வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (16/11/2018)

கடைசி தொடர்பு:14:39 (03/12/2018)

``எள்ளு மட்டுமே ரெண்டு, மூணு ஏக்கருக்குப் போட்டுருக்கேன்!'' - விஜி சந்திரசேகர்

சில நேரங்களில் வெண்டைக்காய், கத்திரிக்காயெல்லாம் டன் கணக்கில் விளைஞ்சுடும். அப்ப எங்க பண்ணை பக்கத்துல வசிக்கிறவங்களை எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காய்கறிகளை கொடுத்து விடுவோம்.

விஜி சந்திரசேகரை, வித்தியாசமான கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கும் சிறந்த நடிகையாக நமக்குத் தெரியும். அவருடைய விவசாய முகமும், ஆர்கானிக் பயிர் வளர்ப்பில் அவருக்கிருக்கும் அபரிமிதமான ஈடுபாட்டையும் கேட்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. 

விஜி சந்திரசேகர்

``ஆர்கானிக் விவசாயம் செய்றவங்க பின்னணியில் ஏதாவது ஒரு பிரச்னை வந்து, அதிலிருந்து மீண்டு வந்த கதை ஒண்ணு இருக்கும். என்னைப் பொறுத்தவரை ஹெல்த்தி... ஹெல்த்தி... ஹெல்த்தி! இது ஒண்ணு மட்டுமேதான், நான் ஆர்கானிக் பயிர் வளர்ப்புல ஈடுபாடு காட்டுவதற்கு காரணம். என் சின்ன வயசிலிருந்தே, ஹெல்த் கான்ஷியஸ் என் மனசுல ஊறின விஷயம். 

டிராக்டரில்

எங்களுக்கு மகாபலிபுரம் பக்கத்தில் 10 ஏக்கரில் ஒரு பண்ணை இருக்கு. கிட்டத்தட்ட 20 வருஷமா அந்தப் பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்துல நம்ம வீட்டுக்கு மட்டும் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளின்னு சில காய்கறிகளை மட்டும் விளைவிக்கலாம்னு நினைச்சுதான் ஆரம்பிச்சோம். ஆனா, கடையில் வாங்குற காய்கறிகளுக்கும், எங்க பண்ணையில் இயற்கை முறையில் வளர்ந்த காய்கறிகளுக்கும் இருந்த ருசி வித்தியாசம், என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. ரசாயன மருந்து ஏதும் தெளிக்காத வெண்டைச்செடியிலிருந்து ஃபிரெஷ்ஷா காய்களைப் பறிச்சு, சாம்பார் வைச்சா அத்தனை மணமா, ருசியா இருந்தது. அதனால, வீட்டுக்குத் தேவையான அத்தனை காய்கறிகளையும் நம்ம பண்ணையில்தான் பயிர் வைக்கணும்னு முடிவு பண்ணி, ஆட்களை வேலைக்குப் போட்டு களத்துல இறங்கினோம். இப்ப வெங்காயத்துல ஆரம்பிச்சு கறிவேப்பிலை, கொத்துமல்லி வரைக்கும் எங்க பண்ணை டூ எங்க வீட்டு கிச்சன்தான்'' என்று சிரிப்பவர், அடுத்து சொன்னதுதான் ஆரோக்கியத்தின் உச்சமான விஷயம். 

``காய்கறிகள் மட்டுமல்ல, சமையல் எண்ணெய்களைக்கூட நாங்க கடைகளில் வாங்குறது கிடையாதுங்க. இதுக்காக எள்ளு மட்டுமே கிட்டத்தட்ட மூணு ஏக்கருக்கு விதைச்சு வைச்சிருக்கோம். கடலை எண்ணெய்க்காகக் கொஞ்சம் வேர்க்கடலையும் விதைச்சிருக்கோம். நல்லா முத்தினதும், மரச் செக்குகளில் கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்துப்போம். இந்த நல்லெண்ணெயும் கடலை எண்ணெயும்தான் அந்த வருஷம் முழுக்க சமையலுக்குப் பயன்படுத்துவோம். நம்ம அம்மா காலத்துல, பாட்டி காலத்துல எல்லாம் இப்படி எண்ணெய் ஆட்டி வருஷம் முழுக்கப் பயன்படுத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். அதைத்தான் நாங்களும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கோம்' என்பவரின் பண்ணையில், இதற்கு முன் தென்னந்தோப்பும் இருந்ததாம். தென்னை மரங்களில் பூச்சிகள் விழுந்து நிறைய மரங்கள் பட்டுப்போய் விழுந்துவிட்டனவாம். தற்போது இருக்கும் சில மரங்களிலிருந்து வீட்டுக்குத் தேவைக்கான இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறோம் என்கிறார்.  

பப்பாளி மரங்களுடன்

``ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் மாதிரி என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் சிலருக்கும் சொந்தக்காரங்களுக்கும் அவங்களுக்குப் பிடிச்ச காய்கறிகளை அனுப்பி வைப்பேன். மத்தபடி, வீட்டுக்குப் போக ஆர்கானிக் ஸ்டோர்ஸ்க்கு சப்ளை பண்ணிடுவேன். சில நேரங்களில் வெண்டைக்காயைப் பத்தடிக்குப் பத்தடி விதைச்சாலே நிறைய காய்ச்சுடும். கத்திரிக்காயெல்லாம் டன் கணக்கில் விளைஞ்சுடும். அப்ப எங்க பண்ணை பக்கத்துல வசிக்கிறவங்களை எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் காய்கறிகளைக் கொடுத்து விடுவோம். வியாதிகள் பெருகின இந்தக் காலத்துல, அன்னதானம், கல்விதானம் மாதிரி ஆர்கானிக் காய்கறிகள் கொடுக்கிற ஆரோக்கிய தானமும் அவசியம்'' என்று அர்த்தமாகப் பேசி முடித்தார் விஜி சந்திரசேகர்.  


டிரெண்டிங் @ விகடன்