வெளியிடப்பட்ட நேரம்: 08:22 (17/11/2018)

கடைசி தொடர்பு:08:22 (17/11/2018)

பூமியை விடப்பெரிய 'சூப்பர் எர்த்'... மனிதர்களின் எதிர்காலம் இங்குதானா? #SuperEarth

ஒரு வேளை இந்தக் கிரகத்திற்கு சென்றால் கூட அவ்வளவு குளிரில் எப்படி உயிர் வாழ முடியும் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அந்தக் கவலையே வேண்டாம்.

பூமியை விடப்பெரிய 'சூப்பர் எர்த்'... மனிதர்களின் எதிர்காலம் இங்குதானா? #SuperEarth

தான் வாழும் இந்த பூமியைத் தவிர வெளியில் எங்காவது வாழ முடியுமா என்ற தேடல் மனிதனுக்குப் பல காலமாகவே இருக்கிறது. நீண்ட காலமாகத் தொடரும் இந்தத் தேடல் மனிதக் குலம் இருக்கும் வரை முடியப்போவதில்லை. பூமியை விட்டு வேறு கிரகத்தில் குடியேறுவது எதிர்காலத்தில் அவசியமான ஒன்றாக இருக்கும் என ஒரு தரப்பும், "இங்க இருக்குறதையே நம்மளால காப்பாத்த முடியல அப்புறம் எதுக்கு வேற கிரகத்தை தேடுறாங்க" என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றைக்கும் கூட உலகம் முழுவதிலும் நமது பூமியைத் தவிர வெளியே மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

பர்னார்ட்ஸ் ஸ்டார் B

தொடக்கத்தில் வெறும் கண்களாலும் தொலைநோக்கிகளால் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தத் தேடல் கடந்த சில நூற்றாண்டுகளாகப் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் பல இடங்களில் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் விண்வெளியை இடைவிடாமல் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இது தவிர விண்வெளியிலும் பல தொலைநோக்கிகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றின் மூலம் மனிதர்கள் வாழத் தகுதியான ஒரு கிரகத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சில சமயங்களில் உயிரினங்கள் வாழத்தகுதியான ஒருசில கிரகங்கள் கண்டுபிடிக்கப்படுவதும் உண்டு. சில சமயங்களில் நமதுப் பூமியில் இருக்கும் சில சூழல்கள் மட்டுமே காணப்படக் கூடிய கிரகங்களும் கண்டுபிடிக்கப்படும். அதேபோல தாங்கள் கண்டறிந்த 'சூப்பர் எர்த்' ஒன்றைப் பற்றி தற்பொழுது அறிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கிரகம் நமக்கு அருகில் இருப்பது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல்.

பூமியை விட 3.2 மடங்கு பெரிய கிரகம் இந்த 'பர்னார்ட்ஸ் ஸ்டார் B' 

சூப்பர் ஏர்த்

கடந்த 14-ம் தேதி நேச்சர் என்ற அறிவியல் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 'பர்னார்ட்ஸ் ஸ்டார் B' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிரகம் நமது பூமியை விட அளவில் 3.2 மடங்கு பெரியது என்றும் நமது சூரியக் குடும்பத்தில் காணப்படும் நெப்டியூன் கிரகத்தை விடச் சற்று சிறியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன்தான்; அதைத் தவிர்த்து நமக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமாக ஆல்ஃபா சென்டரி கருதப்படுகிறது. 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ஆல்ஃபா சென்டரியை விடச் சற்று அதிக தூரத்தில், ஆறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது 'பர்னார்ட்ஸ் ஸ்டார்' என்ற நட்சத்திரம். நமக்கு மிக அருகில் இருக்கும் ஒற்றை நட்சத்திரமாக இது கருதப்படுகிறது. 1916-ம் ஆண்டில் இதைக் கண்டறிந்த E.E. பர்னார்ட் என்ற அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூடப்பட்டுள்ளது. இந்த பர்னார்ட்ஸ் நட்சத்திரத்தைத்தான் சுற்றி வருகிறது, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூப்பர் எர்த்தான 'பர்னார்ட்ஸ் ஸ்டார் B'.

பூமி

இதைக் கண்டறிவதற்கு 20 ஆண்டுகளுக்கு மேல் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஒன்றிணைத்திருக்கிறார்கள் ஸ்பெயினைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இந்தக் கோள் 233 நாள்களுக்கு ஒரு முறை அதன் சூரியனான பர்னார்ட்ஸைச் சுற்றி வருகிறது. ஆனால் நாம் நினைப்பதைப் போல் இந்தக் கிரகம் கிடையாது. நமது பூமிக்கும் இதற்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. பூமியோடு ஒப்பிடுகையில் இந்தக் கிரகம் அதன் சூரியனிலிருந்து வெறும் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான அளவிலேயே ஆற்றலைப் பெறுகிறது. எனவே இது உறைந்த நிலையிலேயே காணப்படுகிறது. இந்தக் கிரகத்தின் வெப்பநிலை -170 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பர்னார்ட்ஸ் நமது சூரியனை விட இரண்டு மடங்கு வயது அதிகமான நட்சத்திரம் என்பதால் அதிலிருந்து ஆற்றலும், வெளிச்சமும் குறைவாகவே வெளிப்படுகிறது. அதன் காரணமாக இந்தப் புதிய கிரகத்தில் குளிரானது நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் இருக்கிறது, மேலும் இங்கே வெளிச்சமும் குறைவாகத்தான் இருக்கும். "நிச்சயமாக வாழத் தகுதியான இடத்தில் (Habitable Zone) இந்தக் கிரகம் காணப்படவில்லை. ஒரு வேளை அங்கே நீர் இருந்தாலும் வேறு ஏதாவது வாயு காணப்பட்டாலும் அது உறைந்த நிலையிலேயே காணப்படும். அதனால்தான் இது 'உறைந்த கிரகம்' அழைக்கப்படுகிறது" என்கிறார் இக்னாஸி ரிபாஸ் (Ignasi Ribas). ஸ்பெயின் விண்வெளி அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த இவரது தலைமையில்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கிரகத்தில் நமது பூமியைப் போன்றே பாறைப்பகுதிகளும், வளிமண்டலமும் காணப்படக் கூடும் என்று கருதப்படுகிறது. 'சூப்பர் எர்த்' என்று அழைப்பதற்கு மிக முக்கியமான காரணம் இதுதான். 

ஏற்கனவே ஆல்ஃபா சென்டரிக்கு அருகிலேயே ஒரு வேற்று கிரகத்தைக் கண்டறிந்துள்ளதாகக் கடந்த 2016-ம் ஆண்டில் விஞ்ஞானிகள் அறிவித்திருந்தார்கள். 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் அதன் பெயர் ப்ரெக்ஸிமா சென்டரி 'b'. எதிர்காலத்தில் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேற நினைத்தால் இந்தக் கிரகம் ஏற்றதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதைவிட்டால் அடுத்து ஆறு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் 'பர்னார்ட்ஸ் ஸ்டார் B' கிரகம்தான். ஒருவேளை இந்தக் கிரகத்திற்கு சென்றால்கூட அவ்வளவு குளிரில் எப்படி உயிர் வாழ முடியும் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அந்தக் கவலையே வேண்டாம் இங்கே இருந்து அவ்வளவு தொலைவு செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார்கள் என்றால் அங்கே எப்படி உயிர் வாழ முடியும் என்பதும் நமது எதிர்கால சந்ததியினருக்குத் தெரிந்திருக்கும்தானே? 


டிரெண்டிங் @ விகடன்