"சூழலியல் சினிமாக்களை சுவாரஸ்யமாக்க வேண்டும்!" - சென்சார் போர்டு தலைவர் | "Environmental cinemas should be interesting to watch" suggests Prasoon Joshi

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (20/11/2018)

கடைசி தொடர்பு:13:50 (20/11/2018)

"சூழலியல் சினிமாக்களை சுவாரஸ்யமாக்க வேண்டும்!" - சென்சார் போர்டு தலைவர்

வளர்ச்சித் திட்டங்கள் என்று சொல்லி கொண்டுவரப்படும் பல திட்டங்கள், ஏழை மக்களின் வாழ்வியல் வளர்ச்சியைத் தீர்த்துக்கட்டும் விதத்தில் அமைகின்றன. இன்று, இந்த நவீன இயந்திரப் பொருளாதார யுகத்தில், சுற்றுச்சூழலைக் காப்பாற்ற சூழலியல் தரத்தை மேம்படுத்த வேண்டுமென்பது பெரும்பான்மை மக்களின் குரலாக எழுந்துள்ளது. பூமிக்கு மனித இனம் விளைவித்த சேதங்களுக்குப் பிறகு, தற்போது அதன் விளைவுகளை நாம் வெளிப்படையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அழிந்துகொண்டிருக்கும் சுற்றுச்சூழலைக் காப்பாற்றி, மீட்டு வரவேண்டிய தேவை அனைத்து மக்களின் கடமையாகவே மாறிவிட்டது. அதை யாராலும் தவிர்க்கவே முடியாது.

இளைஞர்களின் சூழலியல் அமைப்பு

அந்தக் கடமையை மக்களுக்கு உணர்த்துவதிலும் அவர்களுக்குத் தேவையான விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதிலும் சினிமாவுக்குப் பெரும் பங்குண்டு. சமூகத்தில், தவிர்க்கமுடியாத தாக்கத்தை அது ஏற்படுத்திச்செல்லும் வல்லமை அதற்குண்டு. அத்தகைய திரைப்படக் கலையில் சூழலியல் மற்றும் அதன் விழிப்புஉணர்வு சார்ந்த திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை. வருகின்ற படைப்புகளும்கூட மக்களை முழுமையாகச் சென்றடைவதில்லை. டெல்லியைச் சேர்ந்த காலநிலை மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த இளைஞர் அமைப்பு நேற்று கிளைமேட் ஜம்போர் (Climate Jamboree) என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். அதில், மத்திய தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி கலந்துகொண்டார். அதில் பேசியவரிடம், சூழலியல் சார்ந்த படைப்புகள்குறித்து கேட்கப்பட்டது.

"திரைப்படங்கள் கருத்துகளை மட்டுமே வாரியிறைக்காமல், சுவாரஸ்யமானதாகப் படைக்கப்பட வேண்டும். 'தாரே சமீன் பியார்' என்ற திரைப்படம், டிஸ்லெக்சியா குறித்துப் பேசும். அதற்குமுன் அந்த மாதிரியான குறைபாடுகுறித்து யாரும் எடுக்கவில்லை. அந்தப் படம், மக்கள் மத்தியில் அதுகுறித்த புரிதலை ஏற்படுத்தியது. அது விழிப்புஉணர்வு சார்ந்த திரைப்படமாக இருந்தாலும், அனைவராலும் வரவேற்கப்படும் அளவுக்குச் சுவாரஸ்யமான கதைக்களம் கொண்டது. அதைப் போலவே, சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படங்களும் மக்கள் விரும்பிப் பார்க்கும் வகையில் சுவாரஸ்யமானதாக அமைய வேண்டும். அப்படி அமைந்தால், அந்தப் படைப்புகள் சமூகத்தில் பல அதிசயங்களை நிகழ்த்தலாம்" என்று கூறினார்.


[X] Close

[X] Close