வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (12/11/2018)

கடைசி தொடர்பு:17:33 (12/11/2018)

``நைட்டி உடை விஷயத்தில் தலையிடுவதெல்லாம் அநாகரிகமான விஷயம்!" ஓவியா

"தங்களுக்கு வசதியான ஓர் ஆடையைப் பெண்கள் அணிந்துகொண்டால் மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்..? அதற்குக் காரணம், இங்கு ஆளுகின்ற அமைப்புகள். அவை அந்த நாளிலிருந்து இந்த நாள் வரைக்கும் ஆண்கள் அமைப்பாகத்தான் இருந்து வருகிறது."

பிளவுஸ் உடம்பை இறுக்க, புடவை வயிற்றை அழுத்த செளகர்யமாக மூச்சுவிடக் கூட வழியில்லாமல் வீட்டுவேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, வசதியான உடையாக அமைந்தது, நைட்டி. பேன்ட், சட்டை, பெல்ட், டக் இன், ஷூ என்று உடலை அழுத்தும் ஆடைகளுடன் அலுவலகம் செல்லும் ஆண்கள், வீட்டுக்கு வந்தவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸில் `அக்கடா' என்று ரிலாக்ஸ் ஆவதைப் போன்றதுதான், பெண்கள் வீட்டில் இருக்கும் நேரங்களில் நைட்டி அணிவதும். ஆனால், பெண்கள் தங்கள் செளகர்யத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்ந்தெடுக்கும்போதெல்லாம், இந்தச் சமூகம் அதில் தானாகவே ஆஜராகி தன் விருப்பு, வெறுப்புகளைச் சொல்லிவிடும். இடுப்பும் வயிறும் தெரியும் பாவாடை - தாவணியைப் புறக்கணித்து வெளியிடங்களில் புழங்குவதற்கு வசதியாகச் சுடிதாருக்குப் பெண்கள் மாறியபோதும், ஆண்களின் மற்றும் ஆண் மனப்பான்மை கொண்ட பெண்களின் பண்பாட்டுக்கூச்சல் பெரியளவில் எழுந்து அடங்கியது. அதே கூச்சல் நைட்டிக்கு எதிராகவும் பல வருடங்களாக ஆங்காங்கே எழுந்துகொண்டிருக்கிறது. 

நைட்டி - ஆந்திரா கிராமத்துப் பெண்கள்

இந்நிலையில், ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்ட கிராமத்தில்,  ஊர்ப் பெரியவர்கள், `இரவு உடையான நைட்டியை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தங்கள் ஊர்ப் பெண்கள் அணியக் கூடாது' என்று தடை விதித்துள்ளனர். தவிர, இந்த ஊர்க் கட்டுப்பாட்டை மீறும் பெண்களுக்கு 2000 ரூபாய் அபராதமும், பகலில் நைட்டி அணிந்திருக்கும் பெண்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1000 ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பல மாதங்களாக அந்தக் கிராமத்தில் வழக்கில் இருந்து வந்த இந்த `நைட்டி தடை' தற்போதுதான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. இதுபற்றி சமூக ஆர்வலர் ஓவியா தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். 

சமூக ஆர்வலர்``நைட்டி இரவு உடை, அதனால் அதைப் பகலில் அணியக் கூடாது என்பவர்கள், ஆண்களுக்கான இரவு உடை எது என்று யோசித்திருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அரைக்கால் சட்டையுடன் அலைவார்கள். தற்போது அது பெர்முடாஸாக மாறியிருக்கிறது. அல்லது லுங்கியோ, வேட்டியோ அணிந்துகொண்டு மேல் சட்டைகூட இல்லாமல் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள். இந்த அளவு ஆடையோடுதான் ஆண்கள் வீட்டுக்கு வெளியே வந்தார்கள்; வருகிறார்கள்; வருவார்கள்...  இப்படியான உடைகளோடுதான் ஆண்கள், தங்கள் வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தாலும் வரவேற்கிறார்கள். 

ஆனால் தங்களுக்கு வசதியான ஓர் ஆடையைப் பெண்கள் அணிந்துகொண்டால் மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடுகள்..? அதற்குக் காரணம், இங்கு ஆளுகின்ற அமைப்புகள். அவை அந்த நாளிலிருந்து இந்த நாள் வரைக்கும் ஆண்கள் அமைப்பாகத்தான் இருந்து வருகிறது. அது பெண்களுடைய அமைப்பாக இருப்பதில்லை. அடுத்த பிரச்னை, வயதான பெண்கள் இந்த மாதிரியான ஆண்களின் பண்பாடு(?) கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக நிற்பதும், பாதிக்கப்படுகிற பெண்கள் இதை எதிர்த்து எதுவும் பேசாமல் இருப்பதும்தான். 

பெண்களை இந்த உடை அணியக் கூடாது, அந்த உடைதான் அணிய வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.  பெண்கள், மரபுகளை மீறிய, சமூகத்தின் கண்களை உறுத்துகிற மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு அவர்களே போக மாட்டார்கள். உடம்பு தெரிகிறபடியான உடைகளை அணிபவர்களை விட்டு விடுங்கள். மற்றவர்கள், சமூகத்தில் புழக்கத்தில் இல்லாத ஒரு வித்தியாசமான உடையை அணிவதற்கே தயங்குவார்கள். பளிச் நிறத்தில் ஓர் உடையைத் தினசரி பயன்பாட்டில் அணிவதற்கே  யோசிப்பவர்கள் பெண்கள். ஒரு பெண் எந்தச் சட்டமும், தடையும் இல்லையென்றால்கூட சமூகத்துக்கு இசைவான ஓர் உடையைத்தான் அணிவார். இதிலெல்லாம் பஞ்சாயத்து தலையிடுவது அநாகரிகமான விஷயம். அதிலும் ஆண்களாலான பஞ்சாயத்து பெண்களுக்கு இப்படியொரு தடையைப் போடுவது எந்த வகையில் சரியாகும்? 

இதற்கு எதிராக, இதனால் பாதிக்கப்படுகிற பெண்கள், `இது எங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது' என்று முன்வந்து பேச வேண்டும். சமூக மாற்றங்கள் வெளியே இருந்து வர முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்துதான் குரல் எழும்ப வேண்டும். தவிர, தற்போது இருக்கிற சட்ட அமைப்பில் ஊர்ப் பஞ்சாயத்துகளின் இடம் என்ன? இப்படியொரு தடை போடுவது சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது சட்ட விரோதமா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காக உரிமைக்குரல் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்துதான் முதலில் எழும்ப வேண்டும்.  அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும்'' என்று அழுத்தம்திருத்தமாக முடித்தார் ஓவியா.


டிரெண்டிங் @ விகடன்