Published:Updated:

பள்ளிக் கழிவறையைச் சுத்தம்செய்யும் தலைமையாசிரியர்! - நெகிழும் ஊர் மக்கள்

பள்ளிக் கழிவறையைச் சுத்தம்செய்யும் தலைமையாசிரியர்! - நெகிழும் ஊர் மக்கள்
பள்ளிக் கழிவறையைச் சுத்தம்செய்யும் தலைமையாசிரியர்! - நெகிழும் ஊர் மக்கள்

திருவள்ளூர் மா.பொ.சி நகரில், ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையைச் சுத்தம்செய்ய மாணவிகளை ஈடுபட வைத்தார், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.  அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, தவறுசெய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோன்று மாணவ மாணவியர்களை கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சொல்லும் அவலம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

credit: indiatimes

இந்தச் சம்பவங்களுக்கு நேர்மாறாக, தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் கழிப்பறையைச் சுத்தம்செய்துவருகிறார். கர்நாடக மாநிலம் சமாராஜ நகர் மாவட்டத்தில் உள்ள ஹோங்கள்ளி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியாகப் பணிபுரிபவர், மஹதேஷ்வர சுவாமி. இவர், பள்ளியில் உள்ள மாணவர்களின் கழிவறையைத் தினமும் சுத்தம்செய்துவருகிறார். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டிவரும் இவர், மாணவர்களுக்கு உடல்ரீதியாக எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக இச்சேவையை செய்துவருவதாகக் கூறியுள்ளார்.

 ``நாம் பயன்படுத்தும் இடங்களைச் சுத்தம் செய்வது நமது கடமையாகும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எப்போதும் சுத்தமான கழிப்பறைகள் அவசியம். எனவேதான், நான் எங்கு சென்றாலும் இதை ஒரு பயிற்சியாகத் தொடர்கிறேன்" என்று கூறும் மஹதேஷ்வர சுவாமி, 1994-ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த முதல்நாள்  தொடங்கி தற்போது வரை தினமும் பள்ளிக்குச் சென்றவுடன் கழிவறையைச் சுத்தம் செய்வதை முதல் வேலையாகக் கொண்டுள்ளார். 121 மாணவர்கள் படிக்கும் அந்தப் பள்ளியில், தனது சொந்தச் செலவில் நூலகமும் தோட்டமும் அமைத்துக்கொடுத்துள்ளார்.  

``தினமும் பள்ளிக் கழிவறையைச் சுத்தம்செய்து, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட சுகாதாரந்தில் கவனம் செலுத்தும் மஹதேஷ்வர சுவாமி, குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் கெட்டிக்காரர். அதனால், எங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியிலேயே படிக்க வைக்கிறோம்" என நெகிழ்கின்றனர்  குழந்தைகளின் பெற்றோர்.