மாதம் ரூ.24 கோடி சம்பளம் வாங்கிய வினோத் கே தசாரி பதவி விலக இதுதான் காரணம்! | Ashok Leyland managing director Vinod K Dasari resigned

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (15/11/2018)

கடைசி தொடர்பு:16:50 (15/11/2018)

மாதம் ரூ.24 கோடி சம்பளம் வாங்கிய வினோத் கே தசாரி பதவி விலக இதுதான் காரணம்!

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விகோத் கே தசாரி ராஜினாமா செய்துள்ளது ஆட்டோமொபைல் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அசோக் லேலாண்ட்டின் வரலாற்றில் ஓர் இயக்குநர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை. 2005-ம் ஆண்டு அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற வினோத் கே தசாரி, 2011-ம் ஆண்டு நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றார். கடந்த 14 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் பெரும் பங்காக இருந்தவர். இவரின் தலைமையின் கீழ்தான் 10 ரூபாய்க்கு விற்பனையான பங்குகளின் விலை 167 ரூபாய் வரை உயர்ந்தது. 

வினோத் கே தசாரி

அசோக் லேலாண்டில் தலைவர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதுவரையில் 10 கோடி ரூபாய் வரையில்தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால், விகோத் கே தசாரிதான் முதல் முறையாக 24 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றவர். எல்லாமே சரியாக இருக்கும்படி தெரிந்தாலும் வினோத் தசாரி லேலாண்டில் இருந்து திடீரென விலகுவதற்குக் காரணம் என்னவென்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ``ஆரம்பம் முதல் நிர்வாக இயக்குநர் வினோத் தசாரிக்கும், இந்துஜா குழும நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜாவுக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் மனக்கசப்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். கடந்த இரண்டாண்டுகளாக R&D துறைக்கு முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுவந்தார். மின்சார வாகனங்களையும் புதிய கமர்ஷியல் வாகனங்களையும் உருவாக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். அவர் கேட்டபடி ஆராய்ச்சி துறைக்கு நிதி வழங்கவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார்" எனக் கூறினார்கள்.

அசோக் லேலாண்டின் நிர்வாக இயக்குநர்

தான் பதவி விலகுவதாக அறிவித்த வினோத் தசாரி, “இது அவசரமாக எடுத்த முடிவில்லை. இதைப் பற்றி கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிந்தித்து வந்தேன். என்னுடைய தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், புதிதாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்” எனக் கூறினார்.

இன்னும் சில மாதங்களில் அடுத்த CEO மற்றும் MD தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், அந்த இடைப்பட்ட காலத்தில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவரான தீரஜ் இந்துஜா உடனடி செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மார்ச் 2019 வரை வினோத் தாசரி இருப்பார் என்றும் அசோக் லேலாண்டு நிர்வாகம் கூறியுள்ளது. 

இந்நிறுவனம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 33% அதிக லாபம் பார்த்திருந்தாலும், ராஜினாமா முடிவால் அசோக் லேலாண்டின் பங்குகள் 103 ரூபாய்க்கு குறைந்து தற்போது 11 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 


[X] Close

[X] Close