3 மாடல்கள், 1.55 - 1.89 லட்சம் ரூபாய்... `கம்பேக்’ ஜாவாவில் என்ன ஸ்பெஷல்? #JawaIsBack | Jawa announces its comeback with 3 bikes in india!

வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (15/11/2018)

கடைசி தொடர்பு:20:59 (15/11/2018)

3 மாடல்கள், 1.55 - 1.89 லட்சம் ரூபாய்... `கம்பேக்’ ஜாவாவில் என்ன ஸ்பெஷல்? #JawaIsBack

இந்தியா முழுக்க 105 நகரங்களில் டீலர்களை நிர்ணயித்திருக்கும் க்ளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், அதில் 64 டீலர்கள் முழு செயல்திறனுக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளது.

க்ளாஸிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம், இந்தியாவில் ஜாவா பிராண்டுக்கான உரிமையைப் பெற்று 2 ஆண்டுகளாகிவிட்டன.  இந்த க்ளாஸிக் லெஜண்ட்ஸ் உருவான பின்னணி சுவாரஸ்யமானது. ஆனந்த் மஹிந்திரா, பொமன் இரானி (Boman Irani), அனுபம் தரேஜா (Anupam Thareja) ஆகியோர் இணைந்து உருவான இந்த நிறுவனத்தின் 60 சதவிகிதப் பங்குகள், மஹிந்திரா வசமே இருக்கிறது. இவர்கள் உலகப் புகழ்பெற்ற ஜாவா பிராண்டை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் செயல்பட்டிருப்பதன் எதிரொலியே, இங்கு நீங்கள் படங்களில் காண்பது! 

ஜாவா

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பே, ஜாவா பைக்குகள் குறித்த விவரங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் டீசர்களாக வெளியிட்டுக் கொண்டே இருந்தது மஹிந்திரா. இன்ஜின் விவரங்கள், க்விஸ் போட்டி, எக்ஸாஸ்ட் சத்தம் ஆகியவற்றை இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். எனவே பைக் ஆர்வலர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று 3 ஜாவா மாடல்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது க்ளாஸிக் லெஜண்ட்ஸ். ஜாவா, ஜாவா 42 (Forty Two), ஜாவா பேரக் (Perak) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பைக்குகளின் அறிமுக டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள், முறையே 1.64 லட்சம் - 1.55 லட்சம் - 1.89 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகள் களமிறங்கும் என்றும், பின்னாளில் கூடுதல் செயல்திறன் மிக்க ஜாவா பரேக் வெளிவரும் எனத் தகவல்கள் வந்திருக்கின்றன.

டிசைன் & வசதிகள்

Jawa

1960-களில் இந்தியாவில் விற்பனையான ஜாவா 250 டைப்-A பைக்கைப் பின்பற்றியே, 2018 ஜாவா பைக்கின் டிசைன் அமைந்திருக்கிறது. வட்டமான ஹாலோஜன் ஹெட்லைட் மற்றும் அதற்கு மேலே இருக்கும் அனலாக் ஸ்பீடோமீட்டர், க்ரோம் ஃப்னிஷ் கொண்ட 14 லிட்டர் பெட்ரோல் டேங்க், தட்டையான சிங்கிள் பீஸ் சீட், தடிமனான டெலிஸ்கோபிக் ஃபோர்க், இரட்டை PeaShooter எக்ஸாஸ்ட் பைப், Pinstripe உடனான மட்கார்டு ஆகியவை இதனை உறுதிப்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இருந்த ஜாவா பைக்குகளை நினைவுகூரும் விதமாகவே, இந்த லேட்டஸ்ட் ஜாவாவின் 3 கலர் ஆப்ஷன்களும் (கறுப்பு, மெருன், கிரே) அமைந்திருக்கிறது. இப்படி மாடர்ன் ரெட்ரோ பேக்கேஜாக உருவாகியிருக்கும் ஜாவா பைக்குக்கு, அதன் முன்னாள் வாடிக்கையாளர்கள் மற்றும் ரெட்ரோ பைக்குகளை விரும்பும் இளைஞர்களுக்கும் பிடிக்கும் என நம்பலாம். ஜாவா 42 பைக்கில் 4 மேட் கலர்கள் (அடர் மற்றும் வெளிர் பச்சை/நீலம்), 2 Gloss கலர்கள் (சிவப்பு, நீலம்) ஆகியவை இருக்கின்றன.

Jawa

இத்தாலிய மற்றும் இந்திய டிசைனர்கள் சேர்ந்து வடிவமைத்திருக்கும் இந்த ஜாவாவின் டீட்டெய்லிங் மிக அற்புதமாக இருக்கிறது. அதுவும் அந்த லிக்விட் கூல்டு இன்ஜினில் இருக்கும் போலியான Fins - ஜாவா பிராண்டிங் உடனான இன்ஜினின் க்ரோம் கேஸ் கவர் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை, அப்படியே 2 ஸ்ட்ரோக் ஜாவா பைக்கின் ஜெராக்ஸ் போல இருக்கின்றன. ஜாவா பைக்கை அடிப்படையாகக் கொண்டே, ஜாவா 42 பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் சிங்கிள் டோன் மேட்/Gloss கலர் ஆப்ஷன்கள், அனலாக் ஸ்பீடோமீட்டர் பொசிஷன் செய்யப்பட்ட விதம், பைக்கில் ஆங்காங்கே க்ரோம் ஃப்னிஷுக்குப் பதிலாக கறுப்பு ஃப்னிஷ் எனக் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றன. உலகளவில் பிரபலமாக இருக்கும் Bobber பாணி பைக்குகளைப்போல காட்சியளிக்கும் ஜாவா பேரக், படங்களில் பார்க்கவே செம அசத்தலாக இருக்கிறது. மேட் ஃப்னிஷ், சிங்கிள் பீஸ் சீட் மற்றும் அதற்கு அடியே இருக்கும் மோனோஷாக், ஹேண்டில்பார் End Mirrors, நீளமான வீல்பேஸ், பைக்கின் இருபுறமும் வித்தியாசமான டூல் பாக்ஸ், சிறிய Fender & எக்ஸாஸ்ட், பைரலி டயர்கள் ஆகியவை வாவ்!

இன்ஜின் & தொழில்நுட்பம்

Jawa

பைக் பார்க்க ரெட்ரோ டிசைனில் இருந்தாலும், இதிலிருக்கும் இன்ஜின் லேட்டஸ்ட் பைக்குகளில் காணப்படும் தொழில்நுட்பங்களுடன்
(4 வால்வ், DOHC, Fi, லிக்விட் கூலிங்) இருப்பது ப்ளஸ். ஏப்ரல் 2020-ல் நாடெங்கும் அமலுக்கு வரப்போகும் BS-VI மாசு விதிகளுக்கு உட்பட்டு இந்த இன்ஜின் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் டிசைன் போலவே, இன்ஜினும் இத்தாலிய மற்றும் இந்திய கூட்டுத் தயாரிப்பாக இருக்கிறது. மஹிந்திராவின் மோஜோ பைக்கில் இருந்த 295 சிசி இன்ஜினைப் பின்பற்றியே செய்யப்பட்டிருந்தாலும், 76 மிமீ Bore & 65 மிமீ Stroke அளவுகளைத் தவிர எல்லாமே ஜாவாவுக்கு ஏற்றபடி மேம்படுத்தப்பட்டிருப்பதாகத் (மிட் ரேஞ்ச் பவர் மற்றும் Flat Torque Curve) தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது வெளிப்படுத்தும் 27bhp பவர் மற்றும் 2.8kgm டார்க் ஆகியவை மோஜோ பைக்கையே நினைவுபடுத்துகின்றன. பேரக் பைக்கில் இருக்கும் Big Bore 334சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின், 30.5bhp பவர் மற்றும் 3.1 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளன. 

சேஸி, சஸ்பென்ஷன், பிரேக்ஸ்

Jawa

டபுள் க்ரெடில் சேஸி - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பர்கள் - ஸ்போக் வீல்கள் - டிஸ்க்/டிரம் பிரேக்ஸ் என வழக்கமான மெக்கானிக்கல் அம்சங்கள்தான், ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்கில் இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்தில் ஏபிஎஸ் உடனான 280மிமீ Bybre டிஸ்க் பிரேக் - 90/90-18 MRF டியூப் டயர் மற்றும் பின்பக்கத்தில் 153 மிமீ டிரம் பிரேக் - 120/80-17 MRF டியூப் டயர் வழங்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இது முன்பக்க டிஸ்க் பிரேக் உடனான ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350/500 பைக்குகளில் இருக்கும் அதே அளவுகள்தான்!  ஆனால் பேரக் பைக்கின் சேஸி வித்தியாசமாக இருந்ததுடன், பின்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. குறைவான 765மிமீ சீட் உயரம் & 170 கிலோ எடை மற்றும் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை, அனைத்து ரைடர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். 1,369 மிமீ வீல்பேஸ், பைக்கின் நிலைத்தன்மைக்குக் கைகொடுக்கலாம். 

புக்கிங் & டீலர் நெட்வோர்க்

Jawa

இந்தியா முழுக்க 105 நகரங்களில் டீலர்களை நிர்ணயித்திருக்கும் க்ளாஸிக் லெஜண்ட்ஸ் நிறுவனம், அதில் 64 டீலர்கள் முழு செயல்திறனுக்கு வந்துகொண்டிருப்பதாகச் சொல்லியுள்ளது. முதல் ஜாவா டீலர்ஷிப், அடுத்த மாதத்தில் திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஆன்லைனில் ஜாவா & ஜாவா 42 பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கியிருந்தாலும், டெலிவரிகள் ஜனவரி 2019-ல் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ் பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கும் இந்த ஜாவா பைக், அதைவிட விலை அதிகமாகவே இருக்கிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The Jawa forty two. Available in 6 colour options. What's your favorite? #Jawa #JawaMotorcycles #fortytwo

A post shared by Jawa Motorcycles (@jawamotorcycles) on

என்றாலும், பவர்ஃபுல் இன்ஜின் - குறைவான எடை - மாடர்ன் பேக்கேஜ் - தரம் ஆகியவற்றில் இது அசத்துகிறது. ஆனால், இந்த ரெட்ரோ மாடர்ன் பைக்கில் LED எங்குமே இல்லை. தவிர ராயல் என்ஃபீல்டு உடன் ஒப்பிடும்போது, இதன் டீலர் நெட்வோர்க் சிறிது என்பதுடன், பராமரிப்புச் செலவுகள் குறித்த தெளிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இவை எல்லாமே மஹிந்திராவின் பிதாம்பூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. 

ஒரே வாரத்தில், 2-3 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், RE 650சிசி ட்வின்ஸ் & ஜாவா என பைக் ஆர்வலர்களுக்கு செம ஆப்ஷன்கள் கிடைத்திருக்கிறது. இவை சிங்கிள் சிலிண்டர் மற்றும் பேரலல் ட்வின் இன்ஜின்களைக் கொண்ட போட்டியாளர்களை (கேடிஎம், கவாஸாகி, பிஎம்டபிள்யூ, யமஹா, டிவிஎஸ், பஜாஜ்) எப்படிச் சமாளிக்கும் என்பது, போகப்போகத் தெரிந்துவிடும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close