வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (08/11/2018)

கடைசி தொடர்பு:17:15 (08/11/2018)

தீபாவளி விடுமுறையில் டெங்கு கொசுவை ஒழிக்க களமிறங்கிய பள்ளி மாணவர்கள்!

தீபாவளி

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம்தான். ஆனால், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சற்றே வேறுபட்டவர்கள். அந்தப் பள்ளியில் பல்வேறு சிறப்பு விருந்தினர்களின் பேச்சு, மாணவர்களை நன்கு பண்படுத்தியுள்ளது. அதனால், இந்தத் தீபாவளி விடுமுறையை அந்த ஊருக்கு உபயோகப்படும் விதத்தில் மாற்ற முடிவெடுத்தனர். 

மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிந்துகொண்டு, அந்த ஊரின் பல பகுதிகளுக்குச் சென்று, டெங்கு காய்ச்சல் பற்றியும், அதை வராமல் எப்படித் தடுப்பது என்பது பற்றியும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களின் இந்தச் செயல் ஊரில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சிலர் தங்கள் வீட்டின் அருகே தேங்கியிருக்கும் நீரை அகற்றவும் செய்தனர். இந்த விழிப்பு உணர்வு பற்றி மாணவர்கள் உற்சாகமாகப் பேசுகிறார்கள். 

8-ம் வகுப்பு படிக்கும் மாணவி காயத்ரி: எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் டெங்கு பரவுவது பற்றி சொல்வதைக் கேட்டேன். முதலில் என் வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். எங்கள் வீட்டில் இருக்கும் ஆட்டுக்கல்லில் நீர் தேங்காமல் சுத்தமாக இருந்தது. அதனால், கொசு உற்பத்தியாகாது என்று அப்பாவும் சொன்னார். அப்போதுதான் இன்னொரு எண்ணம் வந்தது. ஒருவேளை மழை பெய்தால் நீர் தேங்கும் இல்லையா. அதனால், ஆட்டுக்கல்லைக் கவிழ்த்துப் போடச் சொன்னேன். அப்பாவும் நான் சொன்னபடியே செய்தார்"

பள்ளி

5-ம் வகுப்புப் படிக்கும் நதியா: என் வீட்டில் தண்ணீர் சேகரித்து வைக்கும் பாத்திரங்களை எப்போதும் கொசு புகாதவாறு மூடியே வைக்க வேண்டும் என்று சொன்னதும், அப்படியே செய்தார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இதைச் செய்யச் சொல்லி வருகிறேன். 

மாணவர்கள் கூட்டமாகச் செல்லும்போது ஒரு மரத்தில் பிளாஸ்டிக் பை தொங்கிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. இதன்மூலம் கொசு உற்பத்தியாகலாம் என்பதால் அதை அகற்றினார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுவதுடன் மாணவர்களின் மனதிலும் இந்த விஷயங்கள் ஆழப் பதிவது உறுதி! இந்த விடுமுறை நிச்சயமாக ஆரோக்கியமானதாக மாறிவிட்டது.