வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (17/11/2018)

கடைசி தொடர்பு:08:34 (17/11/2018)

வெளிப்படாத திறமை பயனற்றுப் போகும்... உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

சிலருக்கு அபாரமான ஆற்றல் இருந்தாலும், அதைப் பயன்படுத்த மாட்டார்கள். விளைவு, வாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள். தன்னையே நொந்துகொள்வார்கள். அதை உணர்த்தும் கதை!

வெளிப்படாத திறமை பயனற்றுப் போகும்... உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

`ஒருவர் ஒரு பொருளை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தவில்லையென்றால்,  அவருடைய வாழ்நாளில் அந்தப் பொருளை அவர் திரும்ப பயன்படுத்தவே போவதில்லை’ என்றொரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. 

தன்னம்பிக்கை கதை

வேப்பங்குச்சியில் இருந்து வைர அட்டிகை வரை இணையத்தில் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஏராளம் கொட்டிக் கிடக்கின்றன. தேவையிருக்கிறதோ இல்லையோ விலை உயர்ந்த பொருட்களை ஆசைப்பட்டு வாங்குகிறோம். அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் தோன்றும்போது எடுத்துப்பார்த்து, ஆனந்தப்பட்டுக்கொள்கிறோம். சில மாதங்களில் அப்படியொரு பொருள் நம்மிடம் இருப்பதையே மறந்துவிடுவோம். திடீரென்று ஒரு நாள் எடுத்துப் பார்க்கும்போது, அந்தப் பொருள் பயன்படுத்தத் தகுதியற்றதாக்கி, குப்பையில் வீசவேண்டிய நிலையில் இருக்கும். வருத்தப்படுவோம். 

அத்தகைய விலையுயர்ந்த பொருள்களை போல... சிலருக்கு அபாரமான ஆற்றல் இருந்தாலும், அதைப் பயன்படுத்த மாட்டார்கள். விளைவு, வாழ்க்கையில் பின்தங்கியே இருப்பார்கள்... தன்னைத் தானே நொந்துகொள்வார்கள். அதை உணர்த்தும் கதை இது!

ஓர் ஊரில் ஏழை ஒருவர் இருந்தார். அவருக்கு தங்கப் புதையல் ஒன்று கிடைத்தது. அவருக்கு அதைச் செலவு செய்யும் ஆசையில்லை. தங்கப் புதையலை தன்னுடைய வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தார். தினமும், ரகசியமாக அதை எடுத்துப் பார்த்து, ஆனந்தப்பட்டுக்கொள்வார். பிறகு, அதே இடத்தில் வைத்து மூடிவிடுவார். இப்படியே சில மாதங்கள் போய்க்கொண்டிருந்தன. ஒருநாள், அவர் வந்து பார்க்கும்போது அந்த இடத்தில் தங்கக் கட்டி இல்லை. அவரை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒருவர், அதைத் திருடிச் சென்றிருந்தது அவருக்குத் தெரியாது. 

தங்கத்தை பயன் படுத்த வேண்டும்

புதையல் மாயமானதால் ஏழைக்கு நெஞ்சடைத்துவிட்டது. கேவிக் கேவி அழுதார். அழுதுகொண்டே வீட்டுக்குப் போனார். அழுகை சப்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரர் ஓடோடி வந்து பார்த்தார். ஏழை நடந்ததைச் சொல்லி, அவரிடம் புலம்பினார். அப்போது, `தங்கப் புதையல் இருந்த இடத்தில், அதே அளவுக்கு ஒரு கருங்கல்லை வைத்து மூடி, புதையல் என்றே நினைத்துக்கொள்ளுங்கள்.. பிரச்னை சரியாகிவிடும்’ என்று, பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். புரியாமல் விழித்தார் ஏழை!

`முன்பு, நீங்கள் தங்கப் புதையலை ஒளித்து வைத்துப் பார்த்துக்கொண்டு மட்டும்தானே இருந்தீர்கள்? இப்போது, கருங்கல்லைப் புதைத்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கப்போகிறீர்கள். எப்படியும் அதை நீங்கள் பயன்படுத்தப்போவதில்லை. எனவே, இரண்டும் ஒன்றுதான்!’ என்று விளக்கினார். ஏழைக்கு ஞானம் பிறந்தது!

ஏழை

உங்களிடம் உள்ள சிறப்பான ஆற்றல் எதுவோ... அதை மறைத்து வைக்காதீர்கள். கண்டுபிடியுங்கள். பட்டைத் தீட்டி ஜொலிக்க விடுங்கள். இந்தச் சமூகத்தில் நீங்கள் ஒரு வெற்றியாளராகக் கொண்டாடப்படுவீர்கள். 

நீதி: தங்கமாக இருந்தாலும் பயன்படுத்தினால்தான் மதிப்பு... இல்லையேல் அதுவும் கருங்கல்லுக்குச் சமம்தான்!


டிரெண்டிங் @ விகடன்