Published:Updated:

மரித்துப் போகாத மனிதநேயம்.. ஷூ பாலிஷ் செய்து நிதி திரட்டும் இளைஞர்!

மரித்துப் போகாத மனிதநேயம்.. ஷூ பாலிஷ் செய்து நிதி திரட்டும் இளைஞர்!
மரித்துப் போகாத மனிதநேயம்.. ஷூ பாலிஷ் செய்து நிதி திரட்டும் இளைஞர்!

`துன்பத்தில் இருப்பவர்களுக்கு உரிய காலத்தில் உதவிசெய்ய வேண்டும்' என்கிற அக்கறையுடன் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஷூ பாலிஷ் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை `கஜா' புயல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு அனுப்ப உள்ளார். அவரின் மனிதநேயம் கொண்ட இந்தச் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

நாட்டின் எந்தமூலையில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும் அங்குள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது, பாளையங்கோட்டையில் உள்ள அன்னை தெரசா நண்பர்கள் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்தவர் பாப்புராஜ். புகைப்படக் கலைஞரான இவர், வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு பேரிடர் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிதி திரட்டி வருகிறார்.

ஒடிஷா மாநிலத்தில் கடந்த 1999-ம் வருடம் புயல் தாக்கி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டபோது, நெல்லைப் பகுதியில் டீ விற்பனைசெய்து, அதில் கிடைத்த பணத்தை அரசிடம் அளித்தார். குஜராத் மாநிலத்தை 2001-ல் பெரும் பூகம்பம் தாக்கியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். அதுகுறித்த செய்திகளைப் படித்ததும் ஏற்பட்ட சோகம் காரணமாக, பூகம்பத்தால் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு உதவும் வகையில், நெல்லைச் சந்திப்பு, பாளையங்கோட்டைப் பேருந்து நிலையங்களில் ஷூ பாலிஷ் செய்து, அதிலிருந்து கிடைத்த பணத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக அந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தார். 

இதேபோல் கடந்த 2002-ல் குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக, நெல்லை ஜங்ஷனிலிருந்து டவுன்வரை இருக்கும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொலைபேசிகளை துடைக்கும் பணியைச் செய்தார். அதன் மூலமாகக் கிடைத்த பணத்தை நிவாரண உதவிக்கு அனுப்பி வைத்தார். 

சுனாமிப் பேரலை 2004-ம் ஆண்டு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சமயத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பொதுஇடங்களில் ஷூ பாலிஷ் செய்தார். அதன் மூலமாகக் கிடைத்த 8000 ரூபாய் பணத்தை அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியரான சுனில் பாலிவால் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பினார். 2008-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் காரணமாக உணவு, மருந்துப் பொருள்கள் கிடைக்காமல் அப்பாவி மக்கள் தவிப்பதை அறிந்ததும், அவர்களுக்கு உதவுவதற்காக கார் கண்ணாடிகளைக் கழுவி நிதி திரட்டி அனுப்பி வைத்தார்.
 

பிறர் துன்பத்தில் இருக்கும் போது உதவும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் பாப்புராஜ் தற்போது கஜா புயல் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக பொது இடங்களில் ஷூ பாலிஷ் போட்டு நிதி திரட்டி வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``நான் சின்ன வயதாக இருக்கும்போதே எங்கப்பா இறந்துட்டார். நோய்வாய்ப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எங்கப்பா இறந்தபோது நானும், எங்க அண்ணனும் சின்ன பையன்கள். 

அவரோட உடலை எங்க சொந்த ஊரான வீரவநல்லூருக்குக் கொண்டுபோகக்கூட எங்களிடம் பணம் இல்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாம கலங்கிப்போன சமயத்தில், எங்க அண்ணனோட ஆசிரியர்கள் பணம் வசூல் செஞ்சு, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செஞ்சாங்க. அந்த ஞாபகம் எப்போதும் என் மனதில் இருக்கு. துன்பத்தை சின்ன வயசுலேயே அனுபவிச்சதால் அதன் வலியும் வேதனையும் எனக்கு நல்லாவே தெரியும். 

அதனால்தான், இயற்கைப் பேரிடர் போன்று எந்தவொரு சூழ்நிலை ஏற்பட்டு மக்கள் எப்போதெல்லாம், எந்த மூலையில் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். `ஷூ பாலிஷ் போடுவது', `கார் கண்ணாடிகளை கழுவுவது' எனச் செய்வதற்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கு. என்னோட செயலைப் பார்க்கும் சிலர், அவர்களாகவே முன்வந்து தாராளமாகப் பணம் கொடுத்துட்டுப் போறாங்க. தற்போது கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் படும் துயரை பத்திரிகைகளில் பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்ததன் அடிப்படையில் தினமும் இரண்டு மணி நேரம் நெல்லையில் உள்ள கல்லூரி வாயில்களில் மாணவ, மாணவிகளின் காலணிகளைச் சுத்தம்செய்து நிதி திரட்டுகிறேன். கடந்த இரண்டு தினங்களாக கல்லூரிகளில் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு நிதி திரட்டியிருக்கிறேன். வரும் 26-ம் தேதிவரை, பாலிஷ் போட்டுக் கிடைக்கும் நிதியை டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று அளித்துவிட்டு, அங்கு மீட்புப்பணிகளைச் செய்யவும் திட்டமிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கு நான் யாரிடமும் இதுவரை நன்கொடை கேட்டதில்லை. பிறருக்கு உதவி செய்வதற்காகப் பணம் வசூல் செய்வதை விடவும் நாமே ஏதாவது செய்து, அதில் கிடைக்கும் பணத்தை அனுப்பலாம்தானே. நான் அனுப்புவது சொற்பத் தொகையாக இருக்கலாம். ஆனால், அதன்மூலம் ஒரு நபருக்கு ஒருவேளை உணவு கிடைத்தால்கூட எனக்கு திருப்திதான்’’ என்றார், மனநிறைவுடன்.

பாப்புராஜ் மட்டுமல்ல, பிறருக்கு உதவும் மனம் கொண்ட அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்தாம்.