வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/11/2018)

கடைசி தொடர்பு:17:40 (07/11/2018)

சுற்றுலா பயணிகளை கவர சிறப்பு ரயில்கள்!- ரூ.15,830 முதல் ரூ.4,725 வரை கட்டணம்

`பாரத தரிசனம் சிறப்பு ரயில் சுற்றுலா’ என்கிற திட்டத்தின் கீழ் இந்தியன் ரயில்வே துறையும், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து ஆண்டுதோறும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையுள்ள பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு குறைந்த செலவில் மக்களை அழைத்துச்செல்கிறது. இந்த ஆண்டு இந்த சுற்றுலாவானது வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே உணவு மற்றும்  சுற்றுலாக் கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய IRCTC-யின் கூடுதல் பொது மேலாளர்  எல்.ரவிக்குமார், ``IRCTC-யானது கடந்த 2005-லிருந்து பாரத தரிசனம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகளுடன் 330-க்கும் அதிகமான சுற்றுலாக்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டும் பாரத தரிசன சுற்றுலா என்கிற பெயரில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சுற்றுலாவை நடத்த உள்ளது. ஏழைகளுக்கும் பயன்படும் வகையில்  ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 900 ரூபாய் என்கிற குறைந்த விலையில் இந்தச் சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. 

முதல் சிறப்பு ரயிலானது ராமாயண யாத்திரா என்கிற பெயரில் மதுரையிலிருந்து 14.11.2018 அன்று மதுரையிலிருந்து புறப்பட்டு ஹம்பி (கர்நாடகா), நாசிக் (மகாராஷ்டிரா), சித்திரக்கூடம் (உ.பி), தர்பங்கா (பீகார்), சீதாமார்ஹி (பீகார்), அயோத்தியா (உ.பி), நந்திகிராமம் (மே.வ), அலகாபாத் (உ.பி), சிருங்க வெற்பூர் (உ.பி) உட்பட தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிப்பட்டினம் ஆகிய பல இடங்களுக்கும் சென்று மதுரையிலேயே முடிவடைகிறது. 15 நாள்கள் நடக்கும் இந்தச் சுற்றுலாவின் மொத்த கட்டணமாக 15,830 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிறப்பு ரயிலானது டிசம்பர் மாதம் 2-ம் தேதி மதுரையிலிருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், சேலம், பெங்களூர், சென்னை சென்றால் வழியாக ஹைதராபாத், ஔரங்காபாத், அஜந்தா, எல்லோரா, மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களுக்குச் செல்கிறது. 10 நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்துக்கு ரூ.10,100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது சிறப்பு ரயில், மதுரையிலிருந்து 14.12.2018 அன்று புறப்படுகிறது. இந்தக் கோவா ஸ்பெஷல் ரயிலானது திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், சென்னை சென்ட்ரல், சேலம், கோவை வழியாக கோவா சென்றடைகிறது. ஐந்து நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு 4,725 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்காவது ரயிலானது மதுரையிலிருந்து 14.12.2018 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, சென்னை, சேலம், கோவை வழியாக மூகாம்பிகை மற்றும் கர்நாடகாவின் பல கோயில்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஐந்து நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு 6,930 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்குத் தேவையான பஸ் வசதிகள், உணவு வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவையும் எங்கள் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் கலந்துகொண்டால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிப் பார்க்க முடியும்" என்றார்.

இந்தச் சுற்றுலாவுக்குச் செல்ல சென்னை, மதுரை, கோவை மற்றும் கோயமுத்தூரில் உள்ள சுற்றுலா மற்றும் தகவல் மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஐ.ஆர்.சி.டி.சியின் இணைய தளங்களிலும் மக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.