வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:15:05 (08/11/2018)

`இனிமேல் இதுதான் உன் கெட்டப்!' - கோயில் யானை செங்கமலத்தின் `பாப்' கட்டிங் ஸ்டைல்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கமலத்துக்கு, அதன் பாகன் பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டி மேக்கப் போட்டு பராமரித்துவருகிறார். எப்போதும் இந்த கெட்டப்பிலேயே வலம்வருகிறது இந்த யானை. கோயிலுக்கு வரும் பக்தர்கள், இதைப் பார்த்து ரசிப்பதோடு, பாப் கட்டிங் செங்கமலம் என்றே அழைத்து பாகனையும் பாராட்டிச் செல்கின்றனர். ``எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் மூத்த பிள்ளை இந்த யானைதான் என்பதால், அழகாக தலைமுடியை வெட்டிவிட்டுள்ளேன்'' என்று பாகன் கூறுகிறார்.

கோயில் யானை

மன்னார்குடியில், பெரிய கோயில் என்றழைக்கப்படுவது  ராஜகோபால சுவாமி கோயில். சிறப்பு மிக்க இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள், முகப்பில் நிற்கும் யானை செங்கமலத்தைப் பார்த்து வியக்கிறார்கள். மகிழ்ச்சியுடன் செங்கமலத்தோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் கூதுகலம் அடைகின்றனர். இந்த யானை, மனிதர்களைப்போலவே பாப் கட்டிங் ஸ்டைலில் தலை முடியை வெட்டிக்கொண்டு பார்ப்பதற்கு  அழகாக  இருப்பதே காரணம். மேலும், இந்த யானை,  'பாப் கட்டிங் செங்கமலம்' என்றே அப்பகுதியில் எல்லோராலும் அழைக்கப்படுகிறது. யானைக்கு பாப் கட்டிங் வெட்டிவிடுவதோடு, அதைத் தன் குழந்தையைப் போல பராமரித்துவரும் பாகன் ராஜகோபாலையும்  மகிழ்ச்சி பொங்க அனைவரும் பாராட்டுகின்றனர்.

குளிக்கும் கோயில் யானை செங்கமலம்

யானையைப் பார்ப்பதற்கும் பாகனிடம் இதுகுறித்துப் பேசுவதற்கும் கோயிலுக்குச் சென்றோம். ராஜகோபால், யானை செங்கமலத்தை குளிப்பாட்டுவதற்காக அழைத்துச்சென்றார். யானைக்காக அமைக்கப்பட்ட சவரில் நீர் ஊற்றுகிறது. அதில், செங்கமலம் ஆனந்தமாக குளிக்கத் தொடங்குகிறது. சற்று நேரத்தில் ராஜகோபால் உட்கார் எனச் சொல்ல, முன் கால்கள் இரண்டையும் மடக்கிக்கொண்டு உட்கார தலைமுடிக்கு ஷாம்பு போட்டு அழுக்குப் போக தேய்துக் குளிப்பாட்டுகிறார். ஷாம்பு இல்லாமல் குளிக்கவே வரமாட்டாள் என்றும் சொல்கிறார். குளித்து முடிந்ததும், முடியை நன்கு துவட்டிவிட்டு, குழந்தைக்கு சீவி விடுவதுபோல சீவிவிடுகிறார். கொஞ்சம்கூட ஆடாமல் தலையை காட்டிக்கொண்டு  நிற்கிறது. மேக்கப் முடிந்த பின்னர், தன் இடத்துக்குச் செல்லும் செங்கமலத்தைப் பார்த்து எவ்வளவு ஃப்ரஷ்ஷா இருக்கு பாரேன் என பக்தர்கள் பரவசமடைகின்றனர்.

`பாப்' கட்டிங் ஸ்டைலில் கோயில் யானை செங்கமலம்

ராஜகோபாலிடம் பேசினோம். ``கடந்த 2003-ம் ஆண்டு கோயிலுக்கு வந்தது இந்த யானை. அப்போதில் இருந்தே  நான்தான் பராமரித்து வருகிறேன். ஆரம்பத்தில் எல்லா யானைகளையும் போல செங்கமலத்தின் முடியையும் பராமரிப்பது இல்லை. அதுவும் தன் முடியை தும்பிக்கையால் பிய்த்து எடுத்துவிடும். முடியும் நிறைய வளர்ந்துகொண்டே இருந்ததால்,  இதை வெட்டிவிட்டு பராமரித்தால் என்ன எனத் தோன்றியது. அதேபோல, நானே பாப் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டிவிட்டு பார்த்தேன். அழகாக இருந்தது. 'இனிமேல் இதான் உன் கெட்டப்; முடியை பிய்க்கக் கூடாது' எனச் சொன்னேன். அதுவும் தலையாட்டியது. கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் ரசித்துப் பாராட்டுகிறார்கள். அதில் கிடைக்கும் உற்சாகம் என்னைத் தொடர்ந்து இதுபோல பராமரிக்கவைத்தது.

தினமும் காலை மாலை என இரண்டு நேரமும் குளித்துவிடும். அதன்பிறகு, தலை சீவி மேக்கப் போடுவதற்கு ஒவ்வொரு தடவையும் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். எனக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்தாலும், என் மூத்த பிள்ளை செங்கமலம்தான். அதனால்தான் அக்கறையாக பெற்ற பிள்ளையைபோல கவனித்துக்கொள்கிறேன். கோயில் நிர்வாகத்திலும்  இதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்'' என்றார். நாம் போட்டோ எடுக்க வேண்டும் என்றதும், 'போட்டோவுக்கு போஸ் கொடு' எனச் சொல்ல, வகை வகையான போஸ்களைக் கொடுத்து நம்மையும் கவர்கிறாள் பாப் கட்டிங் செங்கமலம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க