வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (07/11/2018)

`2030-க்குள் ஓசோன் படலம் சரியாகிவிடும்!' - ஐ.நா தகவல்

சூரிய ஒளியில் இருந்து பூமியை பராமரிக்கும் ஓசோசன் படலத்தில் ஏற்பட்ட துளை மெதுவாகச் சரியாகி வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 

ஓசோன்

Photo Credits : Twitter/@WYeates

சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாகப் புவியை வந்தடைவதால் இங்கு வாழும் உயிரினங்களுக்குப் பல குறைபாடுகள் ஏற்படும். தொழிற்சாலை புகை, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்றவை அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் 1970-ம் ஆண்டுகளில் இருந்து ஓசோன் படலத்தின் அடுக்குகளில் பாதிப்பு ஏற்படுவதாகப் பால் குருட்சன் என்ற அறிவியலாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து வருடம் தோறும் செப்டம்பர் 16-ம் தேதி ஓசோன் படல பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஓசோன் படலத்தை பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளை குறைப்பதாக அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன. 

இந்நிலையில் தற்போது ஓசோன் தொடர்பாக ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘ ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் மெதுவாகச் சரியாகி வருகிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஓசோன் படலத்தின் மேல் அடுத்து முற்றிலும் சரியாகிவிடும். அண்டார்டிக் பகுதியில் இருக்கும் துணைகள் 2060-ம் ஆண்டுக்குள் பழைய நிலையை அடைந்துவிடும். தற்போது மத்திய நாடு பகுதிகளில் இந்த பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-களில் ஓசோன் படலம் அபாயமான நிலையில் இருந்தது. பிறகு உலக நாடுகளின் உறுதியால் தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது. 

“இது கேட்பதற்கே மிகவும் நல்ல செய்தி. ஒருவேளை ஓசோன் படலத்தின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்திருந்தால் நாம் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்” என நாசாவின் அறிவியலாளர் பால் நியூமென் தெரிவித்துள்ளார்.