வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (15/11/2018)

கடைசி தொடர்பு:16:21 (15/11/2018)

இரஞ்சித், கோபி நயினார் திரைப்படமாக்கும் பிர்சா முண்டா யார்?

இரஞ்சித் மற்றும் கோபி நயினார் திரைப்படமாக இயக்கும் பழங்குடியினப் போராளி பிர்சா முண்டாவின் பிறந்த தினம் இன்று. வரலாற்றில் பெரிதாக கவனம் பெறாமலே போன அந்தப் போராளியைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு.

வரலாற்றில் முதல் கல்லெறிதல் என்பது மிக முக்கியமானது. அநீதி எனத் தெரிந்தும் அதை எதிர்த்துக் கேட்க பலரும் துணியாதபோது , கிளர்ந்தெளுபவர்களே வரலாற்று நாயகர்களாகின்றனர். பிர்சா முண்டா அப்படியானவர். பழங்குடியினரின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் விதிக்கப்பட்ட பயிரிடும் உரிமைக்கான நிலுவை வரித் தொகையைத் தள்ளுபடி செய்யக் கோரி, மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி 1890-ல் நிலவிய பஞ்சம். 1894-ல் மக்களை ஒன்று திரட்டி பிர்சா முண்டா நடத்திய இந்தப் போராட்டம்தான் இந்தியாவில் பழங்குடியினருக்காக நடத்தப்பட்ட முதல் போராட்டம். இதை நடத்தியபோது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19.

பிர்சா முண்டா

நிலத்தின் பூர்வகுடிகளிடமிருந்து ஆங்கிலேயர்களும், இந்திய ஜமீன்தார்களும் நிலத்தைப் பறிக்க முயன்றதையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் கடுமையாக எதிர்த்தார். பழங்குடியின் மக்கள் தங்கள் நிலத்தை தாங்களே ஆள வேண்டும் என நினைத்தார். பழங்குடியின மக்களிடையே விடுதலை உயர்வை ஆழமாக விதைத்ததில் பிர்சா முண்டாவின் பங்கு மிக முக்கியமானது. ஆங்கிலேய ஆட்சி மக்களைச் சித்ரவதை படுத்துவதையும், வளங்களைச் சுரண்டுவதிலுமே குறிக்கோளாய் இருந்தது இவரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. கொரில்லா போர் முறையில் ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தார். 1900-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. தனது  25 வயதில் சிறையிலேயே மரணம் அடைந்தார் பிர்சா முண்டா. வெறும் 25 வயது வரை மட்டுமே வாழ்ந்து வரலாற்று நாயகனாக மாறியவர் பிர்சா முண்டா. அவரை நினைவு கூர்வோம்.