` கர்ப்பிணிப் பெண்களுக்கான ஏழு வார சம்பளம்!' - மேனகா காந்தியின் உத்தரவுக்குப் பெருகும் வரவேற்பு | Lawyer Sudha Ramalingam shares her view on maternity leave benefits

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (16/11/2018)

கடைசி தொடர்பு:15:35 (16/11/2018)

` கர்ப்பிணிப் பெண்களுக்கான ஏழு வார சம்பளம்!' - மேனகா காந்தியின் உத்தரவுக்குப் பெருகும் வரவேற்பு

குடும்பத் தேவைகளுக்காகவும் சொந்தக்காலில் நிற்பதற்காகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. அதனால்தான், மகப்பேறு சட்டமும் 12 வார மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாகச் சென்ற வருடம் அதிகமாக்கியது. தற்போது, தங்களிடம் வேலைபார்க்கும் பெண்களுக்கு, சம்பளத்துடன் பிரசவ விடுமுறையைச் சரியாகத் தருகிற நிறுவனங்களுக்கு, அந்தக் கர்ப்பிணிப் பெண்களுக்கான 7 வாரச் சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசே வழங்கிவிடும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி அறிவித்துள்ளார். 15 ஆயிரத்துக்கு அதிகமாக மாதச் சம்பளம் வாங்கும் பெண்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும்.  

கர்ப்பிணி பெண்கள்

இந்த அறிவிப்புகுறித்து வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசும்போது, '' இந்த அறிவிப்பால், குழந்தை பிறந்த பிறகு வேலையை விட்டு விலகுகிற பெண்களின் எண்ணிக்கை குறையும். ஏனென்றால், சில  நிறுவனங்கள் 'மகப்பேறு விடுப்பில் செல்பவர்களுக்கு நாம் ஏன் காசு கொடுக்க வேண்டும்?' என்று நினைத்துக்கொண்டு, அவர்களை வேலையைவிட்டு நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கிவிடுகின்றன. அதிலும், அவர்கள் கூடுதலாக சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், இந்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கிறது. அதனால்தான், அரசே இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

இனிமேல், மகப்பேறு விடுப்பில் செல்லும் பெண்களைப் 'பொருளாதார பாரமாக' நிறுவனங்கள் நினைக்காது. இதனால், மகப்பேற்றுக்குப் பிறகு வேலையை விட்டுவிடுவது, மறுபடியும் புதிதாக வேலை தேடவேண்டிய அவஸ்தை இனிமேல் பெண்களுக்கு இருக்காது. தவிர, 'குழந்தை பிறந்துட்டா பெண்கள் வேலையை விட்டுடுவாங்க' என்கிற தவறான நம்பிக்கையும் சமூகத்திலிருந்து துடைத்தெடுக்கப்படும்'' என்றார். 


[X] Close

[X] Close