Published:Updated:

`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி!’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்

`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி!’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்
`தீப்பிடித்த டிராக்டரோடு ஏரியில் குதித்த விவசாயி!’ -சினிமா பாணியில் நடந்த லைவ் ஸ்டன்ட்

டிராக்டரில் உள்ள வைக்கோல் பற்றி எரியும்போது 100 வீடுகளைக் காப்பாற்றும் எண்ணத்தில் அந்த டிராக்டரை தூரமாக ஓட்டிச் சென்றுள்ளார் விவசாயி ஒருவர். 

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியில் உள்ள ஜம்மனகட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான எங்கப்பா (yenkappa). இவர் அதே பகுதியில் நிலக்கடலை விவசாயியாக இருந்துவருகிறார். இந்த நிலையில், எங்கப்பா வீட்டுக்கு அருகில் நேற்று முன் தினம் மாலை வைக்கோல் நிரம்பிய டிராக்டர் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. திடீரென வைக்கோலில் தீப்பிடிக்க அது மளமளவென அதிகமாகி அருகில் உள்ள வீடுகளுக்குப் பரவத் தொடங்கியது. இச்சம்பவத்தைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக அங்கு வந்து தங்கள் கைகளில் கிடைத்த மணல், நீர் ஆகியவற்றை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதே வேளையில் இந்தச் செய்தி தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராக்டர் முழுவதும் வைக்கோல் இருந்ததால் அது எளிதில் பரவத்தொடங்கிவிட்டது. 

இதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த விவசாயி எங்கப்பா திடீரென தீப்பிடித்த டிராக்டரில் ஏறி அமர்ந்து வண்டியை மிகவும் வேகமாக ஓட்டி அருகில் இருந்த ஏரியில் டிராக்டரை விட்டுவிட்டு அதிலிருந்து குதித்து தப்பித்துள்ளார். தன் நலன் கருதாது துரிதமாகச் செயல்பட்டு அப்பகுதியில் இருந்த சுமார் 100 வீடுகளைத் தீயில் இருந்து காப்பாற்றியுள்ளார். பிறகு அங்கு வந்த தீயணைப்புப் படையினர் வீடுகளில் பரவிய தீயை அணைத்தனர். இதையடுத்து, அந்த விவசாயியை ஹீரோ எனக் கிராம மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மின் கசிவு காரணமாகத் தீப்பற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து `டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு பேட்டியளித்த விவசாயி எங்கப்பா, `` டிராக்டரில் இருந்த தீ மளமளவென அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவத் தொடங்கியது. நான் அதை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். பிறகு உடனடியாக செயல்பட்டேன் அவ்வளவுதான். எரிகின்ற வைக்கோலில் தண்ணீர் ஊற்றினால் அது இன்னும் அதிகமாகும் என எனக்குத் தெரியும். அப்போதைய நிலைமையில் இதை ஊர் மக்களிடம் கூறினால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என எனக்குள் கேள்வி எழுந்தது. அதனால் உடனடியாக டிராக்டரின் டிரைவர் சீட்டில் அமர்ந்து வண்டியை இயக்கினேன். நான் உள்ளே இருந்தபோது எனக்கு தீயின் அனல் பெரிதாகத் தெரியவில்லை” எனப் பேசியுள்ளார். 

எங்கப்பாவின் செயலைப் பற்றி விவரித்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், `` இந்தச் சம்பவம் 20 நிமிடங்கள் கூட நடக்கவில்லை. அதற்குள் சினிமாவில் வருவதுபோல் எங்கப்பா சற்றும் யோசிக்காமல் வண்டியில் ஏறி அமர்ந்து வேகமாக ஓட்டத்தொடங்கினார். கரடுமுரடான பாதையில் சுமார் 500 மீ தூரம் வரை மிகவும் வேகமாக இயக்கி இறுதியில் வண்டியை ஏரியில் விட்டு அவர் டிராக்டரில் இருந்து குதித்துவிட்டார். தீப்பிடித்த வண்டி செல்லும்போது அதனுடன் ஊரில் உள்ள சிறுவர்களும் மேலும் பலரும் பின்னாலே ஓடினோம். பிறகு வண்டியில் எரிந்த தீ முழுவதுமாக அணைந்த பிறகு கிராம மக்கள் உதவியுடன் ஏரியில் இருந்த வண்டி வெளியில் எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.