`அம்மாவுக்கு அதிர்ச்சிதான்!' - திருமணத்தில் மணமகள் நடத்திய சுவாரஸ்யம் | Husband Touches Wife's Feet During Wedding As A Mark Of Mutual Respect

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (22/11/2018)

கடைசி தொடர்பு:18:29 (22/11/2018)

`அம்மாவுக்கு அதிர்ச்சிதான்!' - திருமணத்தில் மணமகள் நடத்திய சுவாரஸ்யம்

இந்திய பாரம்பர்ய முறைப்படி, இந்து முறைப்படி திருமணத்தின்போது மணமகனின் கால்களில் மணப்பெண்கள் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். காலங்காலமாக இது மரியாதைக்கான குறியீடாகப் பார்க்கப்படுகிறது. தன் துணை மீதான காதல் மற்றும் மரியாதையின் வெளிப்பாடாகவே இவ்வாறு பெண்கள் காலில் விழவைக்கப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அப்படி காதல் மீதான வெளிப்பாடாகவே இருந்தாலும் அதை ஏன் நாங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பது பெண்களின் நீண்ட கால வாதம். இந்த வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தப் பெண் ஒருவர். 

தீபா கோஸ்லா

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் தீபா கோஸ்லா. தனது 17 வயதில் சட்டம் படிப்பதற்காக நெதர்லாந்து சென்றவர், வழக்கறிஞராக ஆன பின்பு தற்போது அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவருக்கும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓலெக் புல்லர் என்பவருக்கும் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் ஆண்களின் கால்களில் பெண்கள் விழுந்து மரியாதை செலுத்தும் விதியை மாற்றி எழுதியிருக்கிறார் தீபா. காதலர்களான இவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் அதை வீட்டில் தெரிவித்திருத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே, திருமணத்துக்குச் சம்மதித்த பெற்றோர்கள், இந்து முறைப்படி திருமணத்தை ராஜஸ்தானில் நடத்தத் தீர்மானித்தனர்.

அப்போது இந்து முறைப்படி நடக்கும் சடங்குகளை மணப்பெண்ணிடம் தெரிவித்த அவரின் தாயார், பெண்கள் ஆண்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார். அப்போது நடந்த சம்பவத்தை விவரிக்கும் தீபா, ``ஏன் பெண்கள் மட்டும் ஆண்களின் காலில் விழ வேண்டும். பரஸ்பர மரியாதை என்றால் இருவரும் காலில் விழலாமே' என்று நான் கேட்டவுடன் அம்மாவுக்கு அதிர்ச்சி. அம்மாவால் பதிலளிக்க முடியவில்லை. அந்த கணம் நாங்கள் முடிவெடுத்தோம் இருவரும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை  செலுத்திக்கொள்ளலாம் என்று. உறவினர்களாலும் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது.

 

 

 

அம்மாவின் இந்திய கலாசாரம் இதை அனுமதிக்காது எனத் தெரியும். இருந்தும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்" என்று விவரித்த தீபா முன்பு எடுத்த தீர்மானத்தை செயல்படுத்தியும் காட்டினார் சிறிய சுவாரஸ்யத்துடன். திருமணம் நடந்து முடிந்த பிறகு, யார் முதலில் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது என்பதுதான் சுவாரஸ்யம். உறவினர்களுக்குள் இது விவாதமாக மாறக் கடைசியில் மணமகன் ஓலெக் புல்லரே முதலில் காலில் விழுந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கும் தீபாவின் பதிவுக்கும் வலைதளங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி மிகப் பிரமாண்டமான முறையில் நடந்த திருமணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதகளப்படுத்தியுள்ளனர் மணமக்கள். இதற்கு லைக்ஸ் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

news sources: indiatimes

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close