வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (22/11/2018)

கடைசி தொடர்பு:14:25 (22/11/2018)

இந்த 13 கேம்களும் மால்வேர்கள்... உடனே அன்இன்ஸ்டால் பண்ணுங்க! #Alert

இந்த கேம்கள் எல்லாம் உங்கள் மொபைலில் இருக்கிறதா? உஷார்

இந்த 13 கேம்களும் மால்வேர்கள்... உடனே அன்இன்ஸ்டால் பண்ணுங்க! #Alert

வ்வளவுதான் தொழில்நுட்பங்கள் மேம்பட்டாலும் டிஜிட்டல் உலகில் மால்வேர்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை முற்றிலும் அப்புறப்படுத்த முடிவதில்லை. மால்வேர்கள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடனே உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் தடுக்க ஒரு வழியை அடைத்தாலும் மால்வேர்களை உருவாக்குபவர்கள் வேறொரு வழியைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். தற்பொழுது நாம் அதிகம் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த மால்வேர்களின் பாதிப்பு என்பது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுவதுண்டு. ஆண்ட்ராய்டைப் பொறுத்தவரையில் மால்வேர்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்படும் ஆப்கள் மூலமாகவே உள்ளே நுழைகின்றன.

தற்பொழுது கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்த மால்வேர் கேம்களைக் கண்டறிந்திருக்கிறார் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரான லூகஸ் ஸ்டெபன்கோ (Lukas Stefanko) என்பவர். இவர் பிரபல சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ESET-யில் பணியாற்றி வருபவர். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்னால் கூகுள் ப்ளே ஸ்டோரில் அவர் கண்டுபிடித்த மால்வேர் கேம்கள் பற்றிய தகவல்களை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

13 மால்வேர் கேம்கள்

கூகுள் ப்ளே ஸ்டோர்

லூகஸ் ஸ்டெபன்கோ ட்விட்டரில் பதிவு செய்திருந்த தகவல்களின் படி மால்வேர் கேம்களின் எண்ணிக்கை மொத்தம் 13. அவை அனைத்துமே ரேஸிங் வகை கேம்களாக இருக்கின்றன. இவை அனைத்துமே Luiz O Pinto என்ற ஒரே டெவலப்பரின் பெயரில் உருவாக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தற்பொழுது பிரபலமாக இருக்கும் பப்ஜி போன்ற கேம்கள், திடீரென பிரபலமாகும், பின்னர் சில காலம் கழித்து வேறொன்று பிரபலமாகும். ஆனால், இதைப் போன்ற ரேஸிங் கேம்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருப்பவை. புதிதாக ஆண்ட்ராய்டைப் பயன்படுத்த தொடங்குபவர்கள் கூட இந்த வகை கேம்களை அறிந்திருப்பார்கள். எனவே இந்த மால்வேர் கேம்களை உருவாக்கியவர் பல்வேறு தரப்பினரையும் குறிவைத்தே ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்திருக்கக்கூடும். இந்த கேம்களை இன்ஸ்டால் செய்தால் வழக்கம் போலவே டவுன்லோடு ஆகும். ஆனால் அதை ஓபன் செய்ய ஐகானை கிளிக் செய்தால் ஆப் கிராஷ் ஆகும். அடுத்ததாக மால்வேர் ஆப் டிஸ்ப்ளேவிலிருந்து ஐகானை மறைத்து விடும். எனவே மொபைலைத் தொடர்ந்து பயன்படுத்தினாலும் ஆப் ஐகானைப் பார்க்க முடியாது. பார்வையிலிருந்து மறைந்தாலும் கூட ஆப் பின்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். அதன் பிறகு வேறொரு புதிய டொமைன் மூலமாக அதற்குத் தேவையான apk வகை ஃபைல்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளும். அதன் மூலமாக போனில் உள்ள தகவல்களைத் திருட முயற்சி செய்யும்.

5 லட்சத்தைத் தாண்டிய டவுன்லோடு எண்ணிக்கை

கேம்

இந்த 13 மால்வேர் கேம்களையும் மொத்தமாக 5.6 லட்சம் பேருக்கு மேல் டவுன்லோடு செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ப்ளே ஸ்டோரில் இருந்துதான் அவற்றை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். இந்த ஆப் ஒரு ஸ்மார்ட்போனிலிருந்து எதைத் திருடுகிறது என்பதைத் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை. ஆனால் மொபைலின் இணைய நெட்வொர்க்கை முழுமையாக அணுகும் திறனைப் பெற்று விடுவதால் இதை உருவாக்கியவர் போனில் உள்ள ரகசியத் தகவல்களைக் கூட திருட முடியும். இந்த கேம்களை உருவாக்கிய டெவலப்பர் இஸ்தான்புல் நகரத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து 13 மால்வேர் கேம்களும் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.

மால்வேர் ஆப்ஸ்

``பயனாளர்களுக்குப் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவது மட்டுமே எங்களுடைய முதன்மையான குறிக்கோள். இந்தத் தகவலை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்து ப்ளே ஸ்டோரைப் பாதுகாப்பானதாக மாற்ற உதவி செய்தவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறோம். அந்த ஆப்கள் எங்கள் விதிமுறைகளை மீறியதால் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளன " என இது தொடர்பாக கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.ஒரு வேளை பட்டியலில் உள்ள கேம்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.


டிரெண்டிங் @ விகடன்