Published:Updated:

"வாசகர்களே விழிப்புடன் இருக்க வேண்டும்!" தேசிய பத்திரிகை தினப் பகிர்வு

"வாசகர்களே விழிப்புடன் இருக்க வேண்டும்!" தேசிய பத்திரிகை  தினப் பகிர்வு
"வாசகர்களே விழிப்புடன் இருக்க வேண்டும்!" தேசிய பத்திரிகை தினப் பகிர்வு

"வாசகர்களே விழிப்புடன் இருக்க வேண்டும்!" தேசிய பத்திரிகை தினப் பகிர்வு

பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை தினம் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் எழுந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், ஜூன் 14 ,2018 , இரவு 7 மணி... பெயர் ஷுஜாட் புகாரி, அலுவலக வாகன நிறுத்தும் இடத்தில் தன் காரில் ஏறச் சென்றவர் காதில் கேட்டது துப்பாக்கிச் சத்தம். உடனடியாக மண்ணில் சரிந்தது அவர் உடல்.

திரிபுரா மாநிலம் அகர்தலா, நவம்பர் 21, 2017, காலை 11.30 மணி... அவர் பெயர் சுதீப் தத்தா பவுமிக், திரிபுரா துணை ராணுவப்படையினரின் தளத்தில், காவலர் ஒருவர் நேருக்கு நேர் அவரை நோக்கித் துப்பாக்கியை உயர்த்த, நடப்பது என்னவென்று அறிந்துகொள்வதற்குள் குண்டு பாய்ந்து சுதீப் தத்தாவின் உயிர் பிரிந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, செப்டம்பர் 5, 2017, இரவு 8 மணி... அவர் பெயர் கௌரி லங்கேஷ். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவர், கதவைத் திறந்துகொண்டிருந்தபோது, கடைசியாக அவர் கேட்டது துப்பாக்கிச் சத்தம் மட்டுமே. என்னவென்று புரிந்துகொள்வதற்குள், தலையிலும், கழுத்திலும் குண்டுகள் துளைக்க அந்த இடத்திலேயே மரணித்தார் கௌரி லங்கேஷ்.

இந்த மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இவர்கள் அனைவருமே சமூக அநீதிக்கு எதிராக மிக வலிமையாக தங்கள் குரலைப் பதிவு செய்த பத்திரிகையாளர்கள் என்பதுதான். இவர்கள் மட்டும் அல்ல, இந்தியாவில் இதுபோன்று கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்  கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை நாம் அறிந்தவரையில் 8 என்று தெரியவந்துள்ளது. உலக அளவில் இரண்டாண்டுகளில் 91 பத்திரிகையாளர்கள் மரணித்திருக்கிறார்கள். அவர்களில் 46 பேர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான். மரணங்கள் மட்டுமல்ல, 2017-ம் ஆண்டுவரை உலக அளவில், காணாமல் போன பத்திரிகையாளர்கள் 60 பேர், சிறைப்படுத்தப்பட்டவர்கள் 262 பேர் என்கிறது CPJ எனும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு. அதிலும் impunity என அழைக்கப்படும், இத்தகைய கொலைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்காமல் விடுவதில், இந்தியாவுக்கு உலக அளவில் 14-வது இடம் என்று தெரியவந்துள்ளது. 

நம் அரசியலமைப்பின் அடிநாதமாகக் கட்டமைக்கப்பட்டது பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் ஆகும். அந்த சுதந்திரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி மாபெரும் மாற்றங்களுக்கு வித்திடுபவர்கள் பத்திரிகையாளர்களே எனலாம். இந்தியாவின் சுதந்திரத்திலிருந்து, மத்தியில் உள்ள ஆட்சிவரை மக்களை ஒன்றுதிரட்டும் பிரசார ஆயுதமாகப் பத்திரிகைகள்தான் இன்றளவும் பெரும்பங்கு வகிக்கின்றன. அப்படிப் பத்திரிகைகள் என்னும் துப்பாக்கிகளுக்கு, வார்த்தைகளாகிய தோட்டாக்கள் வழங்கும் பத்திரிகையாளர்களை கௌரவிக்கும், தேசிய பத்திரிகை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ``பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியோ, ``அனைத்து வடிவங்களிலும் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட மத்திய பி.ஜே.பி. அரசு முழுமையாகக் கடமைப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

பத்திரிகையாளர்களை வாழ்த்துவது ஒருபுறம் இருக்கட்டும், உண்மையில் இந்தியாவில் தற்போது பத்திரிகை சுதந்திரம் என்பது, எந்தளவில் இருக்கிறது? எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு (RSF) வெளியிட்ட சமீபத்திய பத்திரிகை சுதந்திரம் குறித்த அறிக்கையில், 180 நாடுகளில் இந்தியாவுக்கு 138-வது இடம் என்று தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவுக்கு 136-வது இடம். பத்திரிகை சுதந்திரம் குறித்த விஷயத்தில் இந்தியாவின் நிலை தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருப்பது கசப்பான உண்மை. 

ஒரு பத்திரிகையாளரின் கருத்தியல், அவர் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது என்பது, ஜனநாயகத்தின் அடிப்படையைக் கேள்விக் குறியாக்கி விடும். உலக அளவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விமர்சனம் எழும்போது சம்பந்தப்பட்ட நாடுகள் விடைசொல்லும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் காஷோகியின் மரணமே அதற்குச் சாட்சி. இப்படிப் பத்திரிகையாளர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிடுவதில் இருக்கும் சுதந்திரம், அந்தக் கருத்து வெளியான பின்பு அவர்கள் குரல் நசுக்கப்படுவதில் மடிந்து போகிறது.

சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய அரசியல் எந்திரம், விமர்சனங்களுக்குப் பாராமுகம் காட்டுவது உலக அளவில் அதிகரித்துவருகிறது. பத்திரிகையாளர்களின் கருத்தியல் மீதான அடிப்படை அணுகுமுறையைச் சமூகம் மாற்றிக்கொள்வதுதான் இதற்கான விடையாக இருக்கமுடியும். இவையாவும் வெளிப்புறக் காரணங்களாக இருந்தாலும், பத்திரிகை சுதந்திரத்தை தடுக்கும் இரு முக்கியக் காரணிகள் பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களுக்குள்ளேயே இருக்கின்றன. அதையும் புரிந்து கொள்வதே உண்மையான பத்திரிகை சுதந்திரத்துக்கு வித்திடும்.

இந்திய பத்திரிகை சுதந்திரத்தை உட்புறமிருந்து அரசியல், வர்த்தகம் எனும் இரு வேறு காரணிகள் பெரிதாய் பாதிக்கின்றன. பத்திரிகை துறையின் நெறிமுறைகளை மனசாட்சியோடு கடைப்பிடிக்கும் பத்திரிகை நிறுவனங்களும் வெகுவாகக் குறைந்து வருகின்றன. தினசரிகளின் முதல் பக்கங்களை அரசியல் நிகழ்ச்சி அறிவிப்புகளும், பெரும் வர்த்தக விளம்பரங்களும் ஆக்கிரமிக்கும்போதே, செய்தி என்பதும் வர்த்தகமாகி, அரசியலாகிப் போனதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.

ஊடகங்கள், பத்திரிகைகள் எல்லாம் ஒரு காலத்தில், ஓர் அரசியல் மாற்றுக் கருத்தை வெளிப்படுத்தும் கருவிகளாகப் பயன்பட்டது என்பது மாறி, இன்றைய சூழலில் அவை சார்ந்த அரசியல் கட்சிகளின் கருத்தை நியாயப்படுத்தவும், எதிர்க்கட்சிகளை நோக்கிக் கேள்வி எழுப்பவும் மட்டுமே பயன்பட்டு வருகின்றன. தீர்க்கமாக, நடுநிலையாக, உள்ளதை உள்ளபடி சொல்வது மட்டுமன்றி, அவசியமானதை மட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்லும் ஊடகங்கள், பத்திரிகைகள் குறைந்துவிட்டன என்பதே உண்மை.  

 ஊடகத் துறையின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் விஷயம் வர்த்தகம். ஊடகங்கள், பத்திரிகைகள் செய்திகளைச் சொல்வது மாறி, செய்திகளை உருவாக்குவதை இன்று செய்துகொண்டிருக்கின்றன. சோஷியல் மீடியா ஆதிக்கத்தால், இன்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் எல்லாம் நிருபர் ஆகிவிட்ட நேரத்தில், `ட்ரெண்டிங்' எனும் ஒற்றை வார்த்தையே இன்று பெருவாரியான ஊடகங்களை ஆட்டுவிக்கின்றது என்பதை மறுக்கமுடியாது.

சுதந்திரமாகக் கருத்துகளைப் பதிவு செய்ய வழிவகுப்பதும், பதிவான கருத்துகள் ஆற்றும் எதிர்வினைகளிலிருந்து பத்திரிகையாளர்களை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை எனில், பதிவிடும் கருத்துகளில் நடுநிலையாய்ச் செயல்படுவதும், பதியப்பட வேண்டிய கருத்துகள் எதுவெனச் சரியாகத் தீர்மானிப்பதும் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கடமை எனில், சரியான செய்திகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவும், அந்தச் செய்திகளை ஆய்வுக்குட்படுத்தி புரிந்துகொள்ளும் திறனும், வாசகர்களாகிய, செய்தி நுகர்வோரின் கடமை ஆகும். 

செய்திகளின் நுகர்வு கலாசாரம் தற்போது பரிணமித்திருக்கிறது. ஒருவர் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வது அதிகரித்தும், ஆனால் ஒரு செய்தி அறிக்கையை முழுவதும் படிக்கும் நேரம் குறைந்திருப்பதாகவும் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு நியூஸ் ஸ்னாக்கிங் (News  snacking ) என்று தெரிவிக்கின்றனர். இப்பொழுதெல்லாம் செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமலேயே சமூகஊடகங்களில் பகிர்ந்து விடுகின்றனர். தேவையற்ற செய்திகள் பரவுவதும், பொய்யான செய்திகள் பதற்றத்தை அதிகரிப்பதும் அன்றாடம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவை செய்திகள் வாசிப்பதை தரமற்றதாக்கி விடுகின்றன. இந்நிலையில் அசுர வளர்ச்சி கண்ட தகவல் தொடர்பு அறிவியலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மக்கள் பழகிக்கொள்வதும் மிகவும் அவசியமாகிறது.

ஊடகங்கள் மற்றும் அச்சு இதழ்களுக்கான மரியாதையையும், சுதந்திரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் வலுவான காரணிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஊடக நிறுவனங்கள், தங்களைச் சுயவிமர்சனம் செய்துகொள்வதும் அவசியமாகிறது. பத்திரிகை சுதந்திரத்தினைப் பாதுகாப்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். அதேநேரத்தில் மேம்பட்ட புரிதலோடு வாசகர்கள் செய்தி நுகர்வதும் இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியமாக இருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு