வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (05/11/2018)

கடைசி தொடர்பு:09:45 (06/11/2018)

புல்லட் பாம், பென்சில், பாம்பு மாத்திரை - அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும் பட்டாசுகள்!

அரசியல் தலைவர்களுக்கு என்னென்ன பட்டாசு மேட்ச் ஆகும் என்ற ஜாலி கற்பனைதான் இது. சிரிக்க மட்டுமே! நல்ல நாள் அதுவுமா டென்ஷன் எல்லாம் ஆகப்படாது!

புல்லட் பாம், பென்சில், பாம்பு மாத்திரை - அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும் பட்டாசுகள்!

முட்டி மோதி முக்கால்வாசிப் பேர் ஊர் போய் சேர்ந்திருப்பீர்கள். மிச்சமிருப்பவர்களும் இன்று கிளம்பி நாளை காலை வீட்டில் `உள்ளேன் ஐயா' சொல்லுவீர்கள். அத்தனைக்கும் காரணம் `தீபாவளி'. பட்டாசு இல்லாத தீபாவளியா? நக்கல் இல்லாமல் நாங்களா? எனவே அரசியல் தலைவர்களுக்கு என்னென்ன பட்டாசு மேட்ச் ஆகும் என்ற ஜாலி கற்பனைதான் இது. சிரிக்க மட்டுமே! நல்ல நாள் அதுவுமா டென்ஷன் எல்லாம் ஆகப்படாது!

அணுகுண்டு - தினகரன்:

பட்டாசு

இப்போதைக்கு இந்த வெடி இவருக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். வாட்ஸ் அப்பைக் கண்டுபிடித்தவர்கள் கூட இவ்வளவு பிரயோஜனமாக அதைப் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். பொழுது விடிந்தால் எதிரணியில் ஏதாவது அணுகுண்டை கொளுத்திப் போட்டுவிடுகிறது தினகரன் அண்ட் கோ. அது தீயைக் கிளப்பிக் கொளுந்துவிட்டு எரிகையில் `ஹேப்பி தீபாவளி பங்காளி' எனக் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்.

ஃபேன்சி வெடி - மோடி:

பட்டாசு

ஃபேன்சி வெடி எப்படி வெடிக்கும்? பெரும் சத்தத்தோடு கிளம்பிப் போய் கலர் கலராக வெடித்துக் கடைசியில் காணாமல் போகும். நம்மாளும் அப்படித்தான். `இப்ப நான் பண்ணப்போறதைப் பாத்து ஆடிப்போவீங்க. அசந்து போவீங்க' என கலர் கலராக பில்டப் விட்டுவிட்டு கடைசியாக `அந்தப் பழம்தாங்க இது' என முடித்துவிடுகிறார். எனவே அவருக்கு இதுவே பொருத்தமாக இருக்கும்.

பென்சில் - ஓ.பி.எஸ்:

crackers

பென்சில் புஸ்ஸென கங்கு கக்கும்தான். ஆனால் எதிர்பார்க்காத நொடியில் திடீரென வெடிக்கவும் செய்யும். மானமிகு ஓ.பி.எஸ்ஸும் அப்படித்தான். எப்போது சமாதிக்குப் போவார்? தர்மயுத்தத்தை தொடங்குவார் என யாருக்கும் தெரியாது. எனவே அவருக்கு பென்சிலே பொருத்தமாக இருக்கும்.

சாட்டை - எடப்பாடி:

crackers

ஓ.பி.எஸ் பென்சில் என்றால் அப்போது அவரின் மாற்றான் சூர்யாவான எடப்பாடி சாட்டையாகத்தானே இருக்கமுடியும். பரபரப்பான தீபாவளியில் `என்னத்த வெடிச்சுகிட்டு' எனப் பொறுமையாக எரியும் ஒரே வஸ்து சாட்டைதான். தமிழகமே பற்றியெரிந்தாலும், `மெதுவடை மெத்துமெத்துனு இருக்குல' மோடிலேயே இருப்பதால் அவருக்கு இது பொருத்தமாக இருக்கும்.

சங்கு சக்கரம் - வைகோ:

crackers

சங்குச்சக்கரத்தை நீங்கள் வாசலில் பற்ற வைத்தால் கிருட்டு கிருட்டெனச் சுற்றி கிச்சனில் போய் ரெஸ்ட் எடுக்கும். வைகோவும் அப்படித்தான். தேர்தல் சமயத்தில் கூட்டணி என ஒரு ரவுண்டு போய் கடைசியில் `அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' என முடிப்பார். போக அடிக்கடி நடைபயணம் வேறு. எனவே அவருக்குச் சக்கரம்தான் பொருத்தமாக இருக்கும்.

புல்லட் பாம் - அன்புமணி:

crackers

அணுகுண்டு வாங்க முடியாதவர்கள் வாங்குவது புல்லட் பாம்தான். சத்தம் கம்மியாக இருந்தாலும் `அணுகுண்டு மாதிரி இருந்துச்சுல' என மனசைத் தேற்றிக்கொள்ளலாம். அன்புமணியும் அப்படித்தான். `சி.எம் ஆகணும், சி.எம் ஆகணும்' எனச் சொல்லியே மக்களின் முதல்வராக பத்தாண்டுகால சர்வீஸ் முடித்திருக்கிறார். புல்லட் பாம் அன்புமணி!

ராக்கெட் - சீமான்:

crackers

இது கிளம்பும் இடம் மட்டும்தான் தெரியும். முடியுமிடம் எங்கு என அதற்கும் தெரியாது நமக்கும் தெரியாது. சிலசமயம் சத்தம் வரும். சிலசமயம் புஸ்ஸெனப் போகும். அண்ணன் சீமானும் அப்படித்தான். இங்கே கிளம்பி ஆமை ஓடு வழியே இலங்கை போய் அப்படியே அன்டார்டிகா பனிப்புயலில் முடிப்பார். எதிர்பார்க்கும் நேரத்தில் சத்தமே வராது. எனவே அவருக்கு இதுதான் பொருத்தமாக இருக்கும்.

சீனிவெடி - ராஜா:

crackers

பட்டாசுகளிலேயே பரிதாபமான வெடி இதுதான். பொதுவாக எல்லாம் வாங்கியபிறகு கொசுறு வாங்கும் ஐட்டம் இதுதான். வாங்கின கடமைக்கு அதுவும் சொடுக்குச் சத்தத்தில் வெடிக்கும். தமிழக அரசியலில் அப்படியான ரேங்கிங்கில் இருப்பது திருவாளர் ஹெச்.ராஜா. `ஏய்ய்ய்ய்ய்' என ஆரம்பித்து கடைசியில் மன்னிப்பு அறிக்கையில் முடிப்பார்.

பாம்பு மாத்திரை - விஜயபாஸ்கர்:

crackers

`இது என்ன ரகம்னே தெரியலயே' டைப் பட்டாசுதான் இந்தப் பாம்பு மாத்திரை. தீபாவளிக்குக் கொளுத்தினால் கார்த்திகை வரை புசுபுசுவென எரிந்துகொண்டிருக்கும். கடைசியில் மிஞ்சுவது புகைதான். விஜயபாஸ்கரும் அப்படித்தான். `உண்மையிலேயே சொத்து சேர்த்திருக்காரா' என நமக்கே டவுட்டாகிறது. ஆனாலும் பால் பாக்கெட் போடுபவரைப் போல வருமானவரித்துறை அடிக்கடி ஆஜராகிறது. ரிசல்ட்டும் தெரிவதில்லை.

புஸ்வாணம் - வேற யாரு... நாமதான்:

`சே! இப்படிலாமா நடக்கும்?' என ஒருகாலத்தில் நினைத்த மக்கள் இப்போது `சரி ரசத்தை ஊத்து, அதுல பூனை கிடக்குதா பாப்போம்' ரேஞ்சுக்குச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொரு தடவையும் `இப்ப போராடுவாங்க பாரு' என நினைத்து கடைசியில் புஸ்வாணம் ஆவதுதான் மிச்சம். எனவே இந்த வெடி நம் எல்லாருக்கும் பொருந்தும்.

ஹேப்பி தீபாவளி மக்கழே!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க