'செவ்வாயில் அந்த 7 நிமிடங்கள்!' நாசாவின் திக்திக் தருணங்கள் #InsightLander | Nasa awaiting for InSight Lander to touch the Mars surface

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (20/11/2018)

கடைசி தொடர்பு:10:15 (27/11/2018)

'செவ்வாயில் அந்த 7 நிமிடங்கள்!' நாசாவின் திக்திக் தருணங்கள் #InsightLander

இன்சைட் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிரங்க வைக்க நாசா எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?

'செவ்வாயில் அந்த 7 நிமிடங்கள்!'  நாசாவின் திக்திக் தருணங்கள் #InsightLander

வரும் 26-ம் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. அன்றைய தினம் செவ்வாயில் நடத்தத் திட்டமிட்டுள்ள சம்பவம் மட்டும் சரியாக நடந்தால் செவ்வாயில் நடைபெறும் ஆராய்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். நமது சூரியக் குடும்பத்தில் இப்பொழுது வரை நமது பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுகிறது. இதுவரை வேறு எந்தக் கிரகத்திலும் உயிர்கள் வாழ்வது கண்டறியப்படவில்லை. வேற்றுக் கிரகங்களில் உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் நூற்றாண்டுகளைத் தாண்டியும் தொடர்கிறது. வேறு உயிர்களை கண்டுபிடிப்பதற்காகத் தொடங்கப்பட்ட தேடல் சில காலத்துக்குப் பிறகு மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியான இடத்துக்கான தேடலாக மாற்றம் பெற்றது.

இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மட்டுமே பூமியில் மனிதர்கள் வாழ முடியும் என்பதே விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது. அப்படி வேறு கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் எங்கே செல்ல முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அதிகமாகக் கவனத்துக்குள்ளாகும் ஒரு கிரகம்தான் செவ்வாய். மற்ற கிரகங்களை விடவும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். அடுத்த 25 வருடங்களுக்குள்ளாக அங்கே மனிதர்கள் கால் பதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாசா மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் செவ்வாயைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன. செவ்வாயில் நடைபெற்று வரும் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவிருக்கிறது இன்சைட் விண்கலம்.

16 அடி ஆழம் துளையிட $ 850 மில்லியன் செலவு செய்யும் நாசா

கடந்த மே மாதம் 5-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது இந்த இன்சைட் விண்கலம். அதன் பிறகு செவ்வாயை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கிய இன்சைட் தற்பொழுது அதன் அருகில் நெருங்கியிருக்கிறது. விண்ணில் ஏவப்பட்டுக் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு வரும் 26-ம் தேதியன்று இன்சைட் விண்கலத்தைச் செவ்வாயில் தரையிறங்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறது நாசா. செவ்வாயின் ஆராய்ச்சி வரலாற்றில் இன்சைட் விண்கலம் நடத்தப்போகும் ஆராய்ச்சியானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

நாசா

இதற்கு முன்பே பல விண்கலங்கள் செவ்வாயின் தரையைத் தொட்டிருக்கின்றன. இறுதியாக 2012-ம் ஆண்டில் அங்கே தரையிறங்கிய கியூரியாசிட்டி ரோவருக்குப் பிறகு அங்கே செல்லும் முதல் விண்கலம் இன்சைட்தான். இது தவிர இன்னும் முக்கியமான சிறப்பு ஒன்று இந்த விண்கலத்துக்கு உண்டு. இதற்கு முன்பு செவ்வாயில் ஆராய்ச்சி செய்த விண்கலங்கள் அனைத்துமே அதன் மேற்பரப்பில் மட்டுமே ஆய்வு செய்திருக்கின்றன. விண்கலங்கள் பெரும்பாலும் செவ்வாயை அதன் சுற்றுப் பாதையில் சுற்றிவந்து ஆய்வு செய்யும், நமது மங்கள்யானைப் போல. அல்லது தரையிறங்கினாலும் அதன் மேற்பரப்பை மட்டுமே ஆய்வு செய்யும். கியூரியாசிட்டி ரோவர் ஒரு இன்ச் அளவுக்கு நிலப்பரப்பைத் துளையிட்டு ஆய்வு செய்தது. மேலும் தெளிவான பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. ஆனால் இந்த இன்சைட் விண்கலம் முற்றிலும் வேறுபட்டது. இது வரை இல்லாத வகையில் செவ்வாயின் மேற்பரப்பில் 16 அடி ஆழம் வரைக்கும் துளையிட உள்ளது இன்சைட் விண்கலம். இதற்காக நாசா செலவு செய்திருக்கும் தொகை 850 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இன்சைட் விண்கலம்

இந்த இன்சைட் ஆய்வுக் கலத்தின் முக்கிய வேலை செவ்வாயின் நிலப்பரப்பை ஆழமாகத் துளையிட்டு ஆராய்வதுதான். அதற்காக இன்சைட் விண்கலத்தில் பிரத்யேகமான கருவி ஒன்றை வடிவமைத்துப் பொருத்தியிருக்கிறது நாசா. இந்தக் கருவி 5 மீட்டர் ஆழம் வரை நிலப்பரப்பைத் துளையிடும் அதற்காக நாற்பது நாள்களை எடுத்துக்கொள்ளும் இன்சைட். அதன் பிறகு அந்தக் கருவி நிலத்தில் உள்ள அடுக்குகளை ஆராயும். இந்த ஆய்வின் மூலமாக நமது பூமி உட்பட பல்வேறு கிரகங்களின் தோற்றம் பற்றிய பல்வேறு உண்மைகள் தெரிய வரும் என்கிறது நாசா. மேலும் செவ்வாயில் உட் பகுதியில் எரிமலைக் குழம்புகள் இருக்கிறதா அல்லது அதன் உட் பகுதி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல்களும் இன்சைட் நடத்தப் போகும் ஆய்வின் மூலமாகத் தெரிய வரும். செவ்வாய் கிரகத்தின் கணக்குப்படி ஒரு வருடங்கள் இது செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியின் கணைக்குப்படி இரண்டு வருடங்களுக்குச் சமமானதாகும். அதன் பிறகு புதிதாக எந்த ஆராய்ச்சியும் இன்சைட் நடத்தாது. அதற்காக இது மொத்தமாகச் செயலிழந்து விடும் என்றில்லை, செயல்பாட்டு காலத்துக்குப் பிறகும் கூடத் தேவைப்படும் சமயங்களில் அதிலிருந்து தகவலை பெறும்படி அதை வடிவமைத்திருக்கிறது நாசா.

இன்சைட் விண்கலம்

இவ்வளவு செலவு செய்திருக்கும் விண்கலத்தைச் செவ்வாயில் தரையிறங்க வைக்க வரும் 26-ம் தேதியன்று நாள் குறித்திருக்கிறது நாசா. செவ்வாயின் வளிமண்டலத்தினூடே ஒரு பொருள் பயணப்படும் போது அதீத வெப்பம் உருவாகும். அதையெல்லாம் கடந்து விண்கலம் வெற்றிகரமாகத் தரையைத் தொட்டால் அது நிச்சயம் மிகப் பெரிய சாதனைதான். செவ்வாயின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழைவது முதல் தரையைத் தொடுவது வரையிலான காலம் சராசரியாக மொத்தம் 7 நிமிடங்கள். அதுதான் இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முதல் படியாக இருக்கப்போகிறது. விண்கலத்தை வெப்பம் தாக்காதவாறு அதற்கான பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விண்கலம் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு மணிக்கு 12,300 மைல் என்ற வேகத்தில் தரையை நோக்கிப் பாயும் அப்பொழுது கவசத்தின் வெளிப்புறம் வெப்பநிலை ஆயிரம் செல்சியஸை நெருங்கும். சில நிமிடங்களில் அதன் வேகம் மணிக்கு 1000 மைல் என்ற அளவில் குறையும். தரைப் பகுதியிலிருந்து 10 மைல் உயரத்தில் இருக்கும் போது சூப்பர்சோனிக் பாராசூட் ஒன்று விரிவடையும். அதன் பிறகு வெப்பத் தடுப்புக் கவசம் பிரிந்து செல்லும். அதனுள்ளே இருக்கும் இன்சைட் விண்கலம் பூஸ்டர்களின் உதவியால் செவ்வாயின் தரைப்பகுதியில் இறங்கும். இந்த மொத்த நிகழ்வும் நடைபெற்று முடிய 7 நிமிடங்கள் தேவைப்படும். இந்த நிமிடங்களுக்குள்ளாகவே ஆயிரக்கணக்கான செயல்பாடுகள் நடைபெறும். அவையனைத்தும் மிகச் சரியாக நடைபெற்றால் மட்டுமே இது திட்டமிட்டபடி நடக்கும். ஒரு வேளை இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் மொத்த திட்டமும் தோல்வியில்தான் முடியும். எனவேதான் அந்த 7 நிமிடங்களை எதிர் நோக்குவதற்காகப் பதற்றத்தோடு காத்திருக்கிறது நாசா. கடந்த முறை அங்கே தரையிறங்கிய கியூரியாசிட்டி ரோவர் வளிமண்டலத்தைக் கடந்து சரியான இடத்தில் தரையிறங்கியது. எனவே இந்த முறையும் எல்லாமே நல்ல முறையில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது நாசா.


டிரெண்டிங் @ விகடன்