வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (16/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (16/11/2018)

`பயன்படாத ட்ராக்குக்குப் பல கோடி செலவு!' - இந்தியா குறித்து ஆதங்கப்பட்ட லூயிஸ் ஹாமில்டன்

உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஃபார்முலா 1 ரேஸில் 5 முறை சாம்பியம் பட்டம் வென்றவர் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton).  F1 வரலாற்றில் மைக்கேல் ஷூமேக்கருக்குப் பிறகு அதிக ரேஸில் (69 ரேஸ்) வென்றவர் இவர். லூயில் ஹாமில்டன் நேற்று பி.பி.சி-க்கு கொடுத்த பேட்டியில் ரேஸ் டிராக்குகளைப் பற்றிப் பேசும்போது

``இந்தியா கொஞ்சம் விசித்திரமானது. அது ஒரு ஏழை நாடு. ஆனால், அங்கேயும் ஒரு பிரமாண்டான, அழகான ரேஸ் டிராக் இருப்பது பெரிய முரண்பாடாக உள்ளது" என கமென்ட் அடித்திருந்தார்.

lewis hamilton

ஹாமில்டனின் இந்த கமென்ட்டுக்கு இந்திய ஃபார்முலா ஒன் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்ப, அதைச் சமாளிக்கும்விதமாகத் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த கமென்ட்டுக்கு விளக்க உரை ஒன்றை அளித்துள்ளார் ஹாமில்டன்.

``உலகத்தில் இருக்கும் அழகான இடங்களில் இந்தியாவும் ஒன்று. அதன் கலாசாரம் வியப்பானது. நான் இந்தியாவில் பிரமாதமான நேரத்தைக் கழித்திருக்கிறேன். இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக இருந்தாலும், ஏழ்மையும் அதிகமாகவே இருக்கிறது. அங்கு ஒரு கிராண்ட் பிரீ ரேஸ் ஓட்டுவது எனக்கு விசித்திரமானதாகத்தான் இருந்தது. அவ்வளவு வீடில்லா மக்களைக் கடந்து பணம் ஒரு பொருட்டாக மதிக்கப்படாத பெரிய பிரமாண்டமான அரங்கில் நுழைந்தேன்."

பலநூறு கோடிகளை இப்போது பயன்பாட்டிலேயே இல்லாத ஒரு டிராக்குக்கு செலவு செய்துள்ளார்கள். அந்தப் பணத்தை பள்ளிகளுக்கோ, வீடுகளுக்கோ செலவு செய்திருக்கலாம். நாங்கள் அங்கு ரேஸ் ஓட்டியபோது, `விலை அதிக'ம் என்று ரேஸ் பார்க்க யாருமே வரவில்லை. இருந்தாலும் அங்கும் சில அற்புதமான ரசிகர்கள் கிடைத்தார்கள்." 

இந்தப் பதிவுகளுக்குப் பிறகு கடைசியாக, ``இந்தியாவின் உணவுதான் பெஸ்ட். எனக்கு ரொம்ப பிடித்தமானது இந்தியாவின் உணவு.  இந்த நாடு மாறுவதற்கு ஒரு காலம் வரும் என்று நம்புவோம். இந்தியா உண்மைக்கு வெகுதூரத்தில் இருப்பதால், அதை நேசிக்கவில்லை என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என பதிவிட்டுள்ளார்."