வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (13/11/2018)

கடைசி தொடர்பு:13:45 (13/11/2018)

சென்னையில் 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறதா ஹூண்டாய்?

இந்தியாவில் மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஹூண்டாய், ஶ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையில் கூடுதலாக 7,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப்போவதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. இந்தத் தொகை அந்த தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் புதிய மாடல்களைத் தயாரிக்கவும், இன்ஜின் - கியர்பாக்ஸ் அமைப்பை அசெம்பிள் செய்யவும் பயன்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துவிட்டு வந்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஒய்.கே.கூ உறுதிபடப் பேசியிருக்கிறார்.  

 

ஹூண்டாய்

 

அப்போது உடனிருந்த அந்த நிறுவனத்தின் Corporate Affarirs பிரிவின் துணைத் தலைவரான பி.சி.தத்தா கூறுகையில், 'எங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்கான வரி விதிப்பு, மின்சாரம் மற்றும் நீர்த் தேவைகளில் சலுகைகளைத் தர தமிழக அரசு தயாராக இருக்கிறது. 7,000 கோடி ரூபாய் முதலீடு தொடர்பான அரசாணை, வருகின்ற ஜனவரி 2019-ல் நடைபெறப்போகும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். தற்போது வருடத்துக்கு 7 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் படைத்த ஶ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை, விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகு ஆண்டுக்கு 8 லட்சம் கார்களைத் தயாரிக்கும் திறன் படைத்ததாக முன்னேற்றம் பெற்றுவிடும்' என்றார். தற்போது 9 மாடல்கள் இங்கே உற்பத்தியாகின்றன. 

 

ஹூண்டாய்

 

தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரிப்பப் போவதால், 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டுத் தேவைகளுடன் 87 உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் ஒருபுறம் இங்கே நடைபெற்றாலும், அடுத்த ஆண்டில் CKD முறையில் எலெக்ட்ரிக் கார்களை (Kona EV) இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யவிருக்கும் ஹூண்டாயின் முயற்சிக்குக் கைகொடுக்கவே இந்த முதலீடு செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. நாளடைவில் அந்த எலெக்ட்ரிக் கார்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்த 3 ஆண்டுகளில் அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முடிவில் அந்த நிறுவனம் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க