Published:Updated:

`எந்த உதவியானாலும் கேளுங்க; தட்டாமல் செய்றேன்!’ - காலை இழந்தவருக்கு கலெக்டர் கொடுத்த நம்பிக்கை

`எந்த உதவியானாலும் கேளுங்க; தட்டாமல் செய்றேன்!’ - காலை இழந்தவருக்கு கலெக்டர் கொடுத்த நம்பிக்கை
`எந்த உதவியானாலும் கேளுங்க; தட்டாமல் செய்றேன்!’ - காலை இழந்தவருக்கு கலெக்டர் கொடுத்த நம்பிக்கை

`எந்த உதவியானாலும் கேளுங்க; தட்டாமல் செய்றேன்!’ - காலை இழந்தவருக்கு கலெக்டர் கொடுத்த நம்பிக்கை

விகடன் இணையதள செய்தி எதிரொலியால், கால் ஊனமான ஒருவருக்கு செயற்கைக் காலும், உதவித் தொகையும் தொழில் செய்ய வழியும் அரசு சார்பில் கிடைத்திருக்கிறது. இதனால், துயரில் தத்தளித்த அந்த ஏழைக் குடும்பம் மகிழ்ச்சி மத்தாப்பு பூத்துக் கிடக்கிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் திண்டுக்கல் மாவட்ட எல்லையை ஒட்டி இருக்கிறது அ.வெங்கடாபுரம். மிகவும் பின்தங்கிய இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். 45 வயதாகும் இவருக்கு குழந்தை தெரசா என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஊரில் உள்ள சர்ச்சுக்குச் சொந்தமான இடத்தில் சிறிய ஓடுபோட்ட வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்த இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு காலில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் போன அவரிடம் மருத்துவர்கள், 'உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கு. இடது காலை எடுக்கணும்' என்று சொல்ல, மொத்த குடும்பமும் ஆடிப் போயிருக்கிறது. வேறு வழியில்லாமல் வலது காலை எடுக்க சம்மதித்திருக்கிறார். அதோடு, அவரின் இளைய மகன் சுகன் செபாஸ்டியனுக்கு பிறந்ததில் இருந்தே இதயம், நுரையீரலில் பிரச்னை இருந்திருக்கிறது. கடந்த ஆறு மாதம் முன்பு அவனுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக, ஏற்கெனவே காலை இழந்து வருமானம் இன்றி தவித்த பிரான்சிஸ் இன்னும் அல்லாடிப் போனார். சுகன் செபாஸ்டியன் படித்த அந்தக் கிராமத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஷாகுல் ஹமீது முயற்சியில் அவனுக்கு சென்னையில் அறுவைசிகிச்சை நடந்தது.

மூன்று வேளை சாப்பாட்டுக்கே வழியற்று நிர்கதியாக நின்ற இவர்களின் நிலைமையை கடந்த 26.10.2018 அன்று விகடன் இணையதளத்தில், ``அரசாங்கத்துல கொடுத்த செயற்கைக் காலையும் வாங்கிட்டுப் போயிட்டாங்க!" - காலை இழந்தவரின் கலக்கம்!' என்ற தலைப்பில் செய்தி பதிந்திருந்தோம். இந்த செய்தி வெளிவந்ததும் அந்தக் குடும்பத்தின் கண்ணீர் கதை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை அசைத்துப் பார்த்தது. உடனே, அவர் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியை முடுக்கிவிட, அரவக்குறிச்சி பி.டி.ஓ, இன்னும் சில அலுவலர்கள் என்று ஆறுபேர் கொண்ட படையுடன் பிரான்சிஸின் வீட்டு முன்பு போய் நின்றிருக்கிறார். செயற்கை கால் ஒன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டு, அளவு பெரிதாக இருக்கிறது என்று எடுத்துச் செல்லப்பட்டதாக நம்மிடம் பேட்டியில் பிரான்சிஸ் குறிப்பிட்டிருந்தார். கலெக்டர் விட்ட டோஸில் அதைச் சரி செய்து கையோடு எடுத்துப்போன ஜான்சி, அதை ஊழியர்களை வைத்து பிரான்சிஸின் காலில் மாட்டி நடக்க வைத்து அழகு பார்த்தார்.
அதன்பிறகு, நடந்தவை பற்றி பேசிய பிரான்சிஸ்,

 ``ஏழு பேர் வந்ததும் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. `சரி பண்ணி தர்றேன்'ன்னு சொல்லி செயற்கை காலை எடுத்துட்டுப் போய் பல மாசம் ஆவுது. நாயா அலைஞ்சு கேட்டும் அதைச் சரிசெஞ்சு தரலை. ஆனால், விகடன் செய்தி என் நிலைமையைக் கலெக்டர்

பார்வைக்குக் கொண்டு போயிட்டு. உடனே அவர் அதை, சரிபண்ணச் சொல்லி கொடுத்திருக்கிறார். அதோட, எனக்கு மாதாமாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கொடுத்தாங்க. அதை 1,500 ரூபாயாக அதிகரிச்சு கொடுக்கச் சொல்லி இருக்கிறார். அதோடு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக எனக்கு மளிகைக் கடை வச்சு பொழப்பு நடத்திக்க லோன் தர்றதா சொல்லி இருக்காங்க. எதிர்காலமே திக்கற்று நின்ற எங்க குடும்ப நிலைமையை சரிபண்ணிய விகடன் பத்திரிகையையும் மாவட்ட ஆட்சியரையும் நாங்க ஆயுசுக்கும் மறக்கமாட்டோம்" என்றார் நெக்குருகிபோய்.

நம்மிடம் பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், ``விகடன் இணையதள செய்தி லேட்டாகத்தான் என் பார்வைக்கு வந்தது. உடனே, ஜான்சியை அனுப்பி அவங்க குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய சொல்லிட்டேன். இதுமாதிரி விளிம்புநிலை மனிதர்களுக்கு உதவ கரூர் மாவட்ட நிர்வாகம் எப்போதும் காத்திருக்கிறது" என்றார். அதோடு, நம் மூலமாக, ``என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தனாக நினைச்சுக்கச் சொல்லுங்க. தயங்காமல் எந்த உதவியை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேட்கச் சொல்லுங்க. தட்டாமல் செய்றேன்" என்று பிரான்சிஸிடம் சொல்லச் சொன்னார். ஆட்சியரின் அனுசரணை வார்த்தைகளை பிரான்சிஸிடம் தெரிவித்தோம். அதைக் கேட்டதும் பிரான்சிஸ், பேச்சு வராமல் உணர்ச்சிப் பெருக்கில் நா தழுதழுத்தார்!

அடுத்த கட்டுரைக்கு