பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

புனர்ஜென்மம்!

புனர்ஜென்மம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புனர்ஜென்மம்!

மு.பார்த்தசாரதி - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

துரை, மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பிய அந்த ஷேர் ஆட்டோவில் நாம் இறங்க வேண்டிய இடம், தணக்கன்குளம் நேதாஜி நகர். ‘நேதாஜி நகர் போகுமாண்ணே..?’ என்று கேட்டுவிட்டு ஏறிய இரண்டு அக்காக்களிடம், ‘அங்க உங்களுக்கு வள்ளியைத் தெரியுமா?’ என்றேன்.

“யாரு, அந்தக் கஞ்சா வீட்டு வள்ளியா?’’ என்று ஓர் அக்கா கேட்க... தலையாட்டினேன். “கஞ்சா விக்குற அவள குடும்பத்தோட போலீஸ் இழுத்துட்டுப் போறது நெதமும் நடக்குற கூத்து. திடீர்னு அவ, ‘இனி எங்க குடும்பம் கஞ்சா விக்காது. கஞ்சா வாங்க யாராவது வந்தா போலீஸ்ல புடிச்சுக்கொடுத்துடுவோம்’னு ஊரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கா. எங்க, அதையும் பாப்பம்...’’ என்றவர் சட்டென, ‘`நீ எதுக்கு தம்பி கேட்குற... என்ன, பொட்டலம் வாங்கப் போறியா?’’ என்று அதட்ட, விவரத்தைச் சொன்னேன். அதற்குள் தணக்கன்குளம் வர, அனைவரும் இறங்கிக்கொண்டோம்.

புனர்ஜென்மம்!

நேதாஜி நகர் பேருந்து நிலையத்திலிருந்து பத்து நிமிட நடை. கருவேல மரங்கள் நின்றிருந்த அந்தப் பகுதியில், தனித்து விடப்பட்டிருந்தது அந்த வீடு. வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக இரும்பு வேலி போடப்பட்டிருந்தது. வீட்டின் காம்பவுண்டு சுவரில் பளிச்செனத் தெரிந்தது அந்தப் போஸ்டர். ‘வள்ளி குடும்பத்தினர் யாரும் கஞ்சா விற்க மாட்டார்கள். பிற நபர்கள் விற்பனை செய்தாலும், கேட்டு வருபவர்களையும் பிடித்துக் காவல்துறை வசம் கொடுப்போம். இப்படிக்கு வள்ளி குடும்பத்தினர்!’

“வாங்கய்யா” - வள்ளி வரவேற்றார். கைகளைப் பற்றி அவருக்கு வாழ்த்துகள் சொன்னதும் சட்டென ஒரு நெகிழ்ச்சி அவரிடம். காபி போட்டு எடுத்து வந்தவர், ‘`நான் திருந்திட்டேன்யா. இப்ப எங்க வீட்டுல காப்பித்தண்ணி குடிப்பீகயில்ல நீங்க...’’ என்றார் டம்ளர்களை நீட்டியபடி.

“வள்ளின்னு எம்பேரச் சொன்னாலே இந்த ஜில்லாவுல இருக்குற ரவுடிகள்ல பாதிப் பேரு மெரண்டு போவாய்ங்க. போலீஸ்காரவுகளுக்கும் சர்க்காருக்கும் பயப்படாத ரவுடிககூட நான் கேட்டுக்கிட்டா பணிஞ்சு போயிடுவாய்ங்க. 30 வருசத் தொழிலு. என்னத்த பெருமை இதுல? நான் இந்தத் தொழிலுக்குள்ள வந்ததுக்கு வறுமைதான்யா காரணம். பசி, பட்டினிதேன் என்னைய அன்னிக்கு இந்தத் தொழிலுல தள்ளிருச்சு. நான் பொறந்து வளந்தது ஆரப்பாளையம். என் வீட்டாளுக்குக் கீழக்குடி. வருசத்துக்கு ஒண்ணுன்னு மூணு ஆம்பளப் புள்ளைகளையும் ஒரு பொம்பளைப் புள்ளையையும் கொடுத்துட்டாரு. ஆனா, அதுகளுக்கு ஒரு வாய் சோறுபோடத் துப்பில்ல. குடிச்சுக் குடிச்சு எங்கயாவது படுத்துக் கெடப்பாரு. நான் மதுர மார்க்கெட்டுக்கு பஸ் புடிச்சுப் போயி புளியும் பூண்டும் மொத்தமா வாங்கி வந்து வீடு வீடா போயி விப்பேன். காலையில வியாபாரத்துக்குப் போனா ராவுதான் வீடு திரும்ப முடியும். நாலு புள்ளைகளும் பட்டினியும் பசியுமா கெடக்குங்க. பாக்க சகிக்காது பெத்தவளுக்கு.’’ அருகிலிருந்த அவர் கணவர் அமாவாசை, தரையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

‘`அசலூருல இருக்குற என் அண்ணன், ஒருமுறை இங்க வந்து என் கஷ்டத்தப் பாத்துட்டு, கஞ்சா வியாபாரத்தைச் சொல்லிக்கொடுத்துச்சய்யா. ஆந்திராவுல இருந்து உசுலம்பட்டிக்காரவுக மொத்தமா வாங்கி வருவாக. நான் அவுககிட்ட போயி கொஞ்சம் கொஞ்சமா வாங்கியாந்து பொட்டலம் போட்டு, கா ரூவாய்க்கு (25 பைசா) விப்பேன்யா.  ரோட்டோரம் பேருக்குன்னு இட்லிக்கடையப் போட்டு, யாருக்கும் தெரியாம கஞ்சாவ வித்தோம்” - சொன்னபோது, வள்ளி தலைகவிழ்ந்துகொண்டார்.

“நான் பண்ணுனது தப்புன்னாலும், அதுல ஒரு நேர்மையோட இருந்தேன்யா. மில்லுல வேலபாக்குற பெரிய ஆம்பளைக வந்து கேட்டா மட்டுந்தேன் பொட்டலம் கொடுப்பேன். நாள் பூராவும் மாடு மாதிரி ஒழைக்குற சனங்க அதுங்க. உடல் அலுப்புக்கு வாங்கிட்டுப் போகுங்க. மத்தபடி காலேசு படிக்குற சுள்ளாம் பசங்கெல்லாம் வந்து கேட்டா அடிச்சு வெரட்டிடுவேன்ப்பா. ஆனாலும், இந்தப் போலீஸ்காரவுக அத நம்ப மாட்டாக. கேசு மேல கேசு போட்டு உள்ள தள்ளிடுவாக. ஊருல ஏதாவது சின்னப் பிரச்னைன்னா உடனே, ‘அந்தக் கஞ்சா விக்குற பொம்பளையத் தூக்கிட்டு வாங்க’ன்னு சொல்லிடுவாக. இந்த வீட்டுல இருக்குற செங்கலுக்குக்கூடக் கணக்கிருக்கும்; நான் ஜெயிலுக்குப் போன கணக்க எண்ண முடியாதய்யா. 35 வருஷத்துல 20 வருஷம் ஜெயில்லயே கழிச்சிருக்கேன்.

புனர்ஜென்மம்!

ஜெயில்ல கிடக்கறப்போகூட வராத புத்தி, இந்த ஸ்பெசல் டீம் காரவுக வந்ததுக்கு அப்பறம்தான்யா வந்துச்சு. பள்ளிக்கூடம் படிக்குற எம் பேரன் பேத்திகளுக்கெல்லாம் நம்ம குடும்பத்து ஆளுங்க கஞ்சா வியாபாரம் பண்றாங்கங்குற விஷயமே தெரியாதுப்பா. ஆனா, இவுக இப்போ ஒரு நாலு மாசமா அடிக்கடி வீட்டுக்கு வந்து, ‘எல்லார் மேலயும் கேசு போட்டுடுவேன்’னு சொல்லி பயங்காட்டி நெருக்க, ஏதோ தப்பு நடக்குதுன்னு புள்ளைகளுக்கும் தெரிஞ்சுப்புடுச்சு. வீட்டுக்கு வர்றதுக்கே கூச்சப்பட ஆரம்பிச்சுடுச்சுக. அதுக்கப்பறம்தான்யா, நம்ம தொழிலு இந்தப் புள்ளைகள பாதிச்சுடக்கூடாதுன்னு தொழிலையே ஒட்டுமொத்தமா விட்டுட்டேன். 35 வருஷமா எத்தனையோ போலீஸ்காரவுகளுக்கு ஆட்டம் காட்டுன என்னால இந்த ஸ்பெஷல் டீம் காரவுககிட்ட தாக்குப்புடிக்க முடியலப்பா. அவுக மட்டும் வரலையின்னா, புள்ளைகள வெளியூருக்கு அனுப்பிட்டு மகன்களோட சேந்து கஞ்சா வித்துக்கிட்டேதேன் இருந்திருப்பேன்” என்கிறார் வெளிப்படையாக.

“எங்கப்பாகூடப் பொறந்த அத்தைதான், வள்ளி. நான் இந்த வீட்டோட மூத்த மருமக. பி.காம் ஃபர்ஸ்ட் இயர் காலேஜுல படிச்சவளை, வள்ளி அத்தை மகனுக்குக் கல்யாணம் கட்டிவெச்சுட்டாக’’ - அந்தப் பெண் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) அடுத்து பகிர்ந்தவை எல்லாம் வலி, விரக்தி.  ‘`இவுக வீட்டுல கஞ்சாத் தொழில் பண்றாகன்னு அசலுல யாருமே பொண்ணு கொடுக்கல. அதனால, நாலு புள்ளைகளுக்கும் சொந்தத்துக்குள்ளேயே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாக. இந்தத் தொழிலால லாபம் அடைஞ்சதவிட அவமானங்களைத்தான் அதிகமா சம்பாதிச்சிருக்கோம். கையில காசு இருந்தாலும் ஒரு நல்ல சீலத்துணி, காதுக்கு, கழுத்துக்கு நகைனு போட்டுக்க முடியாது. ‘செய்யுறது தப்பான தொழிலு... கையுலயும் காதுலயும் மினுக்கிக்கிட்டுத் திரியுறதப் பாரு’னு பேசுறதைக் கேட்கிற தைரியத்தை இழந்துட்டோம். ஒரு செய்முறைக்குக்கூட போயி நிக்க முடியாது. போனாலும் மதிப்பே இருக்காது. சம்பாதிக்கிறதை அனுபவிக்க முடியாத வேதனைய, சொல்லி மாளாது.

இனிமே அப்படி இருக்க மாட்டோம். கோடி ரூவா கொடுத்தாலும் எங்களுக்கு இனி அந்தத் தொழிலு தேவையில்ல. எங்க வீட்டுக்காரங்கதான் படிக்காம போலீஸ் ஸ்டேசன், ஜெயிலுன்னு வாழ்க்கையைக் கழிச்சிட்டாக. எங்க புள்ள குட்டிகளாவது படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போகணும். ஆனாலும், நாங்க திருந்தினதை ஊருல யாரும் நம்ப மாட்டேங்குறாக. பொட்டலம் கேட்டு வீட்டுக்கு வர்றவுககிட்ட, ‘இப்ப நாங்க விக்குறதில்ல’னு சொன்னா சண்டைக்கு வர்றாக, அசிங்க அசிங்கமா பேசுறாக; கல்லைக் கொண்டு எறியுறாக. அதனாலதேன் இப்போ வீட்டச் சுத்தி இரும்பு வேலி போட்டிருக்கோம்.

இதுக்கு முன்னால போலீஸுக்கு பயந்தோம்; இப்போ கஸ்டமருக்கு பயப்படுறோம். இந்த மாதிரி தொழில் பண்ணுறோமேனு அப்போ நிம்மதி இல்ல; திருந்தியும் இப்போ நிம்மதியில்ல. ஆனாலும், எஸ்.பி மணிவண்ணன் சாரும், எஸ்.ஐ ஸ்டீபன் சாரும், ‘நாங்க உங்களுக்குத் துணையா இருக்கோம், யாருக்கும் பயப்படாதீங்க’னு சொல்லியிருக்காக. அந்த நம்பிக்கையிலதேன் ஊரு முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டுனோம். தெரிஞ்சவங்க, வியாபாரிங்கனு எல்லாருக்கும் போன் போட்டு விஷயத்தைச் சொன்னோம். அடுத்தடுத்து வேற வேலைகளைப் பாக்க ஆரம்பிச்சிருக்கோம். இப்போதைக்கு எங்க வீட்டுத் தோட்டத்துல மல்லிகை விதைச்சிருக்கேன். இன்னும் 10, 15 நாள்ல பூத்துடும்’’ - நம்பிக்கையுடன் முடிக்கிறார் மருமகள்.

‘`ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இப்போதேன் நிம்மதியா தூங்குறோம். என் பேரன் பேத்திக எல்லாம் வளந்து, இனி மனுசப்பய மதிக்கிற ஒரு வாழ்க்கைய வாழுங்க” - முந்தானையால் கண்களை அழுந்தத் துடைத்துக்கொள்கிறார் வள்ளி.

புனர்ஜென்மம்!

 ``நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது!”

சென்ற வருடம் மதுரை மாவட்ட எஸ்.பி-யாகப் பொறுப்பேற்ற மணிவண்ணன், கஞ்சாக் குற்றங்களை ஒடுக்க பிரத்யேக கவனம் கொடுத்தார். ‘`மதுரையில் கஞ்சாப் புழக்கம் பற்றி முழுமையாக ஸ்டடி பண்ணுவதற்காகவே எஸ்.ஐ ஸ்டீபன் தலைமையில் ஒரு குழுவைத் தயார் செய்தோம். அவர்கள் பகல் இரவு பாராது வேலைசெய்து கஞ்சா விற்பவர்களின் தகவல்களைத் திரட்டினார்கள். காலம்காலமாக இந்தத் தொழிலைச் செய்துவருபவர்களை அவ்வளவு எளிதில் அதிலிருந்து மீட்டுவிட முடியாது. அதனால்தான், தொடர்ந்து வழக்குகளைப் பதிந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தோம். எங்கள் சிறப்புக் குழுவின் தொடர் முயற்சியால் வள்ளி குடும்பத்தைப்போலப் பல குடும்பங்கள் கஞ்சாத் தொழிலிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான மாற்றுத் தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பதோடு விழிப்பு உணர்வுக் கூட்டங்களையும் நடத்திவருகிறோம். நான்கு மாதங்களாக நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கஞ்சாத் தொழில் இல்லாத நகரமாக மதுரை விரைவில் மாறும்’’ என்றார் எஸ்.பி மணிவண்ணன்.