வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (12/11/2018)

கடைசி தொடர்பு:12:37 (12/11/2018)

உங்களுக்குப் பிடித்த விலங்குகள் அழியும் நிலையில் இருக்கிறதா? செக் லிஸ்ட் இதோ!

ஒவ்வொரு விலங்கினத்துக்கும் `Conservation Status' ஒன்று இருக்கும். அதை வைத்து அதன் தற்போதைய நிலை என்ன என்று அறிந்துகொள்ளலாம்.

உங்களுக்குப் பிடித்த விலங்குகள் அழியும் நிலையில் இருக்கிறதா? செக் லிஸ்ட் இதோ!

விலங்குகள் மேல் பெரிதாக ஈர்ப்பில்லாதவர்களுக்குக் கூட பிரியமான விலங்கு என ஒன்று கண்டிப்பாக இருக்கும். சமீபத்தில் வெளியான WWF அறிக்கையில் கடந்த 48 வருடங்களில் மட்டும் முதுகெலும்பி (Vertebrates) விலங்கினங்கள் எண்ணிக்கையில் சுமார் 60 சதவிகிதம் குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படி மாறிவரும் நிலையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான விலங்கினம் அழியும் ஆபத்தில் இருக்கிறதா, இல்லை பாதுகாப்பான எண்ணிக்கையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனவா என்று அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

ஒவ்வொரு விலங்கினத்துக்கும் `Conservation Status' ஒன்று இருக்கும் அதை வைத்து அதன் தற்போதைய நிலை என்ன என்று அறிந்துகொள்ளலாம். IUCN (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வழங்கும் இது, இருக்கும் அச்சுறுத்தலைப் பொறுத்து எட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

Least Concern (LC)

இந்த `Conservation Status' உடைய விலங்குகளைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. அதிக ஆபத்தில்லாமல் இவை வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம். மனிதர்களான நாமே இதில்தான் இருப்போம். 50 சதவிகிதத்திற்கும் மேலான இனங்கள் இந்த நிலையில்தான் உள்ளன.

Near Threatened (NT)

இதை இப்போது அபாயநிலையில் இல்லையென்றாலும் வருங்காலத்தில் பாதிக்கப்பட்டு அழிய வாய்ப்புகள் உண்டு என்று எடுத்துக்கொள்ளலாம். முன்பு Conservation Dependent (CD) என்ற பிரிவும் இருந்தது. பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால் ஆபத்தில்லை என்றிருக்கும் இதுவும் இப்போது Near Threatened (NT) பிரிவுடன் சேர்ந்ததுதான். 

Vulnerable (VU)

இதுவரை பார்த்த பிரிவுகளை `Lower Risk' பிரிவுகள் என வகைப்படுத்துவர். இவற்றுக்குப் இப்போது பெரிதான பாதிப்புகள் எதுவுமில்லை. ஆனால் இந்த Vulnerable (VU) பிரிவு முதல் பின்வரும் பிரிவுகள் விலங்குகள் ஆபத்தில் இருக்கின்றன என்பதையே குறிக்கும். இந்த Vulnerable பிரிவு பெரிய பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புகளுடைய விலங்குகளைக் குறிக்கும். தற்போதைய சூழல் மாறாவிட்டால் விரைவில் அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் சேர்ந்துவிடும் இவை.

விலங்குகள்

Endangered (EN)

இது அழிந்துவரும் விலங்குகளைக் குறிக்கும். இதுதான் வாழும் விலங்குகளின் இரண்டாவது மோசமான `Conservation Status'. இதிலேயே 3000-த்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருக்கின்றன. இந்த இனங்களைப் பாதுகாக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் சிறிது காலத்தில் இவை அழிந்துவிடும். கடந்த 10 ஆண்டுகளிலோ அல்லது கடந்த மூன்று தலைமுறைகள் வாழ்ந்த காலத்திலோ மட்டும் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்திருந்தாலோ அல்லது குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற அபாய வரையறைகளை தொட்டிருந்தாலோதான் ஒரு விலங்கு இந்தப் பிரிவுக்கே வரும். எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லையென்றால் இவற்றின் ஆயுட்காலம் 100 வருடங்களுக்குள்தான்.

Critically Endangered (CR)

இது அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதில் 2014 கணக்குப்படி 2464 விலங்கினங்கள் இருக்கின்றன. சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை ஓர் இனத்தை அழிந்ததாக IUCN அறிவிக்காது. எனவே இந்நேரம் அழிந்திருக்கக்கூடும் விலங்குகள் கூட இந்தப் பிரிவில்தான் இருக்கும். இதன் உட்பிரிவாக ``possibly extinct" CR(PE) மற்றும் ``possibly extinct in the wild" CR(PEW) ஆகியவற்றின்  பட்டியல்களையும் வைத்திருக்கிறது IUCN.

Extinct in the Wild (EW) 

சாதாரணமான வாழ்விடத்தில் அழிந்து வெறும் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் மட்டும் பாதுகாக்கப்பட்டு அதில் வாழ்ந்துவரும் இனங்களைக் இது குறிக்கும். அழிந்த விலங்குகளை இப்படிப் பாதுகாத்து மீண்டும் அதன் உண்மை வாழ்விடங்களுக்கு அனுப்பும் முயற்சிகளும் எப்போதாவது எடுக்கப்படும். இதை `Reintroduction' என்று அழைப்பர். ஆனால் மீண்டும் அந்தச் சூழ்நிலைகளில் வாழும் திறன் கூண்டில் வளர்ந்த இவற்றுக்கு மரபு வழி வருவதில்லை. வெகுசில மட்டுமே மீண்டும் அதே வாழ்க்கைமுறைக்குத் திரும்புகின்றன.

Animal

Extinct (EX)

ஓர் இனத்தின் கடைசி விலங்கும் இறந்துவிட்ட நிலையில் அதை Extinct (EX) என்று குறிப்பிடுவர். இந்தப் பிரிவில் இருந்தால் அந்த விலங்கை உங்களால் பார்க்கவே முடியாது.

இந்தப் பிரிவுகள் மட்டுமல்லாமல் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாத இனங்களை Data Deficient (DD) என்றும் இன்னும் முழுமையாக ஆராயப்படாத இனங்களை Not Evaluated (NE) என்றும் குறிப்பிடுவர். IUCN இணையதளத்துக்குச் சென்று தேடினாலே ஒரு விலங்கின் நிலை இவற்றில் எது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இல்லையென்றால் விக்கிபீடியாவில் விலங்கின் பெயரை தேடினால் இதைத் தகவலில் காணலாம். விலங்குகள் என்றில்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் இந்த `Status' கொடுக்கப்பட்டிருக்கும். பூமி உருவான இத்தனை வருடகாலத்தில் 500 கோடிக்கும் மேற்பட்ட உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதில் 99% இனங்கள் இன்றில்லை. ஆனாலும் இன்று அழிவதுபோல் ஓர் இனத்தின் பெரும் எழுச்சியால் மட்டும் இத்தனை இனங்கள் இதுவரை அழிந்ததே இல்லை என்பது மனித இனமாகிய நமது வரலாறாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்