வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (17/11/2018)

கடைசி தொடர்பு:12:48 (17/11/2018)

ஹார்லி, கவாஸாகி, கேடிஎம்-களிடமிருந்து எப்படி வித்தியாசப்படுகிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650..?!

இந்தியாவில் விலைகுறைவான 2 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக் என்ற பெருமையை, கவாஸாகி நின்ஜா 300 பைக்கிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650.

ராயல் என்ஃபீல்டு 650சிசி ட்வின்ஸ்.... பைக் ஆர்வலர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் இவை, கடந்தாண்டு மிலனில் நடைபெற்ற EICMA மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவில் இது 4 - 5 லட்ச ரூபாய்க்கு வெளிவரலாம் எனச் சொல்லப்பட்டது. 2.89 - 3.11 லட்ச ரூபாய் சென்னை ஆன்ரோடு விலையில் தடாலடியாகக் களமிறங்கியிருக்கும் இன்டர்செப்டர் 650, விலை விஷயத்தில் தற்போது கேடிஎம் டியூக் 390 - கவாஸாகி நின்ஜா 300 ஆகியவற்றுடனும், இன்ஜின் திறனில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 - கவாஸாகி Z650 பைக்குடனும் போட்டிபோடுகிறது. 

டிசைன்

டெக்னிக்கல் விவரங்களைப் பார்க்கும்போதே ஒவ்வொரு பைக்கும் ஒரு டைப்பில் இருப்பதுபோல, டிசைனிலும் வித்தியாசமாகவே இருக்கின்றன. இன்டர்செப்டர் 650 ஒரு ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தட்டையான சீட், நீளமான பெட்ரோல் டேங்க், வழக்கமான ஹேண்டில்பார், கொஞ்சம் பின்னோக்கி வைக்கப்பட்டிருக்கும் ஃபுட் பெக்ஸ், சொகுசான ரைடிங் பொசிஷன் என சிம்பிளான அம்சங்களே இருக்கின்றன. 

நேக்கட் ஸ்போர்ட் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் டியூக் 390, ஷார்ப்பான டிசைன் மற்றும் பளிச் கலர்களால் கவர்ந்திழுக்கிறது. தட்டையான ஹேண்டில்பார் - பின்னோக்கி இருக்கும் ஃபுட் பெக்ஸ் காரணமாக, ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் கிடைத்துவிடுகிறது. முந்தைய மாடலைவிட சீட் பெரிதாக இருப்பதுடன், குஷனிங்கும் பெட்டராக உள்ளது.

இன்டர்செப்டர் 650

ஒரு நின்ஜா பைக் எப்படி இருக்குமோ, ஃபுல் ஃபேரிங்குடன் அப்படிக் கச்சிதமாக ஈர்க்கிறது நின்ஜா 300. கவாஸாகியின் லேட்டஸ்ட் ZX-6R & நின்ஜா 400 ஆகிய பைக்குகளுடன் ஒப்பிடும்போது பழைய டிசைனாகவே இருந்தாலும், இன்றும்கூட பார்வைக்கு அழகாகவே இருக்கிறது நின்ஜா 300. மினி சூப்பர் ஸ்போர்ட் பைக்காக பொசிஷன் செய்யப்பட்டிருப்பதால், இதன் ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவே உள்ளது. ஆனால், கேடிஎம் RC390 பைக்குடன் ஒப்பிடும்போது இது சொகுசாகவே இருக்கிறது. 

க்ரூஸர் பைக் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி காட்சியளிக்கிறது ஸ்ட்ரீட் 750. தாழ்வான வடிவமைப்பு மற்றும் கறுப்பு நிற மெக்கானிக்கல் பாகங்கள் ஆகியவை இதற்கான உதாரணம். சொகுசான சீட் மற்றும் கால்களை நீட்டி உட்காரக்கூடிய ரைடிங் பொசிஷன் ஆகியவை ப்ளஸ். சிறிய பில்லியன் சீட் மற்றும் உயரமான ரைடர்களுக்கு இடநெருக்கடி ஆகியவை மைனஸ்கள். 

மாடர்ன் நேக்கட் பைக்காக இருக்கும் கவாஸாகி Z650, பார்க்க ஸ்போர்ட்டியாக இருக்கிறது. இருந்தாலும் பைக் ரிலாக்ஸ்டான சீட்டிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது. ரைடர் சீட் வசதியாக இருந்தாலும், பில்லியன் சீட்டில் அதை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றபடி பிராக்டிக்கலான பைக்காகவும் இருப்பது ப்ளஸ்.

Harley Davidson

வசதிகள்

பைக்கின் டிசைனைப் போலவே வசதிகளிலும் சிம்பிளாகவே இருக்கிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650. ரெட்ரோ பைக் என்பதால் LED லைட்டிங் - ஃபுல் டிஜிட்டல் மீட்டர் - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் போன்ற மாடர்ன் வசதிகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக இங்கே இருப்பது அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர். அனலாக் டயலில் வேகம் & ஆர்பிஎம் தெரிந்தால், இதற்குள்ளே இருக்கும் சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீனில் ட்ரிப்மீட்டர், ஓடோமீட்டர், ஃப்யூல் கேஜ் ஆகியவை தெளிவாகத் தெரிகின்றன.

இந்த ஏரியாவில் அடித்து நொறுக்குவது கேடிஎம் டியூக் 390தான். LED லைட்டிங் - TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் போன்ற மாடர்ன் வசதிகள் இருக்கின்றன. அந்த டிஸ்பிளேவில் கியர் இண்டிகேட்டர், கடிகாரம், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, சாட்டிலைட் நேவிகேஷன் ஆகிய அம்சங்கள் உள்ளது ப்ளஸ். இதற்கான கன்ட்ரோல் ஸ்விட்ச், இடதுபுற ஸ்விட்ச் கியரில் இருக்கிறது.

650-750cc Bikes

அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைக் கொண்டிருக்கிறது கவாஸாகி நின்ஜா 300. இங்கே ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர், கடிகாரம், வேகம் & ஆர்பிஎம் ஆகியவை இருக்கின்றன. ஆனால் இதில் கியர் இண்டிகேட்டர் மற்றும் மைலேஜ் ஆகியவை தெரியாதது நெருடல். மேலும் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர்களையும் அட்ஜஸ்ட் செய்யமுடியாது.

இந்த ஏரியாவில் பின்தங்கிவிடுகிறது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750. இதிலிருக்கும் ஒற்றை டயல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் டயலில் ஸ்பீடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர் ஆகியவை மட்டுமே தெரிகிறது. இதில் ஃப்யூல் கேஜுக்குப் பதிலாக, லோ ஃப்யூல் வார்னிங் இண்டிகேட்டர் மட்டுமே இருப்பது மைனஸ். அட்ஜஸ்டபிள் லீவர்களும் இங்கே கிடையாது.

Z650 பைக்கின் டிஜிட்டல் மீட்டர், Negative LCD ஸ்டைலில் இருப்பது செம. இதில் வழக்கமான தகவல்களுடன் ட்ரிப் மீட்டர், கியர் இண்டிகேட்டர், ரேஞ்ச் ஆகியவை கூடுதலாக இருக்கின்றன. அட்ஜஸ்டபிள் பிரேக் லீவர் இருந்தாலும், கிளட்ச் லீவரை அட்ஜஸ்ட் செய்யமுடியாது. 

Z650

இன்ஜின்

டிசைனைப் போலவே, இன்ஜின் விஷயத்திலும் இங்கே இருக்கும் பைக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கின்றன. 648சிசி பேரலல் ட்வின் இன்ஜினைக் கொண்டிருக்கும் இன்டர்செப்டர் 650, 47bhp பவர் மற்றும் 5.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இங்கிருக்கும் பைக்குகளிலே இருக்கும் ஒரே ஏர் கூல்டு - ஆயில் கூல்டு இன்ஜின் இது என்பதாலேயே, அளவில் பெரிதாக இருந்தாலும் இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் பவர் குறைவாகவே இருக்கிறது.

சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக இருந்தாலும், பவர்ஃபுல் பட்டாசாக பர்ஃபாமென்ஸில் வெடிக்கிறது டியூக் 390 பைக்கின் 373.2சிசி இன்ஜின். இதன் High Compression செட்-அப் காரணமாக, இது அட்டகாசமான 43.5bhp பவர் மற்றும் 3.7kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஆனால் ஸ்மூத்னெஸ் விஷயத்தில் இது கொஞ்சம் பின்தங்குவதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

300-373cc Bikes

இன்டர்செப்டர் பைக்கைப் போலவே, நின்ஜாவும் ஷார்ட் ஸ்ட்ரோக் அமைப்பைக் கொண்ட பேரலல் ட்வின், 296சிசி இன்ஜினையே கொண்டிருக்கிறது. ஆனால், ஆரம்பகட்ட மற்றும் மித வேகப் பயன்பாட்டை மனதில்வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் ராயல் என்ஃபீல்டு இன்ஜினுடன் ஒப்பிடும்போது, டாப் எண்ட் பர்ஃபாமென்ஸைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது கவாஸாகியின் இன்ஜின். கேடிஎம் உடன் ஒப்பிட்டால் இன்ஜினும் ஸ்மூத் ரகம்.

க்ரூஸர் பைக் என்பதற்கு ஏற்ப, இங்கிருக்கும் பைக்கிலே பெரிய 749சிசி, வி-ட்வின் இன்ஜினைக் கொண்டுள்ளது ஸ்ட்ரீட் 750. ஆனால், இதன் பவர் மற்றும் டார்க் ஆகியவை, ராயல் என்ஃபீல்டு பைக்கைவிடச் சுமார் 10% மட்டுமே அதிகம். இங்கிருக்கும் அனைத்து பைக்கிலுமே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தாம் உள்ளன. என்றாலும், ஸ்லிப்பர் க்ளட்ச் இல்லாத ஒரே பைக் இதுதான்.

இங்கிருக்கும் பைக்கில் வேகப்போட்டியில் வெல்லும் இன்ஜின் Z650 பைக்கில்தான் இருக்கிறது! தவிர தினசரிப் பயன்பாட்டுக்கும், வார இறுதிநாள்களில் டூர் அடிக்கவும், ரேஸ் டிராக்கில் விரட்டி ஓட்டவும் இந்த 649சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் ஈடுகொடுப்பது பெரிய ப்ளஸ்.

Ninja 300

மெக்கானிக்கல் அம்சங்கள்

கான்டினென்ட்டல் GT 535 மற்றும் ஹிமாலயன் பைக்குகளுக்கான ஃப்ரேம்களைத் தயாரித்த ஹாரிஸ் பர்ஃபாமென்ஸ் நிறுவனம்தான், இன்டர்செப்டர் 650 பைக்கின் புதிய டபுள் க்ரெடில் ஃப்ரேமையும் தயாரித்திருக்கிறது. இதன் பவர் டு வெயிட் ரேஷியோ 232.6bhp / டன். 202 கிலோ எடையுள்ள இந்த பைக்கில், 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் 18 இன்ச் Pirelli Phantom Sportscomp டியூப் டயர்கள் (முன்: 100/90, பின்: 130/70) உள்ளன. கேப்ரியல் நிறுவனத்தின் சஸ்பென்ஷன் (41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் & ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர்), Bybre நிறுவனத்தின் டிஸ்க் பிரேக் செட்-அப் (முன்: 320மிமீ, பின்: 240மிமீ) ஆகியவற்றைப் பொருத்தி, பைக்கின் விலை கட்டுக்குள் வந்திருக்கிறது.

டியூக் என்றாலே ட்ரெல்லிஸ் ஃப்ரேம் தானே? இதனுடன் எடை குறைவான உலோகத்தினால் ஆன பாகங்கள் சேர்வதால், பைக்கின் எடை வெறும் 163 கிலோ எடைதான்! WP நிறுவனத்தின் 43மிமீ USD & மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் 17 இன்ச் Metzeler M5s ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் (முன்: 110/70, பின்: 150/60) சேரும்போது, ஸ்போர்ட்டியான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கிறது. Bybre நிறுவனத்தின் ரேடியல் டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 320மிமீ, பின்: 230மிமீ) & 13.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் உண்டு; பவர் டு வெயிட் ரேஷியோ 292bhp / டன். 

ராயல் என்ஃபீல்டு

தற்போது உள்நாட்டு உதிரிபாகங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் நின்ஜா 300 பைக்கின் எடை 179 கிலோ. இங்கிருக்கும் பைக்கிலே பெரிய பெட்ரோல் டேங்க் இருப்பது இங்குதான் (17 லிட்டர்). MRF நிறுவனத்தின் 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் (முன்: 110/70, பின்: 140/60) - Endurance நிறுவனத்தின் டிஸ்க் பிரேக் (முன்: 290மிமீ, பின்: 220மிமீ) ஆகியவை, விலைக் குறைப்புக்குத் துணைநிற்கின்றன. 37மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் என வழக்கமான சஸ்பென்ஷன் செட்-அப்தான். இதன் பவர் டு வெயிட் ரேஷியோ 217.8 bhp / டன். 

233 கிலோ எடையுள்ள ஸ்ட்ரீட் 750தான், இங்கிருக்கும் பைக்கிலே எடை அதிகமான பைக். 13.1 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக்கின் முன்பக்கத்தில் 100/80- R17 MRF டயர் - 292மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 150/60- R15 MRF டயர் - 260மிமீ டிஸ்க் பிரேக் உள்ளன. டபுள் க்ரெடில் ஃப்ரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க், ட்வின் ஷாக் அப்சார்பர் என வழக்கமான மெக்கானிக்கல் பாகங்கள்தாம் ஸ்ட்ரீட் 750-ல் இருக்கின்றன. இங்கிருக்கும் அனைத்து பைக்கிலும் ஏபிஎஸ் இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்.

இங்கிருக்கும் பைக்கிலே பவர்ஃபுல் பிரேக்ஸ் மற்றும் பெரிய டயர்களைக் கொண்டிருப்பது Z650தான். அதாவது, முன்பக்கத்தில் இரட்டை 300மிமீ Nissin டிஸ்க் பிரேக் - 120/70 R17 டயர்கள் மற்றும் பின்பக்கத்தில் 220மிமீ ஒற்றை Nissin டிஸ்க் பிரேக் - 160/60 R17 டயர்கள் இருப்பதால், எந்த வேகத்திலும் பைக்கைக் கட்டுப்படுத்தக்கூடிய திறன் ரைடருக்குக் கிடைக்கிறது. மாடர்ன் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இருந்தாலும், 41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் என வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. 15 லிட்டர் பெட்ரோல் டேங்க், பைக்கின் அதிக 208 கிலோ எடைக்கான காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால், பவர் டு வெயிட் ரேஷியோ 323.5 bhp / டன் என்பது, இங்கிருக்கும் பைக்கிலே அதிகமானது.

Continental GT 650

யாருக்கு எந்த பைக்?

இந்தியாவில் விலைகுறைவான 2 சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக் என்ற பெருமையை, கவாஸாகி நின்ஜா 300 பைக்கிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650. ஆனால், இதுவொரு ரெட்ரோ பைக் என்பதால், மாடர்ன் வசதிகள் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும். தவிர 648சிசி இன்ஜின் இருந்தாலும், இது ஸ்போர்ட்ஸ் பைக்குகளுடன் போட்டி போடுவதற்கு தயாரிக்கப்பட்டது அல்ல.

சென்னை ஆன்ரோடு விலையான 2.87 லட்சத்துக்குக் கிடைக்கும் கேடிஎம் டியூக் 390, கொடுக்கும் காசுக்கு அதிக மதிப்பைத் தரக்கூடிய பைக்காக இருக்கிறது. லேட்டஸ்ட் வசதிகள், அதிரடியான பர்ஃபாமென்ஸ், சிறப்பான ஹேண்ட்லிங் ஆகியவை காம்ப்ளிமென்ட்! ஆனால் முன்னே சொன்ன அம்சங்களினாலேயே, இது த்ரில் விரும்பிகளுக்கு மட்டுமே பிடிக்கக்கூடிய பைக்காக இருக்கிறது.

KTM. Kawasaki

ஜப்பானிலிருந்து CKD முறையில் பாகங்களாக இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நின்ஜா 300 பைக்குடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு உதிரிபாகங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் நின்ஜா 300 பைக்கின் விலை 68 ஆயிரம் ரூபாய் குறைந்திருக்கிறது (சென்னை ஆன்ரோடு விலை: 3.73 லட்ச ரூபாய்). ஸ்மூத் இன்ஜின் மற்றும் மனநிறைவைத் தரும் சொகுசு சேரும்போது, சாலைகள் மற்றும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான பேக்கேஜ் கிடைத்துவிடுகிறது. ஆனால், இதன் அடுத்த தலைமுறை மாடலாக நின்ஜா 400 இந்தியாவுக்கு வந்துவிட்டதை இங்கே சொல்லி விடுகிறேன்.

இங்கிருக்கும் பைக்கிலே அதிக விலையைக் கொண்டிருப்பது, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750தான். சென்னை ஆன்ரோடு விலையான 6.33 லட்ச ரூபாய் என்பது அதிகமாகத் தெரிந்தாலும், சர்வதேச சந்தை மற்றும் வரலாற்று மதிப்புகொண்டபைக்கின் பிராண்ட் அதனை மறக்கடித்துவிடுகிறது. ஹார்லியின் மாடல்களிலேயே ஓட்டுதலுக்குப் பெயர்பெற்றிருக்கும் சிலவற்றில் இது முதன்மையானது. ஆனால், க்ரூஸர் எல்லாருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே.

6.01 லட்ச ரூபாய் சென்னை ஆன்ரோடு விலைக்குக் கிடைக்கும் கவாஸாகி நின்ஜா 650, ஆல்ரவுண்டர் பைக்காக அசத்துகிறது. எளிதான ஓட்டுதல், ஒரு சராசரி ரைடரின் அனைத்துத் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் இன்ஜினின் சிறப்பான பர்ஃபாமென்ஸ், நம் ஊர்ச் சாலைகள் மற்றும் ரேஸ் டிராக்கைச் சமாளிக்கும் சஸ்பென்ஷன், மனநிறைவைத் தரும் தரம் ஆகியவை இதன் பலங்கள். ஆனால், டீலர் நெட்வோர்க் மற்றும் சர்வீஸ் காஸ்ட் இதன் பலவீனங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்