வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (05/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (05/11/2018)

நூடுல்ஸ் பக்கோடா, நூடுல்ஸ் பீட்சா... வித்தியாசமான நூடுல்ஸ் ரெசிப்பிகள்..! #Recipes

ட்டெனச் சமைத்துவிடக்கூடிய உணவுகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ்தான். அவசர உணவு என்பதைத் தாண்டி அவசிய உணவாக நூடுல்ஸை இடம்பெறச் செய்யும் வகையில், புதுமையான சுவை ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். 

1. தாய் கிரிஸ்பி வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை:

கிரிஸ்பி நூடுல்ஸ் செய்ய:

 ரைஸ் நூடுல்ஸ் - ஒன்றரை கப்

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

வெஜ் டாப்பிங் செய்ய:

சிவப்பு முட்டைகோஸ் துருவல் - கால் கப்

 முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்

 ஆய்ந்த புரோக்கோலி பூக்கள் - அரை கப் 

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்

 உப்பு - தேவையான அளவு

சாஸ் செய்ய:

 சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

 புளி விழுது - ஒன்றரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க:

 வறுத்த வேர்க்கடலை (ஒன்றிரண்டாகப் பொடித்தது) - 2 டேபிள்ஸ்பூன்

 நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன் (வெங்காயத்தையும் சேர்த்து நறுக்கவும்)

செய்முறை:

புரோக்கோலி பூக்களை வெந்நீரில் போட்டு எடுத்து, தண்ணீரில் அலசி எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, ரைஸ் நூடுல்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, லேசான பழுப்பு நிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். அதை எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில்  வைத்து அதிகப்படியான எண்ணெயை நீக்கவும்.

அகலமான கடாயில் எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் முட்டைகோஸ், பச்சைப் பயறு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பிறகு புரோக்கோலி, உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். கடாயில் சாஸ் செய்யக் கொடுத்துள்ள பொருள்களுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு இறக்கவும் (நடுநடுவே கிளறிவிடவும்). பரிமாறும் தட்டில் பாதியளவு நூடுல்ஸைப் பரப்பவும். அதன் மீது பாதியளவு வெஜ் கலவையைப் பரப்பவும். மேலே பாதியளவு வேர்க்கடலை, வெங்காயத்தாள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இன்னொரு தட்டிலும் இதேபோல் செய்துகொள்ளவும்.

 

நூடுல்ஸ்

 

2. ஹனி நூடுல்ஸ் வித் வெனிலா ஐஸ்க்ரீம்

தேவையானவை:

நூடுல்ஸ் செய்ய:

சமோசா பேட்டீஸ் - 4 (மெல்லிய, நீளத் துண்டுகளாக்கவும்)

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

சாஸ் செய்ய:

சர்க்கரை, தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

வறுத்த எள் - ஒரு டீஸ்பூன்

பரிமாற:

 வெண்ணிலா ஐஸ்க்ரீம் - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு பேட்டீஸ் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டுச் சூடாக்கி, சர்க்கரையைச் சேர்த்துக் கரையவிடவும். அதனுடன் தேன், எள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைத்துக் கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். இதுவே சாஸ்.பரிமாறும் தட்டில் பொரித்த நூடுல்ஸை (பேட்டீஸ் துண்டுகள்) பரப்பவும், அதன் மீது சாஸ் ஊற்றி, மேலே ஐஸ்க்ரீம் வைத்துப் பரிமாறவும்.

 

நூடுல்ஸ்

 

3. செஷ்வான் நூடுல்ஸ் தோசை

தேவையானவை:

 நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (டேஸ்ட் மேக்கருடன் கூடியது)

 தோசை மாவு - ஒரு கப்

 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து ஒன்றரை நிமிடம் வேகவிடவும். பிறகு நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ள மசாலாவை (டேஸ்ட் மேக்கர்) சேர்த்து, நூடுல்ஸ் நீரை உறிஞ்சிக்கொள்ளும் வரை கிளறி இறக்கி, ஒரு பவுலுக்கு மாற்றவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, மேலே சிறிதளவு வெண்ணெயைப் பரப்பவும். அதன் மீது செஷ்வான் சாஸ் தடவி, நடுவே வேகவைத்த நூடுல்ஸை வைக்கவும். தோசையை மடித்து எடுத்துப் பரிமாறவும்.

 

நூடுல்ஸ்

 

4. நூடுல்ஸ் பக்கோடா

தேவையானவை:

 நூடுல்ஸ் - ஒரு பாக்கெட் (டேஸ்ட் மேக்கருடன் கூடியது)

 கேரட், குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - அரை கப்

 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 கடலை மாவு - அரை கப்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நூடுல்ஸை மட்டும் வேகவிட்டு இறக்கி வடிகட்டவும். அகலமான பவுலில் கேரட், குடமிளகாய், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, உப்பு, நூடுல்ஸ் மசாலா (டேஸ்ட் மேக்கர்) சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வடிகட்டிய நூடுல்ஸ் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். நூடுல்ஸ் கலவையை ஸ்பூனில் எடுத்து மெதுவாக பக்கோடாக்கள் போல் செய்து கவனத்துடன் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பக்கோடாக்களைச் சுத்தமான கிச்சன் டவலில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

 

நூடுல்ஸ்

 

5. நூடுல்ஸ் பாம்

தேவையானவை:

 நூடுல்ஸ் பாக்கெட் - ஒன்று

 வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 (மசிக்கவும்)

 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கைப்பிடி அளவு

 கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைக்கவும். அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி தனியே வைக்கவும். வேகவைத்த நூடுல்ஸ் உடன் சோள மாவு சேர்த்து, நூடுல்ஸ் உடைந்துவிடாமல் கவனமாகப் பிசிறவும். உருளைக்கிழங்கு கலவை உருண்டைகளின் மீது நூடுல்ஸைச் சுற்றவும். பிறகு லேசாக அழுத்தவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

 

நூடுல்ஸ்

 

6. நூடுல்ஸ் சமோசா

தேவையானவை:

 நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்

 மைதா மாவு - 2 கப்

 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்

 காய்கறிக் கலவை (நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், குடமிளகாய்) - ஒரு கப்

 தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்

 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் சிறிதளவு  எண்ணெய்விட்டு எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும். நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைத்து, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மைதா மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்த்து இரண்டாக நறுக்கவும். ஒவ்வொரு அரை பாகத்தின் நடுவிலும் சிறிதளவு நூடுல்ஸ் கலவையை வைத்து முக்கோணமாக மடித்து ஓரங்களை அழுத்தி ஒட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுச் செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.

 

நூடுல்ஸ்

 

7. நூடுல்ஸ் பீட்சா

தேவையானவை:

 நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்

 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

 கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்

 மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

 மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 3 டீஸ்பூன்

 சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

 சீஸ் துருவல் - அரை கப்

 பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைத்து ஒரு பவுலுக்கு மாற்றவும். சோள மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பேனை (pan) காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டுத் தடவவும். அதன் மீது பாதியளவு நூடுல்ஸ் கலவையைப் பரப்பவும். அடுப்பைச் சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். பிறகு திருப்பிப் போட்டு, பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது பாதியளவு வெங்காயம், குடமிளகாய், தக்காளி, சீஸ் துருவல், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் தூவி மூடிபோட்டு, சீஸ் உருகும் வரை வேகவிடவும். பிறகு பாதியளவு உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இதேபோல் இன்னொரு பாதி நூடுல்ஸ் கலவையிலும் பீட்சா செய்துகொள்ளவும்.

நூடுல்ஸ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க