வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (16/11/2018)

கடைசி தொடர்பு:10:29 (17/11/2018)

1974-ம் ஆண்டில் அனுப்பப்பட்ட `அரிசிபோ மெசேஜ்...’ வேற்றுக் கிரக வாசிகளைச் சென்றடைந்ததா?

கூகுள் டூடில்

44 ஆண்டுகளுக்கு முன்னால் வேற்றுக் கிரக வாசிகளைத் தொடர்புகொள்ளும் நோக்கத்தில் அனுப்பப்பட்டதுதான் `அரிசிபோ செய்தி.’ இன்று அதை நினைவுபடுத்தும் வகையில் டூடில் ஒன்றை உருவாக்கியிருக்கிறது கூகுள். வேற்றுக் கிரக வாசிகள் இருக்கிறார்களோ இல்லையோ அதைப் பின்பு முடிவு செய்துகொள்ளலாம். ஒரு வேளை அவர்கள் இருப்பது உண்மையாக இருந்தால் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் செய்யலாமே. அப்படி ஒரு யோசனையில்தான் இந்தச் செய்தியை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது. நமது பூமிக்கு வெளியே இருக்கும் உயிர்களைத் தொடர்புகொள்வதற்கு அனுப்பப்பட்ட முதல் செய்தியாக அரிசிபோ மெசேஜ் பார்க்கப்படுகிறது. அதைச் சிறப்பிக்கும் விதமாகத்தான் இன்றைய கூகுள் டூடில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அரிசிபோ மெசேஜ் 44 ஆண்டுகளுக்கு முன்னால் 1974-ம் ஆண்டில் இதே தேதியன்று விண்ணில் அனுப்பப்பட்டது.

அரிசிபோ

இந்தச் செய்தி போர்டோ ரிக்கோவின் அரிசிபோ என்ற இடத்தில் அமைந்திருக்கும் விண்வெளி ஆய்வகத்திலிருந்து அனுப்பப்பட்டது. அதற்காக மிகவும் சக்தி வாய்ந்த 350 மீட்டர் ஆண்டெனாவில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர் பயன்படுத்தப்பட்டது. அனுப்பப்பட்ட
3 நிமிட தொடர் ரேடியோ செய்தியானது 1,679 பைனரி இலக்கங்களை உள்ளடக்கியிருந்தது. மெஸ்ஸியர் 13 என்ற நட்சத்திரக் கூட்டத்தை நோக்கி அனுப்பப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த நட்சத்திரக் கூட்டம். இந்தச் செய்தி ஒளியின் வேகத்தில் சென்றால்கூட அங்கே சென்றடைவதற்குக் குறைந்தபட்சமாக 25,000 ஆண்டுகள் ஆகும். ஒரு வேளை வேற்றுக் கிரக வாசிகளின் கையில் கிடைத்தால் அவர்களுக்கு நமது பூமியைப் பற்றித் தெரிவிக்கும் விதத்தில் பல தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி என்றைக்காவது ஒரு நாள் அனுப்பியவர்களிடம் சென்று சேரும் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.