மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி!

தெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி!
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி!

தமிழ்ப்பிரபா - படம்: தே.அசோக்குமார்

 “வழக்குக்கு ஆள் கிடைக்காம, `காட்டுக்குள்ள பாம்பு பிடிக்கப் போனாங்க’னு தேவையில்லாம இவங்கமேல பொய்வழக்குப் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. அப்படி எத்தனையோ முறை தரதரன்னு கூட்டிட்டுப் போறதைப் பார்த்திருக்கேன். ஒரு கட்டத்துக்குமேல முடியலை. `இவங்களுக்காகப் பேச யாருமே இல்லையா?’னு நினைச்சு, நேரா போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்” என இருளர் மக்களின் உரிமைகளுக்காக நடக்க ஆரம்பித்த ஏழுமலை, 30 ஆண்டுகள் கடந்து,   இன்னும் அதிதீவிரத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தையூர் கிராமத்தில்,  விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. ``நாங்க வசிக்கிற பகுதிகள்ல இருளர் இன மக்கள் அதிகமா இருக்காங்க. காடுகள் அழிக்கப்பட்டதால் அவங்களோட அடிப்படை வாழ்க்கை நலிவடைய ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் விவசாயக் கூலிகளா வேலைக்குப் போயிட்டிருந்தாங்க. இப்போ அதுவும் குறைஞ்சதால அவங்களோட வாழ்வாதாரம் இன்னும் மோசமாகிட்டேபோகுது. இதையெல்லாம் பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியலை’’ எனச் சொல்லும் ஏழுமலை, தன் மாவட்டத்தில் உள்ள இருளர்கள் மட்டுமல்லாது, மற்ற நாடோடிச் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவருகிறார்.

தெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுக்கப்பட்டவர்களின் ஒளி!

``நான் அவங்களோடு நெருங்கிப் பழக ஆரம்பிச்ச பிறகுதான், அவங்க பிள்ளைங்க யாருமே பள்ளிக்கூடம் போறதில்லைன்னு தெரிஞ்சுது. அவங்களுக்கு உண்மையான முன்னேற்றம் கிடைக்கணும்னா, அவங்க பிள்ளைகளின் கல்வி மூலமாகத்தான் அது கிடைக்கும்” என்ற ஏழுமலை, இருளர் இன மக்களில் பலரை முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளார். அதுமட்டுமன்றி அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் பெற வழிவகை செய்வது, சட்ட உதவிகள் வழங்குவது, அரசு உரிமைகளைப் பெற்றுத்தருவது, கைத்தொழில் கற்றுத்தருவது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கான உதவிகளைச் செய்வது எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

``முன்னாடியெல்லாம் எங்களுக்கு ஒண்ணுன்னா கேட்க நாதியே இல்லை. ஆனா இப்போ, சமூகத்துல எங்களையும் மதிக்கிறாங்கன்னா அதுக்கு அண்ணன்தான் காரணம். எங்க சனங்க நிறையபேரைக் கொத்தடிமைகளா நடத்தினாங்க. ஏழுமலை அண்ணனுக்கு இது தெரிஞ்சு, உடனே அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தி எங்க ஆளுங்களையெல்லாம் மீட்டுட்டு வந்தார். இப்போ இங்கே கௌரதையா ஒரே குடும்பமா இருக்கோம்” என்றார் சின்ன காயாறு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ்வரி.

கடும்பாடி, நெல்லூர், சத்யா நகர் எனக் காஞ்சிபுரத்தையொட்டியுள்ள இன்னும் மின்வசதி இல்லாத இருளர் குடும்பங்களுக்கு, நண்பர்களிடம் பணம் திரட்டி சோலார் விளக்குகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஏழுமலை. ``வீட்டுப்புள்ளைங்க இப்போ எல்லாம் புஸ்தகத்தை எடுத்துப் படிக்குதுங்கன்னா, அது அண்ணன் வாங்கிக் கொடுத்த லைட்டுகளாலதான்” என்கிறார் ஏழுமலையுடன் இருந்த ஒருவர்.

தன் சொந்த ஊரில் உள்ள இருளர் மக்களுக்கு மட்டும் உதவ ஆரம்பித்த ஏழுமலை, தற்போது காஞ்சிபுரத்தையொட்டியுள்ள 30 கிராமங்களில், குறிப்பாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்குளத்தூர் ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த மக்களின் ஒற்றை நம்பிக்கையாகவும் இருக்கிறார். ஊரில் தனக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டே அதில் கிடைக்கும் வருமானத்திலும், நண்பர்களிடம் பெறும் நிதியின் மூலமும் இருளர்களின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிவருகிறார் ஏழுமலை.