வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (19/11/2018)

கடைசி தொடர்பு:15:55 (19/11/2018)

129 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றப்பட்ட கிலோ கிராம் எடை... ஏன் இந்த மாற்றம்?

129 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த மூல எடை மாதிரி இப்பொழுது தவிர்க்கப்படக் காரணம் என்ன ? அப்படியென்றால் இனிமேல் எதை அடிப்படையாக வைத்து கிலோ கிராம் எடை அளவிடப்படும் ?

129 ஆண்டுகளுக்குப் பின்னர் மாற்றப்பட்ட கிலோ கிராம் எடை... ஏன் இந்த மாற்றம்?

கிலோ கிராம் என்ற அளவின் எடையை வரையறுக்க இனிமேல் புதிய வழிமுறை பின்பற்றப்படும் என பிரான்ஸில் நடந்த மாநாடு ஒன்றில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிலோ கிராம் விஷயத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம்தான் இன்றைக்கு இயற்பியல் உலகத்தில் விவாதிக்கப்படும் ஹாட் டாபிக். கிலோ கிராமில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மக்களுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி என்ன மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே கிலோ கிராம் எடை சரியாகத்தானே இருந்து வந்தது; பின்னர் எதற்காக இப்பொழுது மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகள் பலருக்கு எழுந்திருக்கும்.

இப்பொழுது கடைக்குச் சென்று ஒரு கிலோ எடையில் ஒரு பொருளை வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். கடைக்காரர் என்ன செய்வார் ? நாம் கேட்கும் பொருளை எடை போடும் இயந்திரத்தில் எடை போட்டு எவ்வளவு கிலோ வேண்டுமோ அதைத் தருவார். இப்பொழுதுதான் பெரும்பாலும் மின்னணு இயந்திரங்களை எடை போடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு வரை கடைகளில் தராசுதான் இருக்கும். தராசின் ஒரு பக்கத்தில் எடைக் கற்களையும் மறுபக்கத்தில் பொருளையும் வைத்து எடை போடுவார்கள். 50 கிராம், 100 கிராம், 200 கிராம், 500 கிராம் எடைக் கற்கள் முதல் 2 கிலோ எடைக் கற்கள் வரை பெரும்பாலான கடைகளில் வைத்திருப்பார்கள். அந்த எடைக் கற்கள் குறிப்பிட்ட எடையைத்தான் கொண்டிருக்கும் என நம்பிக்கை வைத்துத்தான் பொருளை வாங்கியிருப்போம். ஆனால், என்றைக்காவது அந்த எடைக் கற்களை முதலில் யார் உருவாக்கினார்கள், எப்படி அனைத்து இடங்களிலும் எடைக் கற்களின் எடை மிகச் சரியான அளவில் இருக்கிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா, அதைத் தெரிந்து கொண்டால் போதும். தற்பொழுது கிலோ கிராம் என்பதை வரையறுப்பதில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் புரிந்து கொள்வதும் எளிதானதுதான்.

129 வருடங்களுக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம்

எடை

உலகில் மனிதன் நாகரிகமடைந்த பின்னர் அவனது அன்றாட வாழ்வில் அளவை என்பது அவசியமான ஒன்றாக இருந்தது. பண்டமாற்று முறை பயன்பாட்டில் இருந்தபோதே அளவை முறைகளை மக்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் தனித்தனியாக அளவை முறைகள் பயன்பாட்டில் இருந்தன. தற்பொழுது உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் இருப்பது மெட்ரிக் அளவை முறைதான். 1774 முதல் 1792 வரையிலான இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸை ஆட்சி புரிந்த மன்னரான பதினாறாம் லூயி என்பவர்தான் இதைத் தொடங்கி வைத்தார். 1790 -ம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானிகள் சிலரை அழைத்து புதிய அளவீட்டு முறைகளை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் 0 ° செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் ஒரு லிட்டர் நீரின் நிறையை அடிப்படையாக வைத்து கிரேவ் (grave) என்ற அளவையை உருவாக்கினார்கள். அப்படித்தான் இன்றைக்கு நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அனைத்து அளவை முறைகளின் வரலாறும் தொடங்கியது.

எடைக் கற்கள்

ஆனால், அதைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. அப்பொழுதுதான் ஒரு மூல எடை மாதிரியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. பின்னர் 1799-ம் ஆண்டில் 4° செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் ஒரு கியூபிக் டெசிமீட்டர் அளவுள்ள நீரின் நிறையானது கிலோ கிராம் என்று வரையறுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த நிறைக்கு ஈடான ஒரு எடை உருவாக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டாலும் அந்த முயற்சி அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்படி ஒன்றை உருவாக்கும் முயற்சி பல தடவை தோல்வியில்தான் முடிந்தது. பின்னர் 1879-ம் ஆண்டில் 90 சதவிகிதம் பிளாட்டினமும் 10 சதவிகிதம் இரிடியமும் கலந்து சரியான எடை கொண்ட மூல உருளையை லண்டனில் உள்ள மிகப் பிரபலமான Johnson, Matthey and Co என்ற நிறுவனம் உருவாக்கியது. அத்துடன் மேலும் இரண்டு உருளைகள் என மொத்தம் மூன்று உருளைகள் பிரான்ஸில் இருந்த உலோகவியல் வல்லுநரான செயின்ட்- கிளேர் டெவில் (Sainte-Claire Deville) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மூல உலோக உருளை கிராண்ட் கே  (Le Grand K) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இதை அடிப்படையாக வைத்துப் பல மாதிரிகள் உருவாக்கப்பட்டு உலகின் பல பகுதிகளில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Le Grand K - கிராண்ட் கே

இன்றைக்கு உலகில் பயன்படுத்தப்படும் கிலோ கிராம் என்ற அளவையின் எடை இதை அடிப்படையாக வைத்தே வரையறுக்கப்படுகிறது. இந்த மெட்ரிக் அளவை முறைகள்தான் இப்பொழுது பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. தற்பொழுது நாம் பார்க்கும் அனைத்து எடைக் கற்களுமே இதை அடிப்படையாக வைத்துத்தான் தயாரிக்கப்படுகின்றன. எடைக்கற்கள் மட்டுமன்றி மின்னணு எடை கருவிகளுக்கும் இந்தத் தர நிர்ணய விதிமுறைகள் பொதுவானவை. இந்த அளவை முறைகளைக் கண்காணிப்பது சர்வதேச எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (International Bureau of Weights and Measures). 1889-ம் ஆண்டில் கிலோ கிராம் எடைக்கான அடிப்படை அளவையாக இந்த மூல உருளையைப் பயன்படுத்த இந்த ஆணையம் முடிவு செய்தது. இந்த இடத்தில்தான் மூல உருளையானது இரண்டு அடுக்குக் கண்ணாடி குடுவைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டிலிருந்து இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனியாக இந்த அளவை முறைகளைக் கண்காணிப்பதற்கு ஆணையங்கள் உள்ளன. அவை IBWM-ஆல் முறைப்படுத்தப்படும் அளவை முறைகளைப் பின்பற்றுகின்றன.

 கிலோ கிராம்

பாரிஸ் நகரத்துக்கு வெளியே செவராஸ் என்ற இடத்தில் இந்த ஆணையம் அமைந்துள்ளது. இங்கே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாநாடு நடைபெறுவதுண்டு. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருடத்துக்கான மாநாடு கடந்த 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதி நாளான 16-ம் தேதியன்று இந்த அளவை முறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூல உலோக உருளை லீ கிராண்ட் பாதுகாப்பாகவே இருந்தாலும் புறச்சூழல்களால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒரு வேளை உலோகம் அணுக்களை இழப்பதால் அவற்றின் எடை கூடவோ அல்லது காற்றில் உள்ள மாசு படிவதால் அவற்றின் எடை அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது. ஆனால் இது பெரிய அளவிலான மாற்றம் இல்லையென்றாலும் எடை துல்லியமானதாக இருக்க வேண்டும். எனவே எடையை அளவிடும் வரையறையில் மாற்றம் கொண்டு வரலாம் என்று 2011-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் ஆலோசித்தார்கள். தற்பொழுது நடந்து முடிந்த மாநாட்டில் அதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கிப்பில் சமநிலை கருவி

ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் 60 நாடுகள் இந்த முடிவுக்கு ஒரு மனதாக ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதன்படி இனிமேல் கிப்பில் சமநிலை கருவி மூலமாக கிலோ கிராம் எடையானது அளவிடப்படும். இந்த கிப்பில் கருவியும் தராசு போலவே செயல்படும். இதில் இருக்கும் இரண்டு பகுதிகளில் ஒரு பக்கம் எடையும் மறுபக்கம் மின்காந்தமும் இருக்கும். எடையைச் சரி செய்வதற்காக மின்காந்தத்தால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவைக் கொண்டு எடையானது கணக்கிடப்படும். எடை தவிர்த்து ஆம்பியர், மோல் மற்றும் கெல்வின் ஆகிய மூன்று வரையறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அளவைகள் முறை பயன்பாட்டுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் மே மாதம் 20-ம் தேதி முதல் இந்த மாற்றங்கள் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களால் நமது அன்றாட வாழ்க்கையில் எந்த பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை. ஒரு கிலோ கிராம் என்ற எடையில் இப்பொழுதும் எந்த மாற்றமுமில்லை. எடைக்கற்களும், மின்னணு இயந்திரங்களும் கூட எந்த மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கப்போகின்றன.


டிரெண்டிங் @ விகடன்