Published:Updated:

ஆபரேஷன் பணத்தை கேரளாவுக்கு அளித்த அட்சயாவுக்கு ஆபரேஷன் நடந்ததா... எப்படி இருக்கிறார்?

ஆபரேஷன் பணத்தை கேரளாவுக்கு அளித்த அட்சயாவுக்கு ஆபரேஷன் நடந்ததா... எப்படி இருக்கிறார்?
ஆபரேஷன் பணத்தை கேரளாவுக்கு அளித்த அட்சயாவுக்கு ஆபரேஷன் நடந்ததா... எப்படி இருக்கிறார்?

ரூர் சிறுமி அட்சயாவை விகடன் இணையதள வாசகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடவுள் தேசமான கேரளாவை புரட்டிப் போட்ட மழைவெள்ள பாதிப்புக்கு தனது இதய ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தில் 5000 ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்து எல்லோரையும் நெகிழ வைத்தார். இதனால் அவரின் கருணை உள்ளத்தை இந்திய ஊடகங்களும், லண்டன் பி.பி.சி-யும்போட்டிப் போட்டுக்கொண்டு செய்தியாக வெளியிட அட்சயாவின் இதயத்தில் கசிந்த இந்தக் கருணை, கடல்கடந்தும் மெச்சப்பட்டது. 'இப்போது அட்சயா எப்படி இருக்கிறார்?', 'அவருக்கு இதய ஆபரேஷன் முடிந்துவிட்டதா?' என்று தெரிந்துகொள்ள அவரைச் சந்திக்கச் சென்றோம். அதற்கு முன் அந்தக் கருணையுள்ளம் பற்றி சின்ன ஃபிளாஷ்பேக்...

கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரமங்கலம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி - ஜோதிமணியின் இரண்டாவது மகள் இவர். சுப்பிரமணி சில வருடங்களுக்கு முன்பு தவறிவிட, தாய் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கும் வருமானத்தில்தான் குடும்பம் இயங்கி வந்தது. ஏழாவது படிக்கும் அட்சயாவுக்கு பிறந்தது முதல் இதயத்தில் பிரச்னை இருந்தது. அதனை, 'கரூர் இணைந்த கைகள்' என்ற அமைப்பின் உதவியோடு சமூக வலைதளங்கள் மூலம் நிதிதிரட்டி கடந்த வருடம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அடுத்து, '2018 நவம்பர் மாதம் இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்' என்று மருத்துவர்கள் தெரிவித்தநிலையில், அதற்காக மறுபடியும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டத் தொடங்கியது இணைந்த கைகள் அமைப்பு. அந்தப் பணத்தில்தான் 5,000 ரூபாயை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிவாரணமாகக் கொடுத்து நெகிழ வைத்தார் அட்சயா. இந்தச் செய்தியை விகடன் இணையதளத்தில் முதன்முதலில் 19.08.2018 அன்று, 'அறுவைச் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் ஒருபகுதியை கேரள நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி!' என்ற தலைப்பில் செய்தியாக பதிந்தோம். அதன்பிறகு வைரலான அந்தச் செய்தி தேசிய அளவிலான மீடியாக்களில் கவனம் பெற்றன. தொடர்ந்து அட்சயாவுக்கு இலவசமாக இதய ஆபரேஷன் பண்ண இந்திய அளவில் உள்ள பிரபல மருத்துவமனைகள் மற்றும் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனை என்று 30-க்கும் மேற்பட்ட பிரபல மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு வந்தது.

இதற்கிடையில், அட்சயாவின் கருணை உள்ளத்தைப் பாராட்டி பலரும் அவருக்கு நிதி அனுப்பினர். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், அட்சயாவை அழைத்துப் பாராட்டினார். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் அட்சயாவை வீட்டிற்கே வந்து பாராட்டியதோடு, முதல்கட்டமாக 25,000 ரூபாய்  கொடுத்தார். அதோடு,அட்சயாவின் ஆபரேஷன் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் உத்தரவாதம் கொடுத்தார். 

இந்நிலையில் அட்சயாவிற்கு முதல் ஆபரேஷன் செய்த சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அட்சயாவை அழைத்து அவரது கருணைமிகு உள்ளத்தை பாராட்டியது. மூன்றரை லட்சம்வரை செலவாகக்கூடிய இரண்டாவது ஆபரேஷனை இலவசமாகவே செய்வதாகச் சொல்லியது. அதோடு, அட்சயாவை அப்போலோ மருத்துவர்கள் அடங்கிய கூட்டத்தில் பேச வைத்து உற்சாகப்படுத்தியது நிர்வாகம். இந்த மாத இறுதியில் அட்சயாவிற்கு இரண்டாவது ஆபரேஷன் செய்யப்பட இருக்கிறது. அட்சயாவிற்கு பலரும் பண உதவி செய்ய, அவற்றை அட்சயா குடும்பச் செலவுக்கும், அவளுடைய வீட்டில் கழிப்பறை கட்டுவது, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். 

இந்தச் சூழலில்தான், "அட்சயா இப்போது எப்படி இருக்கிறார்?" என்று பார்த்துவர, குமாரமங்கலம் சென்றோம். பள்ளிக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார். நம்மைக் கண்டதும் அவரது தாய் ஜோதிமணி, "வாங்க சார், இன்னைக்கு என் மகளை எல்லாரும் புகழுறாங்க, 'இப்படி ஒரு புள்ளயைப் பெற நீ என்ன தவம் செஞ்சியோன்னு' என்னையும் பாராட்டுறாங்க. எங்க கண்ணுக்கு முன்னே நடப்பவை எல்லாம் நிஜமான்னு கேட்கத் தோணுது. என் கணவர் இறந்தபிறகு, எங்க குடும்பமே நொடிச்சுப் போயிடுச்சு. நானும், எங்கப்பாவும் கூலி வேலைக்குப் போய்தான், குடும்பத்தை ஒப்பேத்திட்டு வர்றோம்.

இந்த நிலைமையில்தான், அட்சயாவுக்கு இதயப் பிரச்னை அதிகமாகி உடனே ஆபரேஷன் பண்ணனும்கிற நிலை ஏற்பட்டுச்சு. இரண்டரை லட்சம் ரூபாய்வரை செலவாகும்னாங்க. நூறு ரூபாய்கூட அப்போ கையில காசு இல்லை. அதன் பின்னர்தான் எங்களுக்கு அந்த அமைப்பின் மூலமா பலரும் உதவுனாங்க. ஆனால், 'இரண்டாவது ஆபரேஷனும் பண்ணினாதான் அட்சயா முழுமையா குணமாவா'ன்னு டாக்டருங்க சொன்னாங்க. அதற்காக சேர்ந்த 20,000 ரூபாய் நிதியில் இருந்துதான், என் மகள் அட்சயா, 'நான் இன்னைக்கு உசிரோட இருக்கேன்னா, அதற்கு பலரும் உதவுனாங்க, அதனால அதற்குப் பரிகாரமா எனக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு சேர்ந்துருக்கிற பணத்துல 5,000 ரூபாயை கேரள நிவாரண நிதியா கொடுப்போமா?'ன்னு கேட்டா. எனக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு. 'உனக்கு என்ன பைத்தியமா? நாம இருக்கிற நிலைமையில அப்படிச் செய்யலாமா?'ன்னு கேட்டேன். ஆனா, அவ உறுதியா இருந்தா. வேற வழியில்லாமதான் அட்சயா ஆசையை நிறைவேற்றினோம். ஆனா, அதுக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும்னு சத்தியமா நினைக்கலை. நாம பிறர்க்கு உதவினா, கடவுள் நமக்கு வேறு சிலர் மூலம் உதவுவார்னு சொல்வாங்க. அதை அட்சயா விசயத்துல கண்கூடாப் பார்க்கிறோம். இப்பவும் எங்க குடும்பத்தை கவ்விய வறுமை போகலை. ஆனா,இப்படி ஒரு புள்ளையை பெத்த சந்தோஷத்துல, பூரிப்புல எல்லா கஷ்டமும் பஞ்சா பறந்து போகுது சார்" என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு. 

அட்சயாவிடம் பேசினோம். "கேரள மழை வெள்ள பாதிப்பை டி.வி-யில பார்த்தேன். அதுல பல சிறுமிகளும் பாதிக்கப்பட்டாங்க. அதைப் பார்த்ததும், எனக்கு கண் கலங்கி விட்டது. 'அவங்களுக்கு உதவனும்னு' தோணுச்சு. அப்போ எனக்கு இதய ஆபரேஷனுக்கு வச்சுருந்த காசுன்னெல்லாம் தோணலை. உதவி செய்யணும்கிற உந்துதலாலத்தான் உடனே 5,000 ரூபாயைத் தூக்கிக் கொடுத்துட்டேன். இப்போ பலரும் பாராட்டறாங்க. 'நல்லது பண்ணுனா எல்லோரும் பாராட்டுவாங்க'ன்னு புரிஞ்சுப் போச்சு. இனிமேல் மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவணும்னு முடிவு பண்ணி இருக்கேன். கலெக்டராகி எல்லா மக்களுக்கும் உதவணும்கிறத என்னோட லட்சியமா வச்சுருக்கேன். சகாயம் சாரும் இதையே வலியுறுத்தினார்" என்றார். 

இணைந்த கைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலியும், சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலோடு செயல்படும் மக்கள் பாதை அமைப்பின் கரூர் நகர பொறுப்பாளர் ஜெய்சுந்தரும் வந்திருந்தனர். மக்கள் பாதை அமைப்பின் சார்பில் பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியை அட்சயாவிடன் கொடுத்து, அவரைப் பாராட்டினார் ஜெய்சுந்தர். ஒவ்வொரு குழந்தையும் அட்சயாவாக மாறினால், அன்னை தெரசாக்களால் நிரம்பிக் கிடக்கும் பாரதம்!.