வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (05/11/2018)

கடைசி தொடர்பு:15:45 (05/11/2018)

தீபாவளியை டேஸ்ட்டியாகக் கொண்டாட ஸ்பெஷல் நான்வெஜ் ரெசிப்பிகள்..! #Recipes

தீபாவளி அன்று அசைவம் ருசிக்கும் அசைவப் பிரியர்களுக்காக, டேஸ்ட்டியான ஸ்பெஷல் நான்வெஜ் ரெசிப்பிகளைத் தருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா.

1. கிராமத்து கொத்துக்கறிக் குழம்பு

தேவையானவை:

 கொத்துக்கறி - 250 கிராம் 

 தேங்காய் - அரை மூடி 

 தக்காளி - 2

 சின்னவெங்காயம் - 10

 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் 

 புதினா இலை - சிறிதளவு

 பச்சை மிளகாய் - 2

 இஞ்சி - 2 இன்ச் துண்டு

 பூண்டு - 3

 காய்ந்த மிளகாய்  - 10

 மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன் 

 கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன் 

 பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன் 

 ஏலக்காய் - 4

 கிராம்பு - 4

 பட்டை - ஒன்று 

 சீரகம் - அரை டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 எலுமிச்சை  - அரை மூடி 

 உப்பு - தேவையான அளவு

 நெய் - 1 டேபிள்ஸ்பூன் 

 எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

கொத்துக்கறியை, தண்ணீரில் அலசி வைக்கவும். தேங்காயைத் துருவி 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும். இஞ்சி-பூண்டை நன்றாகத் தட்டி வைத்துக்கொள்ளவும் (வேண்டுமானால் விழுதாக அரைத்துக்கொள்ளலாம்). மசாலா தயாரிக்க, அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்துச் சூடானதும் மல்லி (தனியா), பொட்டுக்கடலை, சீரகம், காய்ந்த மிளகாய், கசகசா அனைத்தையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்கு வாசனை வரும்வரை வதக்கவும் (கருகிவிட்டால் சுவை, மணம் இல்லாமல் போய்விடும் கவனம்). அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். இந்த விழுதை, எடுத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலில் கலந்து வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தட்டிய இஞ்சி-பூண்டு (அல்லது பேஸ்ட்) சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா இலைகளைச் சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, கழுவி வைத்துள்ள கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாக 2 நிமிடங்கள் வதக்கவும். கறிக் கலவையில் தேங்காய்ப்பால்-விழுதுக் கலவையைச் சேர்த்துக் கிளறிவிட்டு குக்கரை மூடி 10 - 12 நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்து, பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கிவிட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

பொட்டுக்கடலை குழம்பின் சுவையைக் கூட்டும்; குழம்பின் அடர்த்தியையும் அதிகரித்துக் கொடுக்கும்.

ரெசிப்பி

2. கொத்துக்கறி ஸ்பைஸி மசாலா

தேவையானவை:

 கொத்துக்கறி - 500 கிராம் 

 தக்காளி - 2

 பெரிய வெங்காயம் - 2

 கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் 

 புதினா இலை - சிறிதளவு

 பச்சை மிளகாய் - 2

 இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன் 

 ஏலக்காய் - 5

 பிரிஞ்சி இலை - ஒன்று

 பட்டை - ஒரு சிறு துண்டு

 அன்னாசிப்பூ - 1

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் 

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் 

 சீரகம் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் 

செய்முறை:

கொத்துக்கறியை தண்ணீரில் அலசி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா இலைகளையும் சேர்த்து இலைகள் சுருங்கும்வரை வதக்கவும். தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். வதக்கிய கலவையுடன் கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 2 நிமிடங்கள் வதக்கவும். 2 கப் தண்ணீர் விட்டு குக்கர் மூடி, வெயிட் போட்டு, 12 நிமிடங்கள் சிறுதீயில் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து பார்த்து, தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கிரேவியாக வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும். பரோட்டா, சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் என அனைத்துக்கும் ஏற்ற சுவையான சைட்டிஷ் இது.

ரெசிப்பி

3. ஆட்டு மூளை  ஃப்ரை 

தேவையானவை:

 ஆட்டு மூளை - ஒன்று

 கடலை மாவு (அ) மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன் 

 சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன் 

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை  டீஸ்பூன்

 சோம்புத்தூள் - அரை  டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

 எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்  (அல்லது) வினிகர் - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டு மூளையை நன்கு கழுவி சிறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, கரம் மசாலாத்தூள், உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும் (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்). இத்துடன் மூளைத் துண்டுகளைச் சேர்த்து பிசறவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், அதிக தீயில் வைத்து மூளைத் துண்டுகளை மொறுமொறுப்பாகப் பொரித்து எடுக்கவும். சிறிது கறிவேப்பிலை தாளித்து அதை இந்த மூளை ஃப்ரையில் தூவிப் பரிமாறவும். 

குறிப்பு:

ஆட்டு மூளையை வாங்கிய உடனே சமைத்துவிட வேண்டும். இது விரைவில் வெந்துவிடும்.

ரெசிப்பி

4. போன்லெஸ் மட்டன் மசாலா

தேவையானவை:

 மட்டன் - 250 கிராம்

 சின்னவெங்காயம் - 10

 பச்சை மிளகாய் - ஒன்று

 தக்காளி - ஒன்று

 கறிவேப்பிலை - சிறிதளவு

 சீரகம் - முக்கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள்  - 2 டீஸ்பூன்

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை  டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால்  டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - கால்  கப்

 செய்முறை:

மட்டனை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். கொழுப்பு உள்ள பீஸ் என்றால் சுவையாக இருக்கும். குக்கரில் மட்டன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி வேகும்வரை வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாடை நீங்கியதும் வேகவைத்த மட்டன் துண்டுகள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் வற்றும்வரை வேகவைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பிரியாணி, தோசை, ஆப்பம், சாதம், இட்லியுடன் பரிமாறவும்.

ரெசிப்பி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்