பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சகலகலா டாக்டர்ஸ்!

சகலகலா டாக்டர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
சகலகலா டாக்டர்ஸ்!

ஆர்.வைதேகி

காலையில் ஏதோ ஒரு கார்ப்பரேட் மருத்துவ மனையில் வேலை. மாலையில் தன் சொந்த கிளினிக்கில் கன்சல் டேஷன்...மருந்து கம்பெனிகளின் தயவில் வருடத்துக்கு ஓரிரு  முறை வெளிநாட்டுப் பயணம்... விசிட்டிங் கார்டை நிரப்பும் ஸ்பெஷலைசேஷன்ஸ்... போன தலைமுறை மருத்துவர்களுடன் முடிந்துவிட்டது இந்த ட்ரெண்டு. இந்தத் தலைமுறை மருத்துவர்கள் ஸ்மார்ட். ஸ்டெதஸ்கோப் மாட்டும் நேரம்போக மீதி நேரத்தில் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், விளையாடுகிறார்கள்; ரசனையுடன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட ஜென் இஸட் மருத்துவர்கள் சிலரைச் சந்தித்தேன்.

சகலகலா டாக்டர்ஸ்!

டாக்டர் ரோஹினி ராவ்

மெடிக்கல் க்ளவுன், செய்லர், சல்சா, ஜாஸ், டாப் என வெஸ்டர்ன் டான்ஸும் பரதநாட்டியமும் தெரிந்தவர், வயலின், பியானோ கலைஞர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என நீள்கிறது ரோஹினி ராவின் ரெஸ்யூம். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி இன்டர்னல் மெடிசின் படித்துக்கொண்டிருக்கும் ரோஹினி, சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவர்.

“டான்ஸும் பியானோ, வயலினும் பொழுதுபோக்காகவும் ஆர்வத்துக்காவும் கத்துக்கிட்டது. ஆனா, ரோஹினி ராவ்னு என்னை உலகம் முழுக்கத் தெரியவெச்சது செய்லிங்தான். 2004ல் ஏஷியன் செய்லிங் சாம்பியன்ஷிப்புல இந்தியாவுக்கு முதல் கோல்டு மெடல் வாங்கிக் கொடுத்தவள் நான். ஸ்போர்ட்ஸ் கோட்டாவுலதான் எனக்கு டாக்டர் சீட் கிடைச்சது. முதல் வருஷம் படிச்சிட்டிருந்தப்போ ஏழு சாம்பியன்ஷிப்ல கலந்துக்கிட்டேன். மத்தவங்க அஞ்சரை வருஷத்துல முடிக்கிற மருத்துவப் படிப்பை, என்னால எட்டரை வருஷத்துலதான் முடிக்க முடிஞ்சது. சென்னையிலேருந்து செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜுக்குப் போகவே ரெண்டு மணி நேரமாகும்.  ஒரு வருஷம் ஹாஸ்டலில் தங்கினேன். ஸ்போர்ட்ஸ்ல இருக்கிற எனக்கு வொர்க்அவுட் ரொம்ப முக்கியம். ஆனா, அங்கே ஜிம் இல்லை. வேற வழியில்லாம கிரிக்கெட் ஸ்டேடியத்தைச் சுற்றி ஓடுவேன். ஒவ்வொரு டோர்னமென்ட் முடிஞ்சதும் ரொம்ப வீக் ஆகிடுவேன். டாக்டர் படிப்பைத் தொடர முடியுமாங்கிறதே கேள்விக்குறியா இருந்துச்சு. ஒலிம்பிக்ல விளையாட மூணு வருஷம் பிரேக் எடுத்தேன். அப்புறம் அம்மா-அப்பா சப்போர்ட்ல ஒருவழியா படிப்பை முடிச்சேன். ஸ்போர்ட்ஸ்ல நான் கறுத்துப்போய் வந்தாலோ, கீழே விழுந்து காயங்களோடு வந்து நின்னாலோ, அம்மாவும் அப்பாவும் பதறிடாம, சுருக்கமான மருத்துவக் குறிப்புகளைக் கொடுத்து, படிப்புக்கு சப்போர்ட் பண்ணுன மாதிரியே சப்போர்ட் பண்ணாங்க’’ -  நேபாளத்திலிருந்து நம்முடன் இணைந்தவர், செய்லிங் போட்டிகளுக்கு மட்டும் தற்காலிக இடைவெளி விட்டிருக்கிறார். 

சகலகலா டாக்டர்ஸ்!

டாக்டர் திவ்யதா அருண்

நான்கு வயதில் நடனப் பயிற்சி, ஆறு வயதில் அரங்கேற்றம் என, நாடிநரம்புகளில் எல்லாம் டான்ஸ் ஊறியிருக்கிறது திவ்யதா அருணுக்கு. பிரபல பரதக்கலைஞர் கே.ஜே.சரஸாவின் மாணவியான இவர், பெங்களூரைச் சேர்ந்த டயப்படாலஜிஸ்ட்.

   ‘`சின்ன வயசுல சரியான படிப்ஸ். டாக்டர் ஆகுறதுதான் ஆகச்சிறந்த லட்சியம்னு நினைச்சுப் படிச்சேன். அப்படியே நடந்தது. மருத்துவப் படிப்பு, நடனப் பயிற்சி ரெண்டுமே 100 சதவிகிதம் ஈடுபாடு தேவைப்படும் துறைகள்தான்.

இதுவரைக்கும் ரெண்டையும் குழப்பிக்காம பேலன்ஸ் பண்ணிட்டிருக்கேன். டான்ஸ் எனக்கு பேஷன். டாக்டர் என் புரொஃபஷன். பேஷனுக்காக புரொஃபஷனைத் தியாகம் பண்ணக் கூடாதுங்கிறது என் கொள்கை.

டாக்டர்னு சொல்லிக்கும்போது எனக்குக் கிடைக்கிற அதே மரியாதை, க்ளாசிக்கல் டான்ஸர்னு சொல்லும்போதும் கிடைக்கும். ‘வாவ்... எப்படி ரெண்டையும் பேலன்ஸ் பண்றீங்க? கிரேட்’னு பாராட்டும் கிடைக்கும். ‘இதெல்லாம் தேவையா? ஏதாவது ஒண்ணை மட்டும் பார்க்கலாமே!’னு இலவச ஆலோசனைகளும் கிடைக்கும்.

டைமிங் சென்ஸ், நுணுக்கம், பர்ஃபெக்‌ஷன் எல்லாமே ரெண்டுலயும் முக்கியம். என் நடனத்தைப் பார்க்க வரும் பார்வையாளரைத் திருப்திப்படுத்துறதும், என்னை நம்பி வரும் பேஷன்ட்டுக்கு சரியான மருத்துவ சிகிச்சை செய்றதும்  என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணுதான்’’ என்பவர், சென்னையின் மார்கழி சீஸனில் மட்டும் வெள்ளை நிறக் கோட்டுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு பிஸியான டான்ஸர்.

“பரதநாட்டியத்தை வெறும் கலையா பார்க்க வேணாம். அது மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்; ஃபிட்னெஸ் பிராக்டிஸ். மனசையும் உடம்பையும் ஆரோக்கியமா வெச்சுக்கவாவது பரதம் ஆடலாம்’’ பிரிஸ்கிரிப்ஷனுடன் முடிக்கிறார் டாக்டர் திவ்யதா.

சகலகலா டாக்டர்ஸ்!

டாக்டர் ஷாலினி

 பல் மருத்துவர் ஷாலினிக்கு, பாடவும் தெரியும். அதுமட்டுமா... கிடாரிஸ்ட், கவிஞர், லெக்சரர் என செம பிஸி!

“16 வயசுல கிடார் வாங்கியபோது, உலகமே என்வசமான மாதிரி உணர்ந்தேன். அதுக்கு அப்புறம் வாழ்க்கையில எல்லாமே அழகா மட்டுமே தெரிஞ்சுது. மியூசிக் அளவுக்கு எனக்கு பயாலஜியும் பிடிச்சது. அதனால டாக்டருக்குப் படிச்சேன்’’ ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட் மாதிரி இருக்கும் ஷாலினி, மீனாட்சி அம்மாள் டென்ட்டல் காலேஜில் லெக்சரராம்!

‘‘கலர் கயோஸ்’ என்கிற ஆல் வுமன் மியூசிக்கல்  குழுவுல முதல்ல பாடிட்டிருந்தேன்.  அந்த குழுவுல பெண் உணர்வுகளைப் பற்றிய பாடல்களை அதிகம் பாடி,  ரசிகர்களைக் கவர்ந்தேன். ‘மவுன்ட்டன் சைல்டு’, ‘யூ ஆர் அலைவ்’னு என்னுடைய ரெண்டு ஒரிஜினல் கம்போசிஷனுக்கும் செம வரவேற்பு. வெற்றியை நோக்கிய இந்தப் போராட்டம், கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா சுகமாகவும் இருக்கும்’’ பற்கள் தெரியப் புன்னகைக்கிறார் இந்தப் பல் மருத்துவர்.

சகலகலா டாக்டர்ஸ்!

டாக்டர் ஆரத்தி ராஜ்

நிஜமாகவே  கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழல்கிறார் ஆரத்தி. ஸ்கேட்டிங் சாம்பியனாகவும் டாக்டராகவும் ஆரத்தியின் வாழ்க்கை செம ஸ்பீடு... செம த்ரில்! உலக அளவிலான ஸ்கேட்டிங்கில் இவருக்கு 10-வது இடம்!

‘` ஸ்விம்மிங், டென்னிஸ் எல்லாம் டிரை பண்ணிட்டு, கடைசியில ஸ்கேட்டிங்ல செட்டிலானேன். 8 வயசுலேருந்து இப்போ வரைக்கும் என்கூடவே டிராவல் பண்ற விஷயமா,  ஸ்கேட்டிங் இருக்கு. அந்தச் சின்னவயசுல அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஸ்கேட்டிங் பிராக்டீஸுக்குப் போவேன். அது முடிஞ்சு வந்ததும் ஸ்கூலுக்குக் கிளம்பணும்.  ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் மறுபடியும் ஸ்கேட்டிங் பிராக்டீஸ். முதல் வெற்றியை ருசிக்கிற வரைக்கும்தான் இதெல்லாம் கஷ்டமா இருந்தது. அதுக்கப்புறம் எல்லாமே ஈஸியாகிடுச்சு’’ பேச்சிலும் ஸ்பீடு காட்டும் ஆரத்தி, கடந்த வருடம்தான் எம்.பி.பி.எஸ் முடித்தார்.

‘`நான் விளையாட ஆரம்பிச்சப்போ 20 பசங்களும், 4 பொண்ணுங்களும்தான் இருந்தோம். ஸ்கேட்டிங்ல ரிஸ்க் அதிகம். கன்னாபின்னானு அடிபடும். அதெல்லாம் தேவையில்லைனு பாதியோடு ஸ்போர்ட்ஸ்ல இருந்து நிறுத்திடுவாங்க. ஆனா, இன்னிக்கு நிலைமை மாறியிருக்கு. இந்த வருஷம் நேஷனல் சாம்பியன்ஷிப்ல 35 ஆண்கள், 30 பெண்கள்! ஆனா, இது பத்தாது...  பொண்ணுங்க இன்னும் வரணும்’’ ஆரத்தியைப்போலவே அவரது பேச்சும் போல்டு அண்டு பியூட்டிஃபுல்.