வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/11/2018)

தமிழர்களின் வரலாற்றை மீட்டு நிற்கும் பண்பாட்டுக் கண்காட்சி!

உலகமயமாதல் என்கிற கருத்து விவாதிக்கப்பட்டதிலிருந்து கலாசாரத்தின் மீதான கேள்விகளும் அதிகமாக விவாதிக்கப்பட்டன. குறிப்பாக பாரம்பர்யமிக்க கலாசாரத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்த அச்சம் கலாசாரக் காவலர்களை தொற்றிக்கொண்டது என்றே கூறலாம். இந்த அச்சம் தமிழகப் பண்பாட்டுக் காவலர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். ஒருவகையில் சிந்தித்துப் பார்த்தால், உணவு, உடை முதல் வாழ்க்கையின் பல விஷயங்கள் வேறொரு கலாசாரத்துக்குத் தள்ளப்பட்டதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட வேளைகளில் நமது கலாசாரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டிய நிலையில் இந்தக் கலாசாரம் பற்றி பேசுபவர்கள் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, நமது கலாசாரத்தைத் தெரிந்துகொள்ள `தமிழகப் பெண்கள் செயற்களம்' என்ற அமைப்பு நடத்திய தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சியைப் பற்றிப் பார்ப்போம்.

கண்காட்சி ஆல்பத்தை காண க்ளிக் செய்க....

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்ட வளாகத்தில்தான் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் கா.மு.சேகர் திறந்துவைத்தார். பன்னிரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் “உலகம் தோன்றியது முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரையிலான தமிழர் வரலாறு, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் இசைக்கருவிகள், சிறு வயதில் விளையாடியதை நினைவுக்கூரும் விளையாட்டுகள், மறந்துபோன 64 கலைகள், தமிழர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உடல்நலம் காக்கும் தமிழ் மருத்துவ முகாம், மண் சார்ந்த இயற்கை மூலிகைச் செடிகள், தமிழக மாவட்டச் சிறப்புகள், பண்பாட்டுக் கலைகள் அவை சார்ந்த நிகழ்வுகள், சுற்றுலா இடங்கள் இவற்றுடன் பறை இசை அரங்கம், சிலம்பம் அரங்கம், தமிழில் ஊர்தி எண்கள் எழுதும் முகாம், தமிழ் கையெழுத்து முகாம், தமிழக மரபு உணவுக் கடைகள்” உள்ளிட்ட பல அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சியைப் பற்றி தமிழகப் பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் இசைமொழி நம்மிடம் பேசும்போது, “தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் விளையாட்டுகள், மரபு உணவுகள், ஆயிரங்காலத்துக்கு முன்பிலிருந்தே இருக்கும் இசைக்கருவிகள் மற்றும் கலைகள் இலக்கிய மற்றும் இலக்கண நூல்களை விளக்கங்களோடு வைத்திருக்கிறோம். இன்றைய தலைமுறை அறுபத்தி நான்கு கலைகள் என்னவெல்லாம் என்று அறிந்திருக்கமாட்டார்கள் அதையும் நாங்கள் காட்சிப்படுத்தியுள்ளோம். 

கண்காட்சி ஆல்பத்தைக் காண க்ளிக் செய்க....

இவையெல்லாமே, மறந்துகொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் கண்காட்சி மூலமாகக் காட்சிப்படுத்தி வருகிறோம். இன்றைக்கு நமது பண்பாடு, மொழி எல்லாமே மற்ற நாடுகளின் கலாசாரத்தோடு இணைந்து குழம்பி இருக்கிறது. நமது உண்மையான கலாசாரத்தை இந்தக் கண்காட்சி மூலம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தலைமுறைகள் இதை உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

செம்மொழி ஆய்வு நிறுவனம் மூலமாகவும் தமிழ் வளர்ச்சி நிறுவனம் மூலமாகவும் பலமுறை அரசாங்கத்தின் உதவியைக் கண்காட்சி நடத்த நாடினோம். அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் நிறுவனம் சார்ந்து பல கஷ்டங்களுக்கு உட்பட்டுதான் இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறோம்” என்றார். 

கண்காட்சி ஆல்பத்தைக் காண க்ளிக் செய்க...

கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விநாடி-வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கியும் ஊக்குவிக்கப்பட்டது. கண்காட்சி குறித்து பார்வையாளர்கள், மாணவர்கள் நம்மிடம் பேசும்போது, “நம்முடைய கலாசாரம் நம்மை வியக்கவைக்கிறது. எல்லா அரங்குகளுமே மிக அழகாகப் புதுப்புது விஷயங்களை நமக்குக் கூறுகிறது” என்றனர். 

தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர் உட்பட சுமார் 50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கண்காட்சியானது நவம்பர் 2 முதல் 4-ம் தேதிவரை நடைபெற்றது. வரலாற்றைப் படிப்போம்! வரலாற்றைப் படைப்போம்! என்கிற முழக்கத்தோடும், முழங்கிக்கொண்டிருக்கும் சங்குகளோடும் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.