வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (18/11/2018)

கடைசி தொடர்பு:15:15 (18/11/2018)

திருக்கை மீன் குழம்பு... இறால் வறுவல்...எலும்பு ரசம்... சுவையான நான்வெஜ் ரெசிப்பிகள்! #Recipe

விடுமுறையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சுவையான நான்வெஜ் ரெசிப்பிகளை வழங்குகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் நலீனா. நாவூர செய்யும் நான்வெஜ் ரெசிப்பிகளின் எளிமையான செய்முறை விளக்கங்கள் இதோ..!

திருக்கை மீன் குழம்பு

தேவையானவை:

திருக்கை மீன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 1

பூண்டு - 30

புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

ரெசிப்பி



அரைக்க:

மிளகு - 3 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 

4 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - சிறிதளவு

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைத் தோல் நீக்கி கழுவி வைக்கவும். புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும். மேலே அரைக்கக்கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை புளிக்கரைசலுடன் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இதில் வெந்தயம், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறம்மாற வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில் புளிக்கரைசல் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

2. சுறாமீன்

தேவையானவை:

சுறாமீன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 10

மஞ்சள்தூள் - சிறிதளவு

தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

ரெசிப்பி

செய்முறை:

சுறாமீன் துண்டுகளை, நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மீன் துண்டுகளைச் சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்தபின் மீன் துண்டுகளை தனியே எடுத்து மீன் முள்ளினை நீக்கி விட்டு அதன் தசைப் பகுதியை உதிர்த்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு (தட்டியது) பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், தேங்காய்த்துருவல் மற்றும் உப்பு சேர்த்து ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். இத்துடன் உதிர்த்து வைத்துள்ள மீனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை நன்கு கிளறிப் பரிமாறவும்.

3. இறால் வறுவல்

தேவையானவை:

இறால் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

ரெசிப்பி

செய்முறை:

இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சோம்புத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும் இதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வைத்து வறுத்தெடுத்துப் பரிமாறவும்.

4. எலும்பு ரசம்

தேவையானவை:

நெஞ்செலும்பு, கொழுப்பு, நல்லி (அனைத்தும் சேர்த்து) - கால் கிலோ\

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 2 

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

எலுமிச்சைப்பழம் - ஒன்று

அரைக்க:

பூண்டு - 5 பல்

காய்ந்த மிளகாய் - 5

சீரகம் - ஒரு டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

ரெசிப்பி



தாளிக்க:


எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

சுத்தம் செய்த எலும்பு, கொழுப்பு மற்றும் நல்லி இவற்றை குக்கரில் சேர்த்து இதனுடன் மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். இதில் மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு 4 விசில் விட்டு வேக விடவும். அரைக்க வேண்டியதை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். மட்டனையும் அது வெந்த தண்ணீரையும் தனியாகப் பிரித்து வைக்கவும். மட்டன் வெந்த தண்ணீரில் அரைத்தவற்றைச் சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும். இதில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்துவிட்டு இறக்கவும். விருப்பப்பட்டவர்கள் ரசத்தில் வேக வைத்த கொழுப்பு மற்றும் நல்லியைச் சேர்த்து சாப்பிடலாம்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்