வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (11/11/2018)

கடைசி தொடர்பு:10:06 (11/11/2018)

தினை, குதிரைவாலி, வரகு....சிறுதானிய ஸ்பெஷல் ரெசிப்பிகள்! #Recipes

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறூதானிய ரெசிப்பிகள்

தினை, குதிரைவாலி, வரகு....சிறுதானிய ஸ்பெஷல் ரெசிப்பிகள்!  #Recipes

இன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது.உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் வீட்டில் செய்யக்கூடிய புதுவகையான சிறுதானியம் ரெசிப்பிகள்

குதிரைவாலி கிச்சடி
தேவையானவை:


 குதிரைவாலி அரிசி - ஒரு கப்
 காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்)
 இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 நெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
 பட்டை, லவங்கம் - 2
 பிரியாணி இலை - 2
 மராத்தி மொக்கு - ஒன்று
 எண்ணெய் - தேவையான அளவு

                                                                               ரெசிப்பிகள்
செய்முறை:
குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

கம்பு - பருப்பு சோறு
தேவையானவை:


கம்பு - ஒரு கப்
 துவரம்பருப்பு - அரை கப்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
 கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

                                                                             ரெசிப்பிகள்
செய்முறை:
புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


வரகு - அன்னாசிப்பழக் குழைச்சல்
தேவையானவை:

 வரகு அரிசி – ஒரு கப்
 அன்னாசிப்பழம் - 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)
 அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப்
 வெல்லம் – அரை கப்
 சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்

                                                                            ரெசிப்பிகள்
செய்முறை:
குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

தினை - தேங்காய்ப்பால் புலாவ்
தேவையானவை:

 தினை அரிசி - ஒரு கப்
 தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தண்ணீர் - ஒரு கப்
 பச்சைப் பட்டாணி - அரை கப்
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
 பட்டை - 2
 சோம்பு - கால் டீஸ்பூன்
 பிரியாணி இலை - ஒன்று
 ஏலக்காய் - ஒன்று

                                                                           தினை - தேங்காய்ப்பால் புலாவ்
செய்முறை:
தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும். 


டிரெண்டிங் @ விகடன்