வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (09/11/2018)

கடைசி தொடர்பு:15:44 (12/11/2018)

என்னது பூமிக்கு மூன்று சந்திரன்களா?! விஞ்ஞானிகளின் திகீர் ஆய்வு

இதுவரைக்கும் ஒரே ஒரு நிலாவை மட்டும் வைத்து கவி பாடிக்கொண்டிருந்த புலவர்களுக்குத் தற்போது போனஸாக இன்னும் இரண்டு நிலவுகள் கிடைக்கவிருக்கின்றன. எப்படி?

என்னது பூமிக்கு மூன்று சந்திரன்களா?! விஞ்ஞானிகளின் திகீர் ஆய்வு

ம்ம பூமிக்கு எத்தனை சந்திரன் இருக்குது பாஸ். இந்தக் கேள்வியை யாராவது உங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். சந்தேகமேயில்லாமல் ஒன்று என்பதுதானே உங்கள் பதிலாக இருக்கும். இந்த உலகத்தில் யாரிடம் கேட்டாலும் இந்தக் கேள்விக்கு சரியாகவே பதில் சொல்வார்கள். நமது சூரிய குடும்பத்தில் வேறு சில கிரகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சந்திரன்கள் இருந்தாலும் நமக்கு இருப்பது சந்திரன் என்ற ஒரே ஒரு துணைக்கோள்தான். அதைச் சிறிய வயதிலிருந்து பார்த்தும் வளர்ந்திருக்கிறோம். ஆனால் இனிமேல் நமது பூமிக்கு ஒரே ஒரு சந்திரன்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் அந்த நினைப்பை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள். ஒருவேளை தொடக்கத்தில் கேட்கப்பட்ட கேள்வி இனிமேல் கேட்கப்பட்டால் அதற்கு நீங்கள் பூமிக்கு மொத்தம் மூன்று சந்திரன்கள் இருக்கின்றன என்று பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

மூன்று சந்திரன் என்று கணக்கில் வைத்துக்கொண்டால் ஒன்றை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்; மீதம் இருக்கும் இரண்டும் எங்கே இருக்கின்றன, இதுவரை நான் அப்படி ஒன்றைப் பார்த்ததே கிடையாதே என்ற கேள்விகள் உங்களுக்கு எழக்கூடும். இவை உங்களுக்கு மட்டுமல்ல வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட பல ஆண்டுகளாக இருந்த கேள்விகள்தாம்.

50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சர்ச்சைக்குத் தீர்வு 

சந்திரன்

நமக்குத் தெரிந்த சந்திரனைப் போல மற்ற இரண்டு சந்திரன்கள் திட உருவம் கொண்டவை அல்ல. அவை தூசிகள் அடங்கிய ஒரு மேகக்கூட்டமாகவே காணப்படுகின்றன. எனவேதான் அவற்றைத் துணைக்கோள்களாக ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்ற சந்தேகம் ஆய்வாளர்களுக்கு இருந்து வந்தது. சொல்லப்போனால் பூமிக்கு மேலும் இரண்டு சந்திரன்கள் இருக்கின்றனவா என்ற விவாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பே இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு வந்தாலும் போலந்து நாட்டைச் சேர்ந்த வானியல் ஆய்வாளரான காஸிமியர்ஸ் கார்டிலெவிஸ்கி (Kazimierz Kordylewski) என்பவர் 1961-ம் ஆண்டில் இந்தத் தூசி மேகக்கூட்டங்களை முதலில் கண்டறிந்தவர் என அறியப்படுகிறார். எனவே இந்த தூசு மேகங்கள் அவரது பெயராலேயே அழைக்கப்படுகின்றன. அவர் இந்த மேகங்களைக் கண்டுபிடித்து விட்டாலும் கூட அது பல வருடங்களாகக் கேள்விக்குள்ளாக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்தது. 

மேகக்கூட்டங்கள் சந்திரனாக ஏற்றுக்கொள்ளப்படக் காரணம் என்ன ? 

சந்திரன்

காஸிமியர்ஸ் கார்டிலெவிஸ்கி கண்டறிந்த மேகக் கூட்டங்களை சந்திரன் என்று வரையறைக்குள் கொண்டு வருவதற்குப் பல வருடங்களாக வானியல் அறிஞர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான சரியான ஆதாரங்கள் தற்பொழுதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஹங்கேரியாவைச் சேர்ந்த வானியலாளர்களும் இயற்பியலாளர்களும் இறுதியாக பூமியைச் சுற்றி மேலும் இரண்டு சந்திரன்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் அவை முழுமையாகத் தூசியால் ஆனவை எனவும் தெரிவித்திருக்கிறார்கள். ராயல் ஆஸ்ட்ரானாமிக்கல் சொஸைட்டி (Royal Astronomical Society ) இது தொடர்பாக மேலும் பல குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்த மேகக்கூட்டங்கள் பூமியிலிருந்து சரியாக 2,50,000 மைல் தொலைவில் இருக்கின்றன. இது கிட்டத்தட்ட சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்துக்குச் சமமாக இருக்கிறது. இந்த மேகக்கூட்டங்களின் அளவு பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதாக இருக்கிறது என்பதையும் கண்டறிந்துள்ளார்கள். இவை அவ்வளவு பெரிதாக இருந்தாலும் அவை சிறு சிறு துகள்களால் ஆனவை. சந்திரனைப் போலவே இந்த மேகக்கூட்டத்திற்கும் சுயமாக ஒளிரும் திறன் கிடையாது. இவை சூரிய ஒளியைக் குறைந்த அளவில் பிரதிபலிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து வெளிப்படும் ஒளி மிகக் குறைவாக இருப்பதால் இவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது. இந்த மேகக்கூட்டங்கள் நிலையானவை, பூமியைச் சுற்றி வருகின்றன, மற்றும் ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்பது போன்ற காரணங்களால் இவை சந்திரன்களாக தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. வானியல் அறிஞர்கள் சந்திரன் என ஏற்றுக்கொண்டு விட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.


டிரெண்டிங் @ விகடன்