பனை செய்வது சட்டவிரோதமானது. ஆண்டுக்குச் சுமார் 300 சிறுத்தைக் குட்டிகள் கடத்தப்பட்டு, வளைகுடா நாடுகளில் இணையதளக் கள்ளச் சந்தைகள் மூலமாக விற்கப்படுகின்றன.

உங்களுக்குச் சிறுத்தைப்புலி வேண்டுமா...!

செல்லப்பிராணியாக வளர்க்க ஆசையா...!

எங்கிருந்து வாங்குவதென்று தெரியவில்லையா...!

இன்ஸ்டாகிராமில் லாகின் செய்யுங்கள். அதில் #petcheetah என்று தேடுங்கள். சிறுத்தைப்புலிக் குட்டிகள் விதவிதமாக வயது வாரியாகச் சிறுத்தைப் புலிகள் கிடைக்கும்.

சிறுத்தைப் புலிகள் சட்டவிரோதமாகச் சமூக வலைத்தளங்களில் விற்கப்படுகின்றன. கடந்த மாதம் நமீபியாவின் சிறுத்தைப் புலிகள் பாதுகாப்புக்கான அமைப்பு (Cheetah conservation fund, CCF) மூலமாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன. காட்டில் வாழும் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தற்போது வெறும் 7,100 மட்டுமே. இருபதாம் நூற்றாண்டிலிருந்து 90 சதவிகிதம் அவை அழிந்துவிட்டன. இப்போது நவீன முறையில் இயங்கிவரும் இத்தகைய கள்ளச்சந்தைகளால் ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அழியும் நிலையிலிருக்கும் இந்த விலங்குகளின் இருப்பையே ஆபத்துக்குள்ளாக்கும் இந்த விற்பனைகளைச் சமூக வலைத்தளங்கள் முடக்குவதில் தற்போது ஈடுபட்டுள்ளன.

வளர்ப்புச் சிறுத்தை

விலங்குச் சந்தையோ இணையதளமோ, சிறுத்தைப் புலிக் குட்டிகளை விற்பனை செய்வது சட்டவிரோதமானது. அதுவும் அவை காட்டில் அதிகமாகக் காணப்படும் கிழக்கு எத்தியோப்பியா, வடக்கு கென்யா, சோமாலிலாந்து போன்ற பகுதிகளிலிருந்து இந்தப் பதிவுகள் அதிகம் வந்திருப்பது அவற்றின் வாழ்வியலைச் சிதைப்பதன்றி வேறில்லை. துருதிர்ஷ்டவசமாக காடுகளில் இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு, இன்னும் எங்கெல்லாம் வாழ்கின்றன போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் நம்மிடம் இல்லை. ஆனால், ஆண்டுக்கு அந்த நாடுகளிலிருந்து சுமார் 300 சிறுத்தைக் குட்டிகள் கடத்தப்பட்டு, வளைகுடா நாடுகளில் இணையதளக் கள்ளச் சந்தைகள் மூலமாக விற்கப்படுகின்றன. இங்குச் சொல்லப்பட்ட கணக்கு உயிருடன் விற்கப்பட்டது மட்டுமே. கடத்தப்படுவதில் நிறைய உயிர் பிழைப்பதில்லை.

2005-ம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஓர் உணவகத்தில் இரண்டு சிறுத்தைக் குட்டிகள் கயிற்றில் கட்டப்பட்டு விற்பனைக்குக் காத்திருந்தபோது பிடிக்கப்பட்டன. அப்போதிருந்து அவர்கள் இந்த சட்டவிரோத விலங்குக் கடத்தல் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீப காலங்களில் கள்ளச் சந்தைகள் குறித்த விவரங்கள் பொதுவெளிகள் மூலம் அனைவருக்கும் தெரியத் தொடங்கிவிட்டது. அதனால் பல புகார்கள் சட்டவிரோத விலங்குக் கடத்தல் குறித்து வரத் தொடங்கின. அதுவும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலுமிருந்துதான் அதிகப் புகார்கள் வந்தன. அந்தப் புகார்களில் பெரும்பாலானவை இணைய விற்பனை தொடர்பானது. அப்படித்தான் அவர்கள் இதுகுறித்து கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.

"இணைய விற்பனை பற்றித் தெரிந்த பிறகுதான் சட்டவிரோத விலங்குச் சந்தை எந்த அளவுக்கு ஆபத்தானதாக வளர்ந்துவிட்டது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். அது நாங்கள் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு அபரிமிதமாக வளர்ந்திருந்தது"  என்கிறார் சிறுத்தைப் புலி பாதுகாப்பு அமைப்பில் சட்டவிரோத விலங்குக் கடத்தல் தடுப்புப் பிரிவின் இணை இயக்குநர் பட்ரீசியா டிரைகொராஷே.

இணைய விலங்கு வர்த்தகத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள அவர்கள் அதைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். அந்த கண்காணிப்பு ஆய்வில், 2012-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2018-ம் ஆண்டின் ஜூலை மாதம் வரை சமூக வலைத்தளங்களில் விலங்கு விற்பனைக்காகப் பதிவிடப்பட்டிருந்த 906 பதிவுகளை அவர்கள் கண்டறிந்தனர். அதில் இன்ஸ்டாகிராமில் மட்டுமே 77% பதிவுகள் இருந்தன. இவைபோக குவைத் நாட்டைச் சேர்ந்த 4sale என்ற இணைய வணிகத் தளத்திலும் யூ டியூப்பிலும் 11% பதிவுகள் சிறுத்தைப் புலி விற்பனைக்காகப் பதிவிடப்பட்டிருந்தன. சட்டவிரோத விலங்கு வர்த்தகம் சார்ந்த பதிவுகளில் கிடைத்த தகவல்களைவிட அதற்குச் செய்யப்பட்டிருந்த கமெண்ட்ஸ்களை வைத்தே பெருவாரித் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

இன்ஸ்டாகிராம்

சிறுத்தைகள் பாதுகாப்பு அமைப்பு மூலம் இணையக் கள்ளச் சந்தையிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி...

"சில பதிவுகளில் இரண்டுக்கும் மேற்பட்ட குட்டிகளை விற்பனைக்குப் போட்டிருப்பார்கள். அதில் பெரும்பாலான குட்டிகள் மிகவும் பலவீனமாக இருந்தன. அவை எங்கோ இருந்து எடுத்து விளம்பரத்துக்காகப் பதிவிட்டவையல்ல. அத்தனையும் உண்மை. அதுதான் என்னை வருந்தச் செய்தது" என்கிறார் பட்ரீசியா.

இணைய விற்பனைப் பதிவுகள் 2014 முதல் 2016 மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எண்ணிக்கை 2017-க்குப் பிறகு குறைந்துவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராமில் #PetCheetaah என்று தேடினால் உங்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் திரையிடப்படுகிறது. ஆனால் பதிவுகள் தடை செய்யப்படுவதில்லை. இன்ஸ்டாகிராம், 4sale போன்ற தளங்களில் பதிவுகள் குறைந்துவிட்டதை விற்பனை குறைந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் வேறு ஏதேனும் பாதுகாப்பான ரகசியமான அல்லது இன்னமும் அதிகம் கவனிக்கப்படாத தளங்களுக்குச் சென்றிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

சர்வதேச அளவில் சிறுத்தை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைத்தளங்களில் பதிவிடப் பட்டிருக்கும் அனைத்து சிறுத்தைக் குட்டிகள் விற்பனை விளம்பரங்களுமே சட்டவிரோதமானவை. அவற்றுக்கு எந்தவித உரிமமும் கிடையாது. அதில் 62 சதவிகிதம் பதிவுகள் பதிவிடப்பட்ட இடம், பதிவிட்டவர்களின் தொடர்பு எண் என்று ஏதேனும் ஒருவகையில் சௌதி அரேபியாவோடு தொடர்புடையதாக இருந்தன. மீதம் குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் போன்றவற்றிலும் பதிவிடப்பட்டுள்ளன. அதிகமான விளம்பரங்களைப் பதிவிட்ட முதல் நான்கு பக்கங்களும் சௌதியிலிருந்து இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் சிறுத்தை போன்ற வன விலங்குகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான சட்டங்கள் தெளிவாக அங்கு வரையறுக்கப்படாத நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக இதைச் செய்கிறார்கள். தற்போது ஐக்கிய அரபு நாடுகளில் மட்டும் அத்தகைய விலங்கு விற்பனையைச் சட்டப்பூர்வமாகத் தடைசெய்துள்ளனர். ஆப்பிரிக்க சிறுத்தைப் புலிகள் அவற்றின் வாழிடங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படுவது, கட்டுமான ஆக்கிரமிப்புகளால் ஏற்கெனவே அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த கள்ளச் சந்தைகளால் அவற்றின் இருப்பு மேன்மேலும் ஆபத்துக்கு உள்ளாகின்றன. எத்தியொப்பியா, சோமாலியா போன்ற பகுதிகளில் முற்றிலுமாக அழிந்துவிடும் நிலையிலிருக்கும் இவை மற்ற பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் அவற்றின் வாழ்வியல் சிக்கல்களை அதிகப்படுத்துவது வேதனையளிக்கிறது. சிறுத்தைகளைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பது எந்தவிதத்திலும் அவற்றின் பாதுகாப்பில் நன்மை செய்யாது.

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் இத்தகைய வேட்டையாடி விலங்குகளையோ அவற்றின் குட்டிகளையோ மீண்டும் காட்டில் விட்டாலும் ஆபத்துதான். அவற்றால் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு உயிர் பிழைத்திருக்க முடியாது. மனிதர்களால் வளர்த்தபட்ட பிறகு மீண்டும் அவை காட்டில் வாழ்வது சாத்தியமில்லை. அதோடு தாயிடமிருந்து திருடப்பட்ட குட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதும் கிடையாது. அதனால் அவற்றின் உடல்நிலையும் பலவீனமாகவே இருக்கின்றன.

சிறுத்தைக் குட்டி

வன விலங்குகளை விற்பனை செய்பவர்களிடம் தொடர்புள்ளவர்கள் இத்தகைய விபரீதங்களை மனதில் கொள்ளவேண்டும். அதோடு அந்த விற்பனை சட்டப்பூர்வமானது கிடையாது என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டும். விலங்குகள் நம் அடிமைகள் அல்ல. அவற்றை நம் கட்டளையின் பேரில் அடக்கிவைப்பதற்கு. தங்கள் வாழிடங்களில் சுதந்திரமாக வாழ அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் உண்டு.


டிரெண்டிங் @ விகடன்