வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:31 (05/11/2018)

ராஜ்போக் ரசகுல்லா, காஜு, பிஸ்தா ரோல்ஸ் தித்திக்கும் தீபாவளி ஸ்வீட்ஸ் #DiwaliRecipes

இந்தத் தீபாவளியைத் தித்திப்புடன் கொண்டாட நார்த் இந்தியன் ஸ்வீட் ரெசிப்பிகள்!

ராஜ்போக் ரசகுல்லா, காஜு, பிஸ்தா ரோல்ஸ் தித்திக்கும் தீபாவளி ஸ்வீட்ஸ் #DiwaliRecipes

தீபாவளி என்றாலே நம் பாரம்பர்யமான அதிரசம், முறுக்கு, தட்டைப் போன்றவைதாம் நம் வழக்கமான மெனுவாக இருக்கும், இந்த தீபாவளிக்கு வீட்டிலே எளிமையாகச் செய்யக்கூடிய நார்த் இந்தியன் ஸ்வீட்ஸ் ரெசிப்பிகளை முயற்சி செய்து பாருங்கள்.

ராஜ்போக் ரசகுல்லா

தேவையானவை:

காய்ச்சாத பால்  - அரை லிட்டர்
எலுமிச்சைச் சாறு  - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - ஒன்றே முக்கால் கப்
சர்க்கரை - ஒரு கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும்)
மஞ்சள் ஃபுட் கலர் -  சில துளிகள்
உடைத்த பாதாம், பிஸ்தா - தலா 2  டேபிள்ஸ்பூன்

ஸ்வீட்ஸ்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் இறக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பால் திரியும் வரை தொடர்ந்து கிளறவும். இதை மெல்லிய துணியில் ஊற்றி, எலுமிச்சை வாசனை போகும் வரை நன்கு கழுவவும். பிறகு, மூட்டைக் கட்டித் தண்ணீர் முழுவதும் வடியும் வரை தொங்கவிடவும். இதுவே பனீர். அகலமான தட்டில் பனீருடன் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வடை போல தட்டி, நடுவே நட்ஸ் கலவை வைத்து மூடி மீண்டும் உருட்டவும்.

மற்றோர் அடிகனமான பாத்திரத்தில் பாலில் ஊறவைத்த குங்குமப்பூ, சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரைத் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் உருண்டைகளைப் போட்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்கவும். நடுநடுவே மெதுவாக உருண்டைகளை உடைத்துவிடாமல் கிளறி இறக்கவும். ராஜ்போக் ரசகுல்லா தயார். பிறகு, இதைக் குளிர வைத்து, சிறிய கோப்பைகளில் சர்க்கரைப்பாகுடன் சேர்த்துப் பரிமாறவும்.

காஜு - பிஸ்தா ரோல்ஸ்

தேவையானவை:

முந்திரி  - ஒரு  கப்
பிஸ்தா -  கால்  கப்
சர்க்கரை (பாகு வைக்க) - அரை கப்
சர்க்கரை – 1/8 கப் (மிக்ஸியில் பொடிக்கவும்)
தண்ணீர்  -  கால் கப்
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் -  சில துளிகள்
வெதுவெதுப்பான நீர் – ஒரு டீஸ்பூன்

ஸ்வீட்ஸ்

செய்முறை:

முந்திரி, பிஸ்தாவைத் தனித்தனியாக மிக்ஸியில் நைஸாகப் பொடித்துச் சலிக்கவும். நான்-ஸ்டிக் பேனில் (Pan) தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இத்துடன் முந்திரித்தூளை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். சிறிதளவு மாவை எடுத்து விரல்களால் உருட்டவும். நன்கு உருட்ட வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.  

கைபொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு கையில் சிறிதளவு நெய் தொட்டுக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  பிறகு, நெய் தடவிய பலகையில் செவ்வக வடிவில் திரட்டவும். பிஸ்தாவுடன் பொடித்த சர்க்கரை, பச்சை ஃபுட் கலர், வெதுவெதுப்பான நீர் சேர்த்து, கையில் நெய் தொட்டுக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிஸ்தா மாவை மெல்லிய ரோலாகச் சுருட்டவும்.  இதைத் திரட்டிய முந்திரியின் ஓர் ஓரத்தில் வைத்து நன்கு இறுக்கமாகப் பாய்போல சுருட்டவும். இந்த ரோலை விரல் நீள துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

காஜு ஆப்பிள்

தேவையானவை:

முந்திரி - ஒரு கப்
சர்க்கரை  - அரை கப்
தண்ணீர்  -  கால் கப்
நெய் -  ஒரு  டேபிள்ஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் - சில துளிகள்
சிவப்பு ஃபுட் கலர் - சில துளிகள்
சிறிய பெயின்ட் பிரஷ் - ஒன்று
கிராம்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

முந்திரியை மிக்ஸியில் நைஸாக அரைத்துச் சலிக்கவும். பாத்திரத்தில் தண்ணீருடன் சர்க்கரை கலந்து ஒரு கம்பி பதம் வரும் வரைப் பாகு காய்ச்சவும். சர்க்கரைப் பாகில் சிறிது சிறிதாகப் பொடித்த முந்திரி சேர்த்து, கைவிடாமல் கிளறவும். சில நிமிடங்களில் கலவை நன்கு சுருண்டு வரும். சிறிதளவு மாவை எடுத்து விரல்களால் உருட்டிப் பார்த்தால் உருட்ட வர வேண்டும். அதுவே சரியான பதம். உடனே இறக்கி, நெய் தடவிய தட்டில் பரப்பி ஆறவிடவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு கையில் நெய் தொட்டுக்கொண்டு, மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி ஆப்பிள் வடிவத்தில் உருட்டவும். அதன் மேலே சிவப்பு நிறத்தை ஆங்காங்கே பிரஷ் செய்து சிறிது நேரம் காயவிடவும். உருண்டைகளின் நடுவே சிறிய பள்ளம் செய்து கிராம்பைத் தலைகீழாகச் செருகிப் பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்