வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (11/11/2018)

கடைசி தொடர்பு:11:37 (11/11/2018)

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்காக ஆரோக்கியம் நிறைந்த தோசை வகைகள்

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்காக ஆரோக்கியம் நிறைந்த தோசை வகைகள்

குழந்தைகள் பள்ளி  செல்லும் நாட்களில் அவர்களுக்கான தனி மெனு எதுவும் செய்து கொடுக்க முடியாது.வழக்கமான இட்லி,தோசைகள் சாப்பிட்டு சாப்பிட்டு உணவு மீதான ஈடுபாடே குறைந்துவிடும்.அப்படி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கான வெரைட்டியான தோசை வகைகள்.

மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம் 

தேவையானவை:

தோசை மாவு  அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி  ஒன்று
பொடியாய நறுக்கிய கேரட்  2
சிக்கன்  200 கிராம்
இட்லி பொடி  2 டேபிள்ஸ்பூன்
சீஸ்  25 கிராம்
வெண்ணெய்  25 கிராம்
உப்பு  தேவையான அளவு 

                                                                          தோசை
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும். 

மைசூர் மசாலா தோசை :

தேவையானவை:

ஜவ்வரிசி  100 கிராம்
சர்க்கரை  ஒரு டீஸ்பூன்
தோசை மாவு  அரை கிலோ
காய்ந்த மிளகாய்  10
பூண்டு  5 பல்
உப்பு  தேவையான அளவு
மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து  அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
எண்ணெய்  தேவையான அளவு
பொடியாக நறுக்கிய  
பெரிய வெங்காயம்  ஒன்று
உருளைக்கிழங்கு  150 கிராம்
தக்காளி  ஒன்று
இஞ்சி  ஒரு துண்டு
பச்சைமிளகாய்  ஒன்று
பெருங்காயம்  சிறிதளவு

                                                                            மைசூர் மசாலா தோசை :
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து  தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.

கோழி கீமா தோசை 

தேவையானவை:

 மாவு  அரை கிலோ
எலும்பில்லாத சிக்கன்  300 கிராம்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்  50 கிராம்
இஞ்சி  ஒரு துண்டு
பச்சைமிளகாய்  ஒன்று
பூண்டு  5 பல்
எண்ணெய்   தேவையான அளவு
சோம்பு  கால் டீஸ்பூன்
மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்
சீரகத்தூள்  அரை டீஸ்பூன்
உப்பு  தேவையான அளவு 

                                                                            கோழி கீமா தோசை
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.

கேழ்வரகு ரவா தோசை 

தேவையானவை:

கேழ்வரகு மாவு  200 கிராம்
ரவை  50 கிராம்
கோதுமை மாவு  50 கிராம்
பச்சை மிளகாய்  ஒன்று
இஞ்சி  ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்
சீரகம்  அரை டீஸ்பூன்
பெருங்காயம்  சிறிதளவு
உப்பு  தேவையான அளவு 
செய்முறை:

                                                                       கேழ்வரகு ரவா தோசை 
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.