சினிமா
Published:Updated:

“படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்!”

“படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்!”

வெ.நீலகண்டன் - படங்கள்: எஸ்.தேவராஜன்

ந்து நிமிடம் பேசினால், பத்து வட்டாரச் சொற்கள், ஐந்து பழமொழிகள், நான்கு மரபுத்தொடர்கள் வந்துவிழும். விளைவுகளுக்காக அஞ்சி வார்த்தைகளை மறைக்காமல், மனதில் பட்டதை பளிச்செனப் பேசிவிடும் வெள்ளந்தி மனசுக்காரர். நின்றுபோன எந்தப் பேருந்தையும் உயிர்ப்பித்துவிடும் போக்குவரத்துக் கழக ஊழியர், முந்திரிக்காட்டு விவசாயி... எழுத்தாளர் கண்மணி குணசேகரன்.

நடுநாட்டுக்காரரோடு ஒரு மாலைப்பொழுதில் உரையாடினேன். சிரிப்பு, கோபம், நெகிழ்ச்சி, வருத்தம் என உணர்ச்சிகளின் கலவையாக நீண்டது உரையாடல்...  

“படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்!”

“தமிழில் வட்டாரமொழி எழுதும் முக்கியமான படைப்பாளி நீங்கள். ஆனால், உங்களுக்கு அருகில் 0வசிப்பவர்களே உங்கள் எழுத்தாளுமையை அறியாமல் இருக்கிறார்களே?”

“அது பெரிய கொடுமை. ‘அஞ்சலை’, ‘கோரை’, ‘வந்தாரங்குடி’-ன்னு நான் எழுதுறதெல்லாம் இந்த மக்களோட கதைதான். ஆனா, எங்க ஊர்ல இருக்கிற ஆள்களுக்கே நான் எழுத்தாளர்ன்னு தெரியாது. ‘டெப்போவுல மெக்கானிக்கா இருக்காரே அந்தப் பையனா?’ன்னு கேப்பாங்க. நான் வேலை செய்ற இடத்துலயும், ‘கண்மணி ஏதோ எழுதுறாம்ப்பா’-ங்கிற அளவுலதான் தெரியும். என்ன எழுதுறேனு யாருக்கும் தெரியாது. டிரைவர், கண்டக்டர்கள் பத்தி ‘நெடுஞ்சாலை’ன்னு ஒரு நாவல் எழுதினேன். டெப்போவுல, அதைப்படிக்கச் சொல்லி கெஞ்சிக் கூத்தாடிப் பாத்துட்டேன். ஒரு பய படிக்கலே. ஆரம்பத்தில, கடுமையா கோபம் வரும். ஆனா, இப்போ பழகிருச்சு. இவங்களைச் சொல்லிக் குத்தமில்லை. இந்த நிலவியல் சூழல் அப்படி. எல்லாரும் விவசாயத்தை நம்பியிருக்கவங்க. காலையில் எழுந்திரிச்சா, ‘கொல்லைக்குப் போகலாமா’,  ‘முந்திரிக்குப் போகலாமா?’ன்னு தான் நினைப்பு வரும். அந்தமாதிரி மக்கள், நம்ம புத்தகத்தை வாசிக்கிறதில்லைன்னு வருத்தப்படுறதில ஒண்ணுமில்லை.” 

“இலக்கியக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஏன் இப்படித் தனித்தே இருக்கிறீர்கள்?” 


“அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. நான் வளர்ந்த சூழலும், வாழ்ற வாழ்க்கையும் அப்படி. நாலு பேரோட கலந்து பழகுறதுல சிக்கல். எப்பவும் என்னைச் சுத்தித் துயரம்தான் சூழ்ந்திருக்கு. அம்மா தற்கொலை, மனைவி தற்கொலை, அண்ணன் தற்கொலை... எதிர்பாராத அப்பாவோட மரணம்னு ஏகப்பட்ட இழப்புகள். நான் ஒருத்தன்தான் குடும்பத்தை நகர்த்திக்கிட்டுப் போகணும். படிப்புக்காகக்கூட உளுந்தூர்ப்பேட்டையைத் தாண்டினதில்லை. வேறெங்கையும் ராத்தங்குறது பிடிக்கிறதில்லை. இன்னொரு காரணம், என் வாழ்வாதாரம். விவசாயம் பண்றேன். விவசாயி கவனம் பிசகுனா எல்லாம் மண்ணாப்போயிரும். ஒரு ஏக்கர் முந்திரி இருக்கு. ‘தானே’ புயலுக்கப்புறம் ஒரு ஏக்கர் புஞ்சையிலயும் முந்திரி வச்சிருக்கேன். இதுபோக, வேலைக்குப் போகணும். எழுதவும் செய்யணும். இதையெல்லாம் பாத்துக்கிட்டு, ‘அங்கே கூட்டம், இங்கே கூட்டம்’ன்னு அலைய முடியாது”

“இலக்கியக் கூட்டங்களை விடுங்கள். தமிழகத்தின் எல்லாப் பக்கமும் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் நடக்கின்றன. பல படைப்பாளிகள் அவற்றில் பங்கேற்கிறார்கள். பேசுகிறார்கள். அவற்றிலும் உங்கள் பங்களிப்பு இல்லையே?”

“உண்மையாவே அந்தக் குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கு. ஆனா, ஒரு படைப்பாளி களத்துக்குப் போயி போராடணும்னு இல்லை. எழுத்தாளனோட வேலை, காலத்தைப் பதிவு பண்றது. நெய்வேலிப் பிரச்னையை வச்சு ‘வந்தாரங்குடி’ நாவல் எழுதியிருக்கேன். நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த வேப்பங்குறிச்சி கிராம மக்கள், 8.8.88 அன்னைக்கு ‘வீட்டுக்கு ஒரு ஆளுக்கு வேலை கொடு’-ன்னு போராட்டம் நடத்தினாங்க. அந்தப் போராட்டத்துல ஒரு போலீஸ் ஜீப்பை எரிச்சுட்டாங்க. உடனே காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துச்சு. இதையெல்லாம் சேத்து, அந்த மக்கள் தங்கள் நிலத்தை இழந்து வந்தாரங்குடியா ஆன கதைதான் அந்த நாவல். என்னளவுல என்ன முடியுமோ, அதைச் செய்றேன்...”

“படைப்பாளி வெளிப்படையா இருக்கணும்!”

“படைப்பாளிகள் சமூகத்துக்குப் பொதுவானவர்கள். ஆனால், நீங்கள் சாதி அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்கிறீர்கள். அண்மையில் வன்னியர் சங்கத் தலைவர் குரு இறந்தபோது இரங்கற்பாவே பாடினீர்கள். இது சரியா?”

“பொதுவானவங்களா தங்களைக் காட்டிக்கிறவங்கல்லாம், சமயம் வரும்போது சாதிப்பற்றைக் காட்டத்தானே செய்றாங்க. ஆனா, அதைப் புத்திசாலித்தனமா மறைச்சிடுறாங்க. நான் அப்படியில்லை. வெளிப்படையானவன். குரு அண்ணன் எனக்கு நெருக்கமானவர். என் வாழ்க்கையில அத்தனை ஏற்ற இறக்கங்கள்லயும் அவர் இருந்திருக்கார். என்னோட புத்தகங்களை வாசிச்சு என்னை உற்சாகப்படுத்தியிருக்கார். அவர் இறந்தது உண்மையிலேயே எனக்கு இழப்பு. அதுக்காக நாலு வரியில் ஒரு ‘வாழ்ந்தான் பாட்டை’ எழுதிப்போட்டேன். ‘வாழ்ந்தான் பாட்டு’, இறந்தவங்களைச் சிலாகிச்சுதான் இருக்கும். அதுல என்ன தப்பு? உடனே, ‘பூனைகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன’, ‘சாதியப் பாம்புகள் படையெடுக்கின்றன’-ன்னு எழுதுறாங்க. இங்கே எல்லாப் பூனையும் அப்படித்தானே திரியுது. என்னைப் பொறுத்தவரை படைப்பாளிங்கறவன் வெளிப்படையா இருக்கணும். அதுதான் நேர்மை. நான் பாட்டாளித் தொழிற்சங்கத்துல உறுப்பினரா இருக்கேன். பாட்டாளி மக்கள் கட்சியிலயும் உறுப்பினர். என்னோட புத்தகங்களை டாக்டர் அய்யா வெளியிட்டிருக்கார். இதெல்லாம் வெளிப்படையான விஷயம்தானே. யாருக்காகவும் இந்த அடையாளங்களை நான் மறைச்சதில்லை. எதுக்கு எனக்கு ரெண்டு முகம்..?

யாரெல்லாம் என்னை விமர்சிக்கிறாங்களோ, அவங்க எல்லாருமே சாதிப்பற்று உள்ளவங்க தான். படைப்பாளிகள் வானத்துல இருந்து குதிச்சவங்க இல்லை. அவங்களுக்குக் கொம்பு முளைக்கலே. எல்லாரும் சாதாரண மனுஷங்க தான். இலக்கியக் கூட்டங்களுக்குக் கரைவேட்டி கட்டிக்கிட்டுப்போற இலக்கியவாதிகள் இல்லையா? ஒரு தலித் படைப்பாளி, வெளிப்படையா தன்னை அறிவிச்சிக்கிறார். அது தப்பில்லையா? அவங்ககிட்ட கேட்காத கேள்வியை என்கிட்ட ஏன் கேக்குறீங்க?”

“உறுப்பினர் என்ற வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளில் உங்களுக்கு விமர்சனம் உண்டா?” 


“நிறைய இருக்கு. இருக்கத்தான் செய்யும். சில நேரங்கள்ல நாம எதிர்பார்க்காத முடிவுகளைக் கட்சி எடுக்கும். அந்தத் தருணத்தில அது நமக்கு ஏற்பில்லாத முடிவா இருக்கும். ஆனா, கட்சிக்கு ஏற்ற முடிவா இருக்கான்னுதான் பார்க்கணும். அந்தமாதிரி நேரத்துல அமைதியா  இருந்திடுவேன். நான் கட்சியில உறுப்பினர்... அவ்வளவுதான். அதிதீவிரமான களப்பணியாளர் இல்லை. அதனால, என் கருத்துக்கு அவங்க முக்கியத்துவம் தரணும்னு எதிர்பார்க்க முடியாது.  கட்சி, தானாவே  தன்னைச் சரி செஞ்சுக்கும்..”