வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (17/11/2018)

கடைசி தொடர்பு:10:41 (17/11/2018)

ஜாவா Vs ராயல் என்ஃபீல்டு... இதுதான் வித்தியாசம்! #JawaIsBack

ஜாவாவில் ஒன்றல்ல மூன்று பைக்குகள் வந்துள்ளன. ஐடியல் ஜாவாவாக தனது முதல் பிறவியில் பைக் ஆர்வலர்களுக்கு ரத்தமும் சதையுமாக இருந்த பைக்குகள் கிளாசிக் லெஜண்டின் உதவியோடு மீண்டும் களமிறங்கிவிட்டன. ராயல் என்ஃபீல்டு 350 பைக்குகளுக்கு மட்டுமே போட்டி என்று நினைத்தால் ராயல் என்ஃபீல்டு 500 பைக்குகளுக்கும் போட்டியாக வந்து நிற்கிறது ஜாவா. கிளாசிக் மற்றும் புல்லட் 500 பைக்குகளின் விற்பனை ஏன் பாதிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

ஜாவா vs ராயல் என்ஃபீல்டு

பிராண்ட்

ஜாவா என்ற பெயரை பயன்படுத்தும் உரிமையைப் பெற்று 2 ஆண்டுகள் கழித்து இப்போது அந்தப் பெயரை பயன்படுத்துகிறது கிளாசிக் லெஜண்ட்ஸ். இந்நிறுவனத்தில் மஹிந்திராவுக்கு 60 சதவிகித பங்குகள் இருப்பதால் மஹிந்திராதான் பாஸ். ராயல் என்ஃபீல்டுக்கு ஈச்சர் மோட்டார்ஸ் பின்புலமாக இருப்பது போல ஜாவாவுக்கு மஹிந்திரா. 

royal enfield interceptor 650

ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் டிசைன் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் மாடிஃபை செய்யப்பட்டவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஜாவா இதற்குச் சளைத்ததல்ல.  இத்தாலிய டிசைனர்களுடன் இணைந்து இந்தியாவில் இருக்கும் கிளாசிக் லெஜண்ட்ஸின் டிசைன் டீம் இந்த டிசைனை உருவாக்கியுள்ளது. வெறும் பைக்கை மட்டும் உருவாக்கவில்லை, பைக்குக்கான ஆக்ஸசரிஸ்களையும், ஹெல்மெட், உடை போன்றவற்றையும் சேர்ந்தே உருவாக்கியுள்ளார்கள். 

மாடல் & விலை

புது ஜாவா என்றால் ஒன்றல்ல மூன்று பைக்குகள். ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பேரக் (Perak).1960-ல் இந்தியாவில் விற்பனையான ஜாவா 250 டைப்-A பைக்கை அடிப்படையாக வைத்து உருவானதுதான் ஜாவா. இதன் விலை ரூ.1.64 லட்சம். ஜாவா 42 (Forty two) என்பது இதன் மாடர்ன் வெர்ஷன். மேட் பிளாக் நிறம், கொஞ்சம் ஆஃப்செட் பொசிஷன் (சென்டரில் இல்லாமல் கொஞ்சம் தள்ளி...) செய்யப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என சில மாடர்ன் டச் வைத்திருக்கிறார்கள். இதன் விலை ரூ.1.55 லட்சம். ஜாவா பெரேக் அடிப்படையில் ஜாவா 42 பைக் என்றாலும், இத  Bobber மாடல். மற்ற மாடல்களை விட நீளமாகவும், குள்ளமாகவும் இருக்கிறது பெரேக்.

Jawa perak

முழுவதும் மேட் ஃபினிஷ், சிங்கிள் பீஸ் சீட், மோனோஷாக் சஸ்பென்ஷன், முக்கோணம் போல பக்கவாட்டு டிசைன். சின்ன ஃபெண்டர் மற்றும் எக்ஸாஸ்ட் என மொத்தமும் மாடர்ன் க்ரூஸராகவே மாற்றியிருக்கிறார்கள். ஜாவா பேரக்கின் விலை ரூ.1.89 லட்சம். ஜாவாவும், ஜாவா 42 பைக்கும் கிளாசிக் மற்றும் புல்லட் பைக்குகளுக்கு நிகர். ஆனால், பேரக் கொஞ்சம் தனித்தன்மை வாய்ந்தது. என்ஃபீல்டிடமும் தண்டர்பேர்டு என்ற க்ரூஸர் மாடல் பைக் இருக்கிறது. இருந்தாலும், இப்போதைக்கு 300 cc பாப்பர் வைத்திருக்கும் ஒரே நிறுவனம் ஜாவாதான். மேலும், கிளாசிக் லுக்கை அள்ளிக்கொடுக்கும் ராயல் என்ஃபீல்டில் க்ரோம் மாடல் 500 cc பைக்கில் மட்டுமே உள்ளது. அதன் விலை ரூ.2.37 லட்சம் (ஆன்-ரோடு). இதே ஸ்டைலில் இருக்கும் ஜாவாவின் உத்தேச ஆன்-ரோடு விலை ரூ.2.05 லட்சம்.

Jawa instrument cluster

வேகம்

ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளில் இருப்பது 293 cc சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின். இது 27 bhp பவர் மற்றும் 28 Nm டார்க் கொண்டது. ஆனால், பேரக்கில் 334 cc இன்ஜின் உள்ளது. இது 30 bhp பவரையும், 31 Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. ஜாவா இன்ஜினில் FI உண்டு. ராயல் என்ஃபீல்டில் 500ல் மட்டுமே FI உண்டு. மோஜோவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இன்ஜின்தான் என்றாலும் மோஜோவை விட வேகமானது என்கிறார்கள். 0-100 கி.மீ வேகத்தை 10 நொடிகளுக்குள் தொட்டுவிடும் என்று உறுதியளித்துள்ளார்கள். 182 கிலோ மோஜோவே 9.8 நொடிகளில் தொட்டுவிடும், அதைவிட 12 கிலோ எடை குறைவான ஜாவா இன்னும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்ளும். 

இப்போது ராயல் என்ஃபீல்டுக்கு வருவோம். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, 19.8 bhp பவரையும் 28.5 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. கிளாசிக் 500, 27.2 bhp பவரையும், 42 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. அதான் அதிக டார்க் இருக்கே என உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஜாவாவின் எடை 170 கிலோ. ராயல் என்ஃபீல்டு 350-யின் எடை 192 கிலோ. கிளாசிக் 500-ன் எடை 194 கிலோ. 24 கிலோ எடை குறைவு என்பதால் 28 Nm டார்க் போதுமானது. கிளாசிக் 350, 0-100 கி.மீ வேகத்தைத் தொட 15.5 நொடிகள் தேவை. கிளாசிக் 500-க்கு 12.6 நொடிகள்.

ஜாவா பைக்குகள் அப்போதைய ஆஃப்ரோடு கிங். அதே குணம் புதிய ஜாவாக்களிலும் இருக்கிறது என்றால் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் விரும்பிகளும் சேர்ந்தே ஜாவா பக்கம் தாவி விடுவார்கள் போல!

தரம்

வந்திருக்கும் மூன்று பைக்குகளையும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததில் எங்குமே வெல்டிங்குகள் வெளியே தெரியும்படியாக இல்லை. க்ரோமின் தரம், பைக்கின் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும் விதம் என எல்லாமே விலை உயர்ந்த பைக் என்பதைக் காட்டுகிறது.

முன்பதிவு

ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளின் முன்பதிவுகள் ஜாவா இணையதளத்தில் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்கள். டிசம்பர் முதல் வாரத்தில் டீலர்களும் ஜாவா பைக்குகளை விற்பனை செய்ய தயாராகிவிடுவார்கள். ஜாவா பைக்குகளை விற்பனை செய்ய தற்போது 105 டீலர்ஷிப்புகளை உருவாக்கியுள்ளார்கள். மேலும் 65 டீலர்கள் உருவாக்கவுள்ளதாகவும் சொல்கிறார்கள். முன்பதிவு செய்பவர்களுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் பைக் டெலிவரி செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறது கிளாசிக் லெஜண்ட்ஸ். ஜாவா பேரக் விற்பனை செய்ய இன்னும் 5-6 மாதங்கள் ஆகும். 

இந்த விஷயத்தில் ராயல் என்ஃபீல்டுதான் டாப். ராயல் என்ஃபீல்டுக்கு 600-க்கு அதிகமான ஷோரூம்கள் உண்டு. கிட்டத்தட்ட இந்தியாவில் எல்லா முக்கிய பகுதிகளிலும் ராயல் என்ஃபீல்டு ஷோரூம்கள் உண்டு. இதைத் தவிர ராயல் என்ஃபீல்டுகளுக்கு என்று ஸ்பெஷல் மெக்கானிக்குகள் எல்லா ஊரிலும் இருப்பார்கள். இதைத் தவிர ராயல் என்ஃபீல்டு பைக்குகள் முன்பதிவு செய்தால் இப்போது ஒரு மாதத்தில் கிடைத்துவிடும்.

உலகில் அதிக நாட்கள் தயாரிப்பில் இருக்கும் பைக் என்பதைக் தாண்டி ராயல் என்ஃபீல்டை இன்னொரு விஷயத்தில் ஜெயிக்கவே முடியாது. குஷ்பு கோயில் போல ராஜஸ்தானில் புல்லட்டுக்கு கோயில் உண்டு.

சரி, உங்கள் தேர்வு எது? ராயல் என்ஃபீல்டா பைக்குகளா? புதிய ஜாவா பைக்குகளா?


டிரெண்டிங் @ விகடன்