வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (06/11/2018)

கடைசி தொடர்பு:15:56 (06/11/2018)

விவசாயத்துக்கு லாயக்கில்லாத உவர்மண்... மாற்றுத்திட்டத்தில் கலக்கும் இருதயபுரம்!

விவசாயத்துக்கு லாயக்கில்லாத உவர்மண்... மாற்றுத்திட்டத்தில் கலக்கும் இருதயபுரம்!

ந்தப் பண்டிகையானாலும், கொண்டாட்டமானாலும் கலர் கலர் கோலங்களில்தான் தொடங்குகின்றன. பட்டாசுக்குச் சிவகாசியும், பட்டுக்குக் காஞ்சிபுரமும் போல கோலமாவுக்கு இருதயபுரம் ஃபேமஸ். ஒரு கிராமத்தில் பல விதமான சிறுதொழில் இயங்கும். ஆனால், இருதயபுரத்தில் எல்லோருக்கும் ஒரே தொழில்தான். கோலமாவு தயாரிப்பது. இங்கு வீட்டுக்கு ஒரு கம்பெனி. எல்லோருமே முதலாளிகள், எல்லோருமே தொழிலாளிகள். வண்ண வண்ண கோலமாவுகள் எல்லா மாதமுமே விற்பனையானாலும் மார்கழி மாதம் இவர்களுக்கான சீசன். மார்கழி வந்தா எல்லா வீட்டிலுமே சந்தோஷம்தான் என்கிறார்கள் இந்தக் கிராமத்து வாசிகள்.

இருதயபுரம் கிராமம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ‘இருதயபுரம்’ எனும் சிறு கிராமம். இவர்களின் உழைப்பில் உருவாகும் வண்ண கோலமாவுகளுக்கு திருச்சி, சென்னை, கோவை என எல்லா இடங்களிலும் வரவேற்பு உள்ளது. எதற்கும் உதவாத மண் ‘உவர் மண்’ எனக் கூறுவதுண்டு. ஆனால், அதே உவர் மண்ணைக் கொண்டு இவர்கள் செய்யும் கோலமாவுகளின் வண்ணக் கலர்களோ பல. இருதயபுரம் கிராமத்தை சுற்றி ஒரு ரவுண்டு அடித்துக்கொண்டிருந்த போது கோலமாவு உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அந்த கிராமத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணிதாஸ் என்பவரிடம் பேசினோம்.

 “எங்கள் கிராமம் உருவானதே இந்தக் கோலமாவு தொழில் வழியாகத்தான். எங்கள் ஊரில் எங்கும் விவசாயம் செய்ய முடியாது. எல்லாமே உவர்மண். தண்ணீர் வசதி கூட அதிகம் இல்லை. அதன் காரணமாகவே இங்கு விவசாயம் என்பது இல்லாமல் போனது.

எங்கெங்கும் வண்ண கோலங்கள்

எழுபது வருடத்திற்கு முன்பாக  ஒருவர் விவசாயம் செய்ய முடியாத இந்த மண்ணைச் சலித்து வண்ணக்கலர்களை கலந்து விற்பனை செய்ய, மக்களும் அதிகம் விரும்பி வாங்கத் துவங்கியுள்ளனர். அது பெரும் லாபகரமான தொழிலாக இருக்க, அவரின் நெருங்கிய உறவினர்கள், அருகில் நிலம் வைத்திருப்பவர்கள், எனப் பலர் குடிபெயரத் துவங்கி இந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள். கோலமாவு தயாரிப்பது இப்படிதான் ஊருக்குள் வந்தது” என்றார்.

வேளாங்கண்ணிதாஸ்

தற்போது இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. எல்லோரும் இதே தொழிலைத்தான் செய்துவருகிறார்கள். வண்ண கோலமாவுகள் அதிகம் விற்பனையாகும் காலம் என்றால் கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள். தற்போது தீபாவளிக்கும் மக்கள் விரும்பி வாங்குவதால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கோலமாவுகளை தயாரித்து வைக்கிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். விசேஷமான நாள்கள் என்றால் ஒரு வாரம் முன்னதாகவே சுற்றுப்புற இடங்களில் மிதிவண்டியிலும்,.மோட்டார் சைக்கிள்களிலும் சென்று விற்பனை செய்து வருவார்களாம். இது மட்டுமல்ல சென்னை, திருச்சி, மதுரை போன்ற இடங்களுக்கும் இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

கோலமாவு விற்பனையில் அசத்தும் கிராமம்

“நாங்கள் இதைக் கிலோ கணக்கில் எல்லாம் கொடுப்பதில்லை. படி கணக்கில்தான். கால்படி(1/4) கோலமாவை பத்து  ரூபாய்க்குக் கொடுப்போம். பக்கத்தில் இருக்கும் சில கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டும் பழைய இரும்பு, தகரம், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் கொண்டு அவற்றினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு வண்ண கோலமாவுகளை அளிப்போம். பின்னர் அவர்களிடம் வாங்கிய பழைய பொருட்களை, பழைய பொருள் வாங்கும் கடைகளில் விற்று ரூபாயாக மாற்றிக் கொள்வோம். இந்தத் தொழில் மூலம் வரும் வருமானத்தை வைத்து எங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டும் எங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் போதுமானதாக உள்ளது. இந்தக் குடிசை தொழிலில் நாங்கள்தான் முதலாளி, நாங்கள்தான் தொழிலாளி என்பதால் ஒவ்வொருவரும் இதை மனத்திருப்தியுடன் செய்கிறோம்" என்றார் வேளாங்கண்ணிதாஸ்.


டிரெண்டிங் @ விகடன்