வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (07/11/2018)

கடைசி தொடர்பு:12:03 (07/11/2018)

குழந்தைகள் முன் எப்படிப் பேச வேண்டும் பெற்றோர்களுக்கான கைடன்ஸ்

குழந்தைகள் முன்னிலையில் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும், அது எப்படி குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் எ கைடன்ஸ்.

குழந்தைகள் முன் எப்படிப் பேச வேண்டும் பெற்றோர்களுக்கான கைடன்ஸ்

குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகில் அவர்கள் செய்யும் செயல்கள் பெரும்பாலும் பெரியவர்களின் செயல்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.பேசக் கற்றுக்கொள்ளும் பருவத்தில் வார்த்தைகளையும் அவற்றின் தொனியையும், அதற்கான உடல் மொழியையும் அச்சு அசலாக வீட்டில் உள்ள பெரியவர்கள் போலவே குழந்தைகள் செய்வார்கள். ஆகவே, குழந்தைகள் மற்றவர்களிடம் எப்படிப் பேசப்போகிறார்கள் என்பது பெற்றோர்களின் செயல்பாட்டில்தான் இருக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் என்ன பேச வேண்டும்,  எப்படிப் பேச வேண்டும், அது எப்படி குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமையும் என்பது பற்றிய தகவலைத் தருகிறார் ஷியாமளா ரமேஷ் பாபு.ஷியாமளா ரமேஷ் பாபு

1. குழந்தைகள் முன்னிலையில் கூடுமானவரை சண்டைபோடுவதைப் பெற்றோர்கள் தவிர்த்தல் நல்லது. வாய்க்கு வாய் நாம் வாதாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கும் குழந்தை, எதிர்த்துப்பேசும் பழக்கத்தை நம்மிடமிருந்தே கற்றுக்கொண்டதாகிவிடும். பெரியவர்களிடம் வாதம் செய்யக் கூடாது என்று வெறுமனே அறிவுரை கூறாமல் நாமும் எடுத்துக்காட்டாக நடந்துகொள்ள வேண்டும்

2. குழந்தைகள் தவறு செய்யும்போதும் `உனக்கு அறிவு இருக்கா, ஏண்டா இப்படி லூஸு மாதிரி பண்றே?' போன்ற வார்த்தைகளைத் தவிருங்கள். குழந்தைகளுக்குத் தாங்கள் பேசுவது சரியா தவறா என யோசித்துப் பேசத் தெரியாது. `ஆமாம்... அறிவு இருக்கு. `நீதான் லூஸு' போன்ற பதில்களைக் குழந்தைகள் சொல்வதைக்கேட்டுப் பின்னர், வருத்தப்பட்டுப் பலனில்லை. எனவே, அன்பான தொனியில், சரியான வார்த்தைகளை உபயோகித்துச் சுட்டிக்காட்டுங்கள்

3. குழந்தையைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்று கணவனும் மனைவியும் ஆரம்பித்து யார் கண்டிக்கும் முறை சரி என்ற விவாதத்தில் இறங்கக் கூடாது. இது போன்ற சூழலில் குழந்தைகள் தங்களின் தவறுகளை மறந்து பெற்றோர்களின் விவாதத்தைக் கவனித்து அதை மனதில் பதியவைத்துக்கொள்வர்.

4. குழந்தைகள் விவாதம் செய்யத் தொடங்கும்போதெல்லாம், முதலில் பொறுமையாக, முகத்தில் கோபத்தைத் தேக்காமல், குழந்தை சொல்வதைக் கேளுங்கள். ஏனென்றால், கேட்கும் மற்றும் புரிந்துகொள்ளும் மனப்பாங்கு குறையுமிடத்தில்தான் விவாதிக்கும் அல்லது எதிர்த்துப் பேசும் மனப்பாங்கு மேலோங்கும். எனவே, எந்தளவுக்குக் குழந்தைகளுடன் நாம் விவாதத்தைத் தவிர்க்கிறோமோ, அந்தளவுக்குக் குழந்தைகளிடம் அந்தப் பழக்கம் வளர்வதை நாம் தவிர்க்கலாம்

 5. குழந்தைகள் ஒரு தவறு செய்யும்போதோ அல்லது உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்ளாதபோதோ `எதுக்காக இப்படிப் பண்ணினே சொல்லு' என்று உடனே கேட்டு துன்புறுத்தாமல் சற்று அமைதியாகச் சூழ்நிலையைக் கையாள்வது நல்லது. உங்கள் கேள்விக்குப் பதில் தெரியாமல், தங்களைச் சரியென்று உணர்த்தக் குழந்தைகள் வாதாடத்தொடங்கும்.

                                                                                                      குழந்தைகள்

 6. `Sorry, அப்பா/அம்மா மேலதான் தப்பு, அப்படி நாங்க செல்லத்துக்கிட்ட பேசியிருக்கக் கூடாது, நீங்களும் இனிமே எங்ககிட்ட இப்படி வாயாடக் கூடாது சரியா செல்லம்' என்று மனதை மயிலிறகால் வருடும் வார்த்தைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள்.

7. `அப்படியே அவங்க அப்பா மாதிரியே பேசறா பாருங்க!'னு ஆரம்பத்தில் நாம் குழந்தை பேசும் எல்லா விதமான பேச்சுகளையும் ரசிப்பது இயல்பு. ஆனால், அதுவே சில நேரங்களில் நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தக்கூடும். ஆகவே, குழந்தைகள் முன்னிலையில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

8. பெற்றோர்கள் குழந்தைகளோடு பேசும்போது மட்டுமல்லாமல் அவர்கள் முன்னிலையில் நாம் பிறரோடு பேசும்போதும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கணவன் - மனைவி  குழந்தைகள் முன்னிலையில் பேசிக்கொள்ளும்போது ஆரோக்கியமான உரையாடலாக அதை அமைத்துக்கொள்வது நல்லது.

இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தையிடம் மாற்றத்தை உணர்வது உறுதி.


டிரெண்டிங் @ விகடன்