வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (10/11/2018)

கடைசி தொடர்பு:18:30 (10/11/2018)

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்... சண்டே சிக்கன் ரெசிப்பிக்கள்!

தாய் சிக்கன் ஷாட்டே, பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ், ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்... நாவூறும் சண்டே சிக்கன் ரெசிப்பிக்கள்! நாளை செய்யலாம் மக்களே!

சைவ உணவுகள் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளா? நாளை செய்வதற்கு இதோ உங்களுக்காக சில வித்தியாசமான சிக்கன் ரெசிப்பிக்கள்...

தாய் சிக்கன் ஷாட்டே 

தாய் சிக்கன்

தேவையானவை:

சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் (நீளவாக்கில் நறுக்கிய சிக்கன் துண்டுகள்) – 250 கிராம்

லெமன் கிராஸ் – ஒரு இன்ச் அளவு

எலுமிச்சை இலைகள் – 3

இஞ்சி (தோல் சீவியது) – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய்ப்பால் – 50 மில்லி

கறி மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: 

லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், இஞ்சி, காய்ந்த மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, தேங்காய்ப்பால், உப்பு, கறி மசாலாத்தூள், சிக்கன் துண்டுகள் சேர்த்துக் கலக்கி ஊறவிடவும். பிறகு சிக்கன் துண்டுகளை ஸ்கீவர்களில் குத்தி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிக்கனை அடுக்கி டோஸ்ட் செய்து எடுக்கவும். இதனை ஸ்வீட் சில்லி சாஸூடன் சூடாகப் பரிமாறவும்.

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ்

க்ரில்டு

தேவையானவை:

சிக்கன் பிரெஸ்ட் (நெஞ்சுக்கறி - ஆர்கானிக்) - 2

தைம் – சிறிதளவு

மிளகு (ஒன்றிரண்டாகப் பொடித்தது) – ருசிக்கேற்ப

ஆலிவ் ஆயில் – ஒரு டீஸ்பூன்

மஷ்ரூம் – 5 (பொடியாக நறுக்கவும்)

ஒய்ஸ்டர் சாஸ் – ஒரு டீஸ்பூன்

சிக்கன் ஸ்டாக் – 50 மில்லி

பூண்டு பல் – 4 (பொடியாக நறுக்கவும்)

உப்பு – தேவையான அளவு

வேகவைத்து மசித்த உருளைகிழங்கு, காய்கறிகள் - தேவையான அளவு

செய்முறை: 

பாத்திரத்தில் சிக்கனுடன் உப்பு, பொடித்த மிளகு, தைம், ஆலிவ் ஆயில், பூண்டு சேர்த்துக் கலந்து தனியாக எடுத்து வைக்கவும். பிறகு, சிக்கனை தோசைக்கல்லில் போட்டு மூடிபோட்டி க்ரில் செய்யவும் (இதற்குத் தண்ணீர் தேவையில்லை. சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது). 

வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு மஷ்ரூம் சேர்த்து வதக்கவும், இதனுடன் சிக்கன் ஸ்டாக், ஒய்ஸ்டர் சாஸ், உப்பு, மிளகு சேர்த்துக் கிளறி சாஸ் பதமாக வந்தபின் இறக்கவும். சிக்கனை மஷ்ரூம் சாஸ், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, காய்கறிகள் உடன் பரிமாறவும்.

பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ்

பெரி பெரி சிக்கன்

 

தேவையானவை:

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம் (நீளவாக்கிலோ சதுரவாக்கிலோ நறுக்கவும்)

அன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – 10

காய்ந்த மிளகாய் – 4

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

சிவப்பு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் – ஒன்று

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகு, உப்பு – தேவையான அளவு

ஸ்கீவர்ஸ் - தேவையான அளவு

செய்முறை: 

எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். கடாயில் வெண்ணெய்யை உருக்கி, வெங்காயம், குடமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். ஆறிய பின், மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து சிறிதுநேரம் ஊறவைக்கவும். ஸ்கீவர்ஸில் அன்னாசிப் பழ கியூப், ஊறவைத்த சிக்கன், மீண்டும் அன்னாசிப் பழ கியூப் என மாற்றி மாற்றிக் குத்தி வைக்கவும். இதை தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும். மயோனைஸுடன் சூடாகப் பரிமாறவும்.


டிரெண்டிங் @ விகடன்